Ad

வியாழன், 14 ஜனவரி, 2021

ஆபாச கேள்விகள்... எல்லை மீறும் யூடியூப் சேனல்கள்... யார் பொறுப்பு?

`மக்களிடம் கருத்து கேட்கிறோம்' என்ற பெயரில் ஆபாச அத்துமீறலில் ஈடுபடும் சில யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது `சென்னை டாக்ஸ்’ யூ-டியூப் சேனல் விவகாரம். தங்கள் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைத்ததாக ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் `சென்னை டாக்ஸ்' யூடியூப் சேனலின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் போக்குகள், சமூகப் பிரச்னைகள், பெண் உரிமைகள் என பொதுவெளியில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், எளிதில் அதிக வியூஸ் பெறவேண்டும் என்ற வெறியில் சில யூடியூப் சேனல்கள் வக்கிரமாகச் செயல்பட்டு வருகின்றன. காமத்தையும், அந்தரங்க விஷயங்களையும் மையப்படுத்தி தவறான உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டு, அதற்கு மக்கள் சொல்லும் கருத்துகளில் எந்த இடத்தில் ஆபாசமான சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருக்கின்றனவோ அந்த இடத்தை மட்டும் வெட்டி ஒட்டி வெளியிடுகின்றன. அதன் அடுத்தகட்டமாக பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைக்கும் கொடுமையும் நடக்கிறது என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

Youtube

சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் `2020 எப்படி போனது?’ என்ற டாபிக்கில் கருத்து கேட்டு தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தனர் `சென்னை டாக்ஸ்’ குழுவினர். அந்த வீடியோவில் ஒரு பெண் மிகவும் ஆபாசமாகப் பேசியிருந்ததால் பார்வையாளர்கள் அந்தப் பெண்ணை ஏகத்துக்கும் தாக்கி கமென்ட் செய்தனர். இந்த நிலையில்தான், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் ஒரு பகீர் புகாரினைக் கொடுத்தார். 1500 ரூபாய் கொடுத்து தன்னை அப்படி பேசச் சொன்னதாகவும்... கமென்ட் செக்‌ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் பேசியதாகவும் கூறியிருந்த அந்தப் பெண்...

``என்னிடம் சொன்னபடி அவர்கள் கமென்ட் செக்‌ஷனை ஆஃப் செய்யவில்லை. ஆகையால், நான் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளேன். நான் பேசிய பல விஷயங்களை கட் செய்துவிட்டு ஆபாசமான வார்த்தைகளை மட்டுமே வெளியிட்டுள்ளனர். என்னைப் போல நிறைய பெண்களிடம் இப்படிச் செய்துள்ளனர்” எனப் புகார் தெரிவிக்க `சென்னை டாக்ஸ்' யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் மற்றும் தொகுப்பாளர் ஆசான் பாட்சா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய மூவர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டம் மற்றும் பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஐயன் கார்த்திகேயன்

Also Read: சென்னை: யூடியூப் சேனலுக்காக பெண்களிடம் ஆபாசமாகப் பேட்டி- உரிமையாளர் உட்பட 3 பேர் கைது!

சில யூடியூப் சேனல்கள் ஏன் எல்லை மீறுகின்றன என்பது குறித்து `யூடர்ன்’ என்ற யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்திவரும் பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயனிடம் பேசினோம்.

``முதலில் இது மாதிரியான வீடியோக்கள் ஏன் அதிகளவில் உருவாக்கப்படுகின்றன... அவை ஏன் அதிகளவில் பார்க்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலை நாடுகளைப்போல இங்கு பாலியல் சுதந்திரம் கிடையாது; நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சொல்லப்போனால், இங்கு உச்சபட்ச பாலியல் வறட்சி இருக்கிறது. அதனால்தான் ஒரு நடிகை யாருடன் அதிக நேரம் பேசுகிறார் என்ற தகவலைக்கூட தீவிர ஆர்வத்துடன் படிக்கின்றனர். இப்படி பாலியல் வறட்சி இருக்கும் மக்களிடத்தில் ஆபாசமாக பாலுணர்வுகளைத் தூண்டும் வகையில் `க்ளிக் பைட்'களை வைத்தால், அது வைரல் ஆகும்... அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுகிய புத்தியில்தான் இதுபோன்ற சேனல்கள் உருவாகின்றன.

ஆண், பெண் உணர்வு... அவர்களுக்கிடையில் இருக்கிற உறவு குறித்த உரையாடல்கள் நம் நாட்டில் மிகவும் குறைவு. உறவு முறையை எப்படி அணுகுவது என்பது பேசுபொருளாக இல்லாததுதான் இங்கு பல்வேறு நேரங்களில் பிரச்னையாக இருக்கிறது. அப்படியான சூழலில், அது குறித்த உரையாடல்கள் நிகழ்வதில் எந்தவிதமான தவறோ கலாசார சீரழிவோ கிடையாது. பாலியல் ரீதியான விஷயங்கள் குறித்த நீண்ட உரையாடலை இங்கு நிகழ்த்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், அது எந்த வகையில், எந்த நோக்கத்தில் என்பதில்தான் இப்போது பிரச்னை.

Youtube

நேர்மையான முறையில் பாலியல் கல்விக்கான முன்னெடுப்பாக அமைந்தால் பிரச்னை இல்லை. ஆனால், இச்சைகளை மட்டுமே மையமாக வைத்து, `ஒரு பெண் எப்படியெல்லாம் பேசுகிறாள், பாருங்கள்’ என்று மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டு பிழைப்பது சரியானது கிடையாது. பேட்டி எடுக்கிறவர்... கருத்து சொல்கிறவர்... அதற்கு கமென்ட் போடுகிறவர் அனைவரின் நோக்கமும் சரியானதாக இருக்க வேண்டும். பணம் என்ற விஷயத்தை பிரதானப்படுத்தி கருத்தை அணுகும்போது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.” என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/controversy-over-chennai-talks-youtube-channels-viral-video-and-police-action

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக