பிரிஸ்பேனில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என இருவருமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக விளையாடும்போட்டி இது என்பது தமிழர் திருநாளில் கிடைத்திருக்கும் நற்செய்தி.
டேவிட் வார்னரின் விக்கெட்டை ஆட்டம் தொடங்கியதுமே வீழ்த்தினார் முகமது சிராஜ். அடுத்து மார்கஸ் ஹேரிஸை தனது முதல் பந்தில் வீழ்த்தி போட்டியை வெற்றிகரமாகத் தொடங்கினார் ஷர்துல் தாக்கூர். ஆனால், இதன்பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித்தும், மார்னஸ் லாபுசேனும் கூட்டணி போட்டனர். அவ்வளவு எளிதில் வீழ்த்தமுடியாத இந்தக்கூட்டணி இன்றும் 50 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு அச்சுறுத்திக்கொண்டிருந்தது. அப்போதுதான் சுந்தரை உள்ளே இறக்கினார் அஜிங்கியா ரஹானே.
முதல் மூன்று ஓவர்களில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்த சுந்தருக்கு ஒரு சிறு ஓய்வு கொடுத்துவிட்டு, மீண்டும் 35-வது ஓவரில் கொண்டுவந்தார் ரஹானே. மீண்டும் வந்த முதல் பந்திலேயே ஸ்மித்தின் விக்கெட். கால்களை நோக்கிவந்தப் பந்தை ஸ்மித் சரியாகக் கணிக்காமல் பேட்டால் தொட பந்து எகிறிப்போய் ஷார்ட் மிட் விக்கெட்டில் கேட்சானது.
21 வயதேயான வாஷிங்டன் சுந்தரின் முதல் விக்கெட்டே டான் பிராட்மேனோடு மோதிக்கொண்டிருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் என்பதால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். அதோடு தொடர்ந்து வாஷிங்டனின் 23 பந்துகளை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் டாட் பாலாகவே எதிர்கொண்டனர். ஒரு ரன் கூட அடிக்கவில்லை.
தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 100 ரன்களுடன் 3 விக்கெட்டை இழந்து ஆடிக்கொண்டிருக்கிறது.
source https://sports.vikatan.com/cricket/washington-sundars-maiden-test-wicket-is-steve-smith
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக