Ad

சனி, 9 ஜனவரி, 2021

தொகுதிப் பங்கீட்டுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்-க்கு அதிகாரம்! அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்

அ.தி.மு.க-வின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள், கட்சியின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வது, கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்-க்கு அதிகாரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துவரும் ஸ்டாலின் மற்றும் தி.மு.க-வினருக்குக் கண்டனம், கொரோனாவுக்கு இலவசத் தடுப்பூசி போடப்படும் என்ற முதல்வர், மத்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி, இலங்கையில் மாகாண சபைகள் முறை ரத்து செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

Also Read: `அ.தி.மு.க உறுப்பினர்’... பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி அஸ்திரம்?

ஜெயலலிதாவுக்கு நினைவிடம், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் அமைப்பு உள்ளிட்டவற்றுக்காகத் தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்தும் அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்

அதேபோல், நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் தமிழகத்தைச் சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் அ.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-general-council-meeting-held-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக