வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவிக்க முயன்ற தாயும், பச்சிளங்குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தில் வசிப்பவர் விஜயவர்மன். இவருக்கும் அழகம்மாள் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கருவுற்ற அழகம்மாள், கடந்த 17-06-2020ம் தேதி பிறப்புச் சான்றிதழுக்காக சுகாதாரத்துறையில் தான் கருவுற்று இருப்பதாக பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறையினர் மாதந்தோறும் மேற்கொள்ளவேண்டிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக அழகம்மாள் பலமுறை நேரில் வந்து பரிசோதித்துக் கொள்ளுமாறு அழைத்துள்ளனர்.
விஜயவர்மன் அக்குபஞ்சர் சிகிச்சை முறையை மேற்கொண்டு வருவதால், வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என குடும்பத்தாரிடம் தெரிவித்ததன் பேரில் பி.எஸ்சி நர்சிங் படித்துள்ள அழகம்மாளும் அதற்கு சம்மதம் தெரிவித்து மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அழகம்மாள் சிகிச்சைக்கு வர மறுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், `நாங்கள் இயற்கை முறையில் பிரசவித்து கொள்கிறோம். அதில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அரசு மருத்துவர்களோ அல்லது சுகாதார துறையினர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல’ என எழுதிக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென அழகம்மாளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சுகாதாரத்துறையினர் நேரில் சென்று பார்த்தபோது, குழந்தையை பாதியளவு பிரசவித்த அழகம்மாள் ரத்த போக்கு அதிகமானதை நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அழகம்மாளை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து, அழகம்மாளுக்கு 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவினரால் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது, வீட்டிலேயே செய்யப்பட்ட மருத்துவத்தால் ஏற்பட்ட விபரீதம் காரணமாக குழந்தையின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றமில்லாமல் கவலைக்கிடமான நிலையில் அழகம்மாள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
source https://www.vikatan.com/social-affairs/crime/mother-and-her-kid-died-during-baby-delivery-in-home-itself-in-perambalur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக