Ad

திங்கள், 11 ஜனவரி, 2021

அரியலூர்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்த சோழகங்கம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி!

கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழமன்னன் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்பு கொண்ட பொன்னேரி ஏரி சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளவு நீருடன் நிறைந்திருப்பது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொன்னேரி என அழைக்கப்படுகின்ற சோழகங்கம் ஏரி

சோழ மன்னர்கள் நீரின் அவசியத்தை உணர்ந்து நீர் மேலாண்மைக்கு முக்கியதுவம் கொடுத்து ஆட்சி புரிந்துள்ளனர் என்பதற்கு பல உதாரணங்கள் வரலாற்று குறிப்புகளில் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் கரிகாலசோழனால் கட்டப்பட்ட கல்லணை வழியாகப் பாய்கின்ற நீரினாலேயே டெல்டா மாவட்டங்கள் உயிர்ப்புடன் இருந்து வருகின்றன.

பேரரசன் ராஜராஜசோழனும் தஞ்சையின் நகர் பகுதியில் பல்வேறு குளங்களை அமைத்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன. இதேபோல் சோழமன்னன் ராஜேந்திரசோழன் கங்கையில் போரிட்டு வெற்றி பெற்றதன் நினைவாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் என்ற ஏரியை உருவாக்கினார்.

ஏரி

குடிநீர், விவசாயம் போன்ற தேவைக்காக சோழகங்கம் ஏரியை உருவாக்கி நீரைச் சேமித்து அத்தியாவசிய தேவைகளுக்குப் பயன்படுத்தியதுடன் இந்த ஏரியின் வழியாக மற்ற ஏரிகள் மற்றும் குட்டைகள் நிரம்புகின்ற வகையில் ஏரியை உருவாக்கியது தான் இதன் தனி சிறப்புகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

கிட்டதட்ட 4,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வந்த நிலையில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 1,200 ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறமுடிகிறது. இந்நிலையில் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு சோழகங்கம் ஏரி அதன் முழு கொள்ளவான 114 அடி வரை நிரம்பியுள்ளது. ஏரியின் கரைகளைத் தொட்டபடி நீர் ததும்புவதால் தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு பின் புனரமைக்கப்பட்ட மதகு

இதுகுறித்து, கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தின் தலைவர் கோமகன் கூறுகையில், "சோழ மன்னர்கள் போரில் வெற்றி பெற்றால் அதன் நினைவாக நினைவு தூண் அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். ராஜேந்திர சோழன் கங்கையில் போரிட்டு வெற்றி பெற்றதன் நினைவாக நீரினை அடிப்படையாகக் கொண்ட நினைவு சின்னத்தை நிறுவ எண்ணி அதன் அடிப்படையில் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் என்ற ஏரியை உருவாக்கினார்.

16 மைல் நிலபரப்பு சுற்றளவு கொண்ட இந்த ஏரியில் நிறையும் நீர், குடிநீர் தேவை, விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. சிறப்புமிக்க சோழகங்கம் ஏரி தற்போது பொன்னேரி என எல்லோராலும் அழைக்கப்படுகின்றது. ராஜேந்திரன் சோழன் அரண்மனை அமைந்திருந்த பகுதியான மாளிகைமேடு என அழைக்கப்படுகிற இடத்தில் உள்ள திருச்சுற்று மாளிகை மற்றும் அரண்மனை வளாகங்கள் மற்றும் அரண்மை பகுதியிலிருந்து மூன்று குட்டைகளை நிரப்பும் வகையில் நீர் வழிப்பாதை அமைத்து ஏரி உருவாக்கப்பட்டிருந்தது.

கோமகன்

பின்னர் பெரிய வாய்க்கால் வழியாக தண்ணீர் வீராணம் ஏரிக்குச் செல்கிறது. அதேபோல் வடபுறத்தின் வழியாக வெளியேறும் உபரி நீர் பாண்டியன் ஏரியைச் சென்றடைகிறது. ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட நீர் வேளியேறும் மதகு இன்றைக்கும் காட்சி பொருளாகவே உள்ளது.

சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சுமார் 15 வருடங்களுக்கு பிறகு பொன்னேரி நிரம்பியிருக்கிறது. இதனால் அனைவரது மனமும் குளிர்ந்திருக்கிறது. இதற்கு முன் 2006-ம் ஆண்டு ஏரி ஓரளவிற்கு நிரம்பியது. தற்போது அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது குறிப்பிடதக்கது.

பொன்னேரி ஆக்கிரமிப்புகளால் சூறையாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மேல் பகுதி முழுவதும் தூர்ந்து போய் விட்டது. கடல் போல் இருந்த ஏரி கொஞ்ச கொஞ்சமாகச் சுருங்கி வருகிறது. முக்கியமாக ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்தாலும் குறித்த நேரத்தில் ஏரிக்கு தண்ணீர் வருவதற்கான வழியில்லை.

1928-ம் ஆண்டு சர்வேயின்படி ஏரியின் முழுமையான பகுதியைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். முழுமையாக தூர் வாரப்பட வேண்டும். கரைகளைச் சீரமைத்து வலுப்படுத்துவதுடன் புராதன சின்னமாகக் காக்கப்பட வேண்டும். சேறு, சகதியால் ஏரி தூர்ந்து போகாமல் இருக்கும் வகையில் சேறும் சகதியும் நீரோடு செல்லும் வகையில் அந்த காலத்திலேயே ஏரி அமைக்கப்பட்டிருப்பது இன்றைக்கும் வியக்கதக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நீர் நிரம்பியுள்ள ஏரி

இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஏரி பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகள் ஆகிவற்றால் தன் பொழிவை இழந்து வருகிறது. வரலாற்று சிறப்பு கொண்ட பொன்னேரியை முறையாக தூர்வாரி, பாதுகாத்தால் மழை காலங்களில் விரைவாக நீர் நிரம்பும். சுமார் 4,000 ஏக்கர் நிலம் வரை பாசன வசதி பெறும்.

மேலும் ஏரி, குட்டைகள் என பல நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்லும். சோழகங்கம் ஏரி நிறைந்தால் சுற்றுவட்டார பகுதி முழுவதுக்குமான தண்ணீர் தேவை பூர்த்தியாகும். ஏரி நிரம்பியதையே இப்பகுதியினர் கொண்டாடி வரும் நிலையில் ஏரியை புனரமைத்து பாதுகாத்தால் மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அத்துடன் மண்ணும் மக்களும் விவசாய நிலங்களும் பயன்பெறும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/ariyalur-farmers-happy-due-to-cholagangam-lake-filled-after-15-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக