கொரோனா எனும் கொள்ளை நோயின் தாக்கம் சற்றே தணிந்திருந்த போதிலும், பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து புதிதாக உருமாற்றமாகி வந்திருக்கும் கொரோனா வைரஸ்களால் அடுத்த அலை வருமோ எனும் அச்சம் சூழ்ந்துள்ளது. இந்தக் குழப்பத்துக்கிடையில் வந்திருக்கும் புதிய பீதி H5N1 வைரஸ் தொற்று. இது ஏவியன் ப்ளூ, இன்ப்ளூயன்சா ஏ, பறவைக் காய்ச்சல் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பறவைக் காய்ச்சல் ஆங்காங்கே பரவி பாதிப்பை ஏற்படுவதைக் கேள்விப்பட்டிருப்போம்.
தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசப் பகுதிகளில் வாத்துகளிடையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசப் பகுதியில் இடம்பெயர்ந்து பறந்து வந்த சுமார் 1,800 பறவைகளிடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.
கழிவுகளால் பரவும்!
இந்த வைரஸ் பொதுவாக கோழி மற்றும் டர்க்கி கோழி பறவை இனங்களில் காணப்படும். இந்த இனத்தைச் சேர்ந்த சில வைரஸ்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றுவிடும். ஆனால் சில வைரஸ் தீவிர பாதிப்பை பறவையினங்களுக்கு ஏற்படுத்தி, உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.
இவ்வகை கொடிய வைரஸ்கள் பொதுவாகக் காட்டுப்பறவைகள் புலம்பெயர்ந்து வரும் நேரத்தில் சீதோஷ்ண மாறுபாடுகளாலும், கண்டம் விட்டுக் கண்டம் வரும் புவி சார்ந்த மாற்றங்களாலும் தொற்றை ஏற்படுத்தும். அப்படி ஏற்படும் தொற்று பெரும்பாலும் காட்டுப் பறவைகளை பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால், அந்தப் பறவைகள் இடம்பெயர்ந்து வரும்போது அவை கடந்து வரும் வழிகளில் அவை வெளியேற்றும் கழிவுகள் மூலம் வைரஸும் வெளியேற்றப்படும். உடனே தொற்ற வல்ல இந்த வைரஸ்கள் காற்றிலும், நீரிலும், மண்ணிலும் கலக்கின்றன.
அதன் மூலம் அப்பகுதியில் வாழும் பறவைகளுக்கும் சிறிய வகை விலங்கினங்களுக்கும் பரவ வாய்ப்புண்டு. வேறுபட்ட இனங்களுக்குள் இதுபோன்ற வைரஸின் செயல்பாடுகள் வெகுவாக மாறுபடும்.
தற்போது கொரோனாவின் தன்மை மாறியிருப்பது போல Segmented genome எனும் வகுக்கப்பட்ட மரபணுவைக் கொண்ட இந்த H5N1 வைரஸ், கொரோனாவைவிட அதிகமாக உருமாற்றம் அடையக்கூடியது. ஆனால், கொரோனா போல மனிதனிடத்திலிருந்து மனிதனுக்குப் பரவாது. இந்தியாவில் 2006 முதலே நாம் கேள்விப்பட்டு வரும் இந்தப் பறவைக் காய்ச்சல் இதுவரை 25 முறை கோழிகளையும், இன்ன பிற பறவை இனங்களையும் தாக்கியிருக்கிறது. பறவைகளின் செரிமான மண்டலத்தை மட்டும் தாக்கும் இந்த ஏவியன் வைரஸ், மனிதனுக்குத் தொற்றினால் மிக மோசமான சுவாச மண்டல பாதிப்பை உருவாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம் என்று அறியப்படுகிறது.
இறைச்சி, முட்டை சாப்பிடலாமா?
இந்த வகை தொற்று அந்தப் பறவை இனத்தின் தசைகளில்கூட தம் வைரஸைப் பெருக்கி வியாபித்து காணப்படலாம். கூட்டமாக வளர்க்கப்படும் பறவைகளில் ஒரு பறவைக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டாலும் அப்பறவையின் உமிழ்நீர், இறக்கை மற்றும் அவை வெளியேற்றும் கழிவுகள் வழியாக வைரஸ் வெளியேற்றப்பட்டு அடுத்தடுத்த பறவைகளுக்கும் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். இந்த வகை தொற்று வேகமாகப் பரவுவதால், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சிகிச்சையளித்து குணப்படுத்துவது சாத்தியமில்லாமல் போகிறது.
எனவேதான் பறவைக் காய்ச்சல் பரவும் காலங்களில் தொற்று ஏற்பட்ட பறவைகளையும் அவற்றுடன் சேர்ந்து வாழும் பிற பறவைகளையும் கொன்றுவிடுகின்றனர். ஆனால், சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டையை தாராளமாக சாப்பிடலாம். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அரசும் இதையேதான் வலியுறுத்தி வருகிறது.
சுற்றுச்சூழல் மாசு, இயற்கைச் சீற்றங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பின்மை, காடு அழிப்பு, மனித இன வாழ்விட விஸ்தரிப்பு மற்றும் இவற்றால் நடக்கும் பூவுலக மாற்றங்கள்தான் இதுபோன்ற அடுத்தடுத்த Zoonotic diseases எனப்படும் `மாற்று இன தாவு நோய்கள்' அதிகமாக ஏற்படுவதற்குக் காரணமாகிறது என்பதே கசப்பான உண்மை!
இயற்கையை எந்தளவு நமது விருப்பத்தின் பெயரில் நாம் மாற்றி அமைக்க நினைக்கிறோமோ, அதே இயற்கையுடைய எதிர்மறை செயல்தான் இந்தத் தாவு நோய்கள். இயற்கையுடன் இணைந்து நம் வாழ்வியலை மாற்றிட முனைவோம். இனியேனும் இதுபோன்ற கொள்ளை நோய்கள் நம் அடுத்த தலைமுறை காணாதிருந்திட எண்ணி இந்த பூவுலகைக் காப்போம்
source https://www.vikatan.com/health/healthy/is-it-safe-to-consume-chicken-and-egg-amid-bird-flu-outbreak
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக