Ad

வியாழன், 14 ஜனவரி, 2021

``ஷூட்டிங் செல்வதுபோல பிரசாரத்துக்குச் செல்கிறார் கமல்!''- செல்லூர் ராஜூ கிண்டல்

தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் கண் கட்ட வைக்கும். ஏற்கெனவே, 'மதுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை போல் மாற்றிக்காட்டுவேன்' என சூளுரைத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அண்மையில் 'வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போல் மாற்றுவேன்' எனக் கூறியிருக்கிறார்.

தேர்தல் பரபரப்பிலிருக்கும், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

செல்லூர் ராஜூ

''மதுரையை சிட்னியாக மாற்றிவிட்டீர்களா...இப்போது வைகையை தேம்ஸ் நதியாக மாற்றக் கிளம்பிவிட்டீர்களே?''

''இப்போது நீங்கள் மதுரையை வந்து பாருங்கள். வைகை நதியின் இரு புறத்திலும் 11 கி.மீ தூரத்துக்கு விரைவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் போக வர என இருவழிப் பாதையாக நல்ல வசதியுடன் சாலைகளும், பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. கூடவே க்ளப் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களோடு மின் விளக்கு வசதிகளும் இன்னும் 6 மாதங்களில், அதாவது தேர்தலுக்குள் 90% பணிகள் செய்து முடிக்கப்பட்டுவிடும்.

எனவே, வைகை நதியை மாற்றப்போகிறோம் என்ற பேச்செல்லாம் முடிந்து, மாற்றிக் காட்டியேவிட்டோம். அடுத்து 24 மணிநேரமும் மதுரை முழுக்க வீடுகளில் குடிதண்ணீர் கிடைக்கும் வகையில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 40 வருடங்களுக்கு மதுரையில் தண்ணீர் பிரச்னையே இருக்காது. அந்தளவுக்கு மதுரையில் பிறந்து வளர்ந்த ஒரு சாமான்யனான செல்லூர்ராஜூ முதல்வரிடம் எடுத்துச்சொல்லி செய்திருக்கிறேன்.''

இ.பி.எஸ் - அமித் ஷா - ஓ.பி.எஸ்

''தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியோடு ஒப்பிடும்போது, அ.தி.மு.க - பா.ஜ.க இடையிலான கூட்டணியில் தொடர்ந்து முரண்பாடுகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே?''

''எந்த காங்கிரஸ் கட்சியை அழிக்கவேண்டும் என்று அண்ணாவும் பெரியாரும் செயல்பட்டார்களோ, அந்தக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருப்பவர்கள் தி.மு.க-வினர்தான். நாங்கள் அப்படியல்ல.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சிப் பொறுப்பு வகித்தபோது அமைச்சராக இருந்தவர் தி.மு.க-வைச் சேர்ந்த ஆ.ராசா. கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில்தான் 2ஜி திட்டத்தில் லட்சம் கோடியைத் தாண்டியும் ஊழல் நடைபெற்றிருக்கிறது என சொல்லி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழக்கு தொடுத்து, ஆ.ராசா, கனிமொழி என இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால், இப்போது '2ஜி வழக்கு ஒரு பொய் வழக்கு' என்று தொடர்ந்து பேசிவருகிறார் ஆ.ராசா. அப்படியென்றால், இப்படி ஒரு பொய்வழக்கைத் தொடுத்து சிறையிலடைத்த காங்கிரஸ் கட்சியோடு ஏன் தொடர்ந்து தி.மு.க கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறது?''

ஸ்டாலின், ராகுல்

''முதல்வர் வேட்பாளர் விஷயத்தில், கூட்டணிக் கட்சிகளிடையே மட்டுமல்லாமல் அ.தி.மு.க தலைவர்களிடத்திலும்கூட முரண்பட்ட கருத்து இருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றனவே?''

''அப்படியெல்லாம் எதுவும் இல்லை... அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் எங்களுடைய முதல்வர் வேட்பாளர் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். தேர்தல் பரப்புரையை நாங்களும் ஆரம்பித்துவிட்டோம். இனி, எங்கள் முதல் அமைச்சர் வேட்பாளரை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ... அவர்கள்தான் அ.தி.மு.க தலைமையிலான எங்கள் கூட்டணியில் தொடரமுடியும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.''

''அ.தி.மு.க-வை உடைக்க அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களே முயற்சி செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே?''

''இதுவே அ.தி.மு.க-வின் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது. ஏனெனில், ஆரம்பத்தில் 'இந்த ஆட்சியே இருக்காது 3 மாதத்தில் கவிழ்ந்துவிடும். கட்சியும் சிதறிப்போகும்' என்றெல்லாம் பேசிவந்தார்கள். கடைசியாக 'முதல்வர் வேட்பாளரை இவர்களால் அறிவிக்க முடியாது' என்று சொன்னார்கள். ஆனால், எதிரிகளது கணிப்பெல்லாம் பொய்த்துப்போனது. எனவே, இப்போது அ.தி.மு.க தலைவர்களே கட்சியை உடைக்கப்போகிறார்கள் என்று கதை சொல்லிவருகிறார்கள்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

எதிரிக்குக்கூட நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிற புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. தனக்காக வாழாமல், தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்த புரட்சித் தலைவி வளர்த்தெடுத்த கட்சி அ.தி.மு.க. இவ்வளவு சிறப்பு பெற்ற இந்தக் கட்சியை யாராலும் உடைக்க முடியாது என்பது மட்டுமல்ல... அசைக்கக்கூட முடியாது!''

Also Read: சென்னை: அமித் ஷா பி.ஏ-வுக்கு போன் செய்தால்..! -ஓசி சிக்கன் ஃப்ரைடு ரைஸ் கேட்டு பா.ஜ.க பிரமுகர் ரகளை

''சசிகலா, விரைவில் சிறையிலிருந்து வெளியே வரவிருக்கிறார்... அவரது ஆதரவாளரான நீங்கள் அப்போது எந்தப் பக்கம் நிற்கப்போகிறீர்கள்?''

''சசிகலாவின் செயல்பாடுகள் மற்றும் தனித்திறமை என்பது என் மனதில் இருக்கிறது. ஆனாலும் 'கொள்கையா... தனி மனிதரா' என்ற கேள்வி வந்தால், எனக்குக் கட்சியும் கொள்கையும்தான் பெரிது. அதாவது, தனி மனிதரைக் காட்டிலும் அ.தி.மு.க என்ற கட்சிதான் எங்களுக்கு முக்கியம். ஏனெனில், மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற பொதுநோக்கம்தான் எங்களுக்கு முதன்மையானது.''

கமல்ஹாசன்

''இன்றைய அ.தி.மு.க தலைவர்கள் எம்.ஜி.ஆரை மறந்துவிட்டார்கள் என்று குறைபட்டுக்கொள்கிறாரே கமல்ஹாசன்?''

''வாரத்தில் 3 நாள் பரப்புரை, மீதி 4 நாள் பிக்பாஸ் ஷூட்டிங்... ஆக, தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதையே, ஷூட்டிங் செல்வதுபோல்தான் நினைக்கிறார் கமல்ஹாசன். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மாவட்டம்தோறும் பிரமாண்டமாக நடத்தி, மக்களுக்கான உதவிகளை செய்தது அ.தி.மு.க அரசு. எம்.ஜி.ஆரின் புகழ் பாடுவதோடு நின்றுவிடாமல், அவர் உருவாக்கிய கட்சியை வலுப்படுத்துகிற பணியையும் செம்மையாகச் செய்துவருகிறோம். இன்றைக்கு அரசியலுக்குள் கால் வைத்திருக்கும் கமல்ஹாசன், 'எம்.ஜி.ஆர் புகழை அழிக்கிறார்கள்' என்று எங்களைப் பற்றி குறை சொல்கிறாரே, எம்.ஜி.ஆரைப் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா?''

Also Read: பெங்களூரு:`விரைவில் கவர்னர் பதவி!’ - ஓய்வுபெற்ற நீதிபதியிடம் மோசடி; போலி ஜோதிடர் கைது

''பொங்கல் பரிசு பையில்கூட, எம்.ஜி.ஆர் உருவப்படம் இடம்பெறவில்லையே?''

''பொதுவாக அரசு விழாவில், இதற்கு முன்பாக இருந்த முதல்வரது படத்தை மட்டும்தான் இடம்பெறச் செய்வார்கள். அந்தவகையில், இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதா படத்தையும் பொங்கல் பரிசுப் பையில் பிரிண்ட் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்புவகித்த காலங்களில், அவருக்கு முன்பு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரது புகைப்படம் இடம்பெற்றிருக்கும். இதுதான் நடைமுறை!''

கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின்

''கருணாநிதியைப்போல், எதிர்க்கட்சிகளை வளரவிடாமல் பார்த்துக்கொள்ளும் திறமையானவர் மு.க.அழகிரி என்று பாராட்டுகிறீர்களே... மு.க.ஸ்டாலினை வெறுப்பேற்றுவதாக நினைத்துக்கொண்டு சேம்சைடு கோல் அடிக்கிறீர்களே?''

''சேம்சைடு கோலெல்லாம் இல்லை. கட்சி ரீதியாக எந்தப் பதவியும் இல்லாமல், கருணாநிதியின் மகன் என்ற அந்தஸ்து - அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மு.க.அழகிரி எந்தளவு செயல்பட்டார் என்ற அடிப்படையிலேயே நான் அப்படி பேசியிருந்தேன். மேலும் ஸ்டாலினும் கருணாநிதியின் மகன்தான் என்றாலும்கூட அவரிடம் இந்தத் திறமை இல்லையே என்ற வித்தியாசத்தையும் இதன் மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/sellur-raju-interview-on-various-issues-and-2021-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக