Ad

வியாழன், 14 ஜனவரி, 2021

அமெரிக்க வரலாற்றில்... - இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட முதல் அதிபர் ட்ரம்ப்!

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தலில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருந்த நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டிவந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதற்றமான அரசியல் சூழலை உருவாக்க, ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தொடர் தாக்குதல்கள் நடத்திவந்தனர்.

ட்ரம்பின் ஆதரவாளர்கள், பாதுகாப்பை மீறி அமெரிக்க கேபிடல் (US Capitol) கட்டடத்துக்குள் நுழைந்து அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணிச் சான்றளிக்கும் பணியை மேற்கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தினர். அதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, வரும், 20-ம் தேதி அவர் பதவி ஏற்கவுள்ளார்.

ஜோ பைடனின் பதவியேற்புக்கு முன்பாக, ட்ரம்பின் ஆதரவாளர்கள், ஆயுதங்களுடன் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தலைநகர் வாஷிங்டனில் அவசரநிலையை அறிவித்துள்ளார் டிரம்ப். அவசர நிலை வருகிற 24-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடனின் பதவியேற்புக்கு முன்பு, ட்ரம்ப் வன்முறைகளை தூண்டும் முயற்சிகளில் ஈடுபட இருப்பதால் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வர முயற்சித்து, அதிபரை பதவியிலிருந்து விலக்க, துணை அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் 25-வது சட்ட திருத்தத்தை கொண்டு வர, ஜனநாயக கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த துணை அதிபர் மைக் பென்ஸ், "தற்போதைய சூழ்நிலையில், ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது என்பது நாட்டின் நலனிற்குச் சரியாக இருக்காது" என்றார்.

இந்நிலையில், அமெரிக்க டெக்சாஸின் (Texas) அலமோவில் (Alamo) பேசிய ட்ரம்ப், ​ "என்னை பதவியில் இருந்து நீக்குவதற்கான 25 வது சட்ட திருத்தத்தை பற்றி விவாதிப்பதால் எனக்கு ஒரு ஆபத்தும் இல்லை, ஆனால் ஜோ பைடன் மற்றும் அவரது நிர்வாகத்தை இது பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், "பிரதிநிதிகள் சபையில் சட்ட திருத்தம் கொன்டு வர முயற்சிக்கும் ஜனநாயகக் கட்சியினர், என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புரளி. அமெரிக்க வரலாற்றில் செய்யப்படும் மிகப் பெரிய சூழ்ச்சி” எனக் கூறியவர், ஜோ பைடன் நிர்வாகத்தினர் செய்வது கோபத்தையும், பிரிவினையையும், வலியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில், இது அமெரிக்காவிற்கு மிகவும் ஆபத்தானது" என்றார்.

ட்ரம்ப்

இதைத்தொடர்ந்து ட்ரம்பை பதவி நீக்கம் செய்யும் மசோதா இரண்டாவது முறையாக பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. இதில் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்கு ஆதரவாக 223 எம்.பி.களும் எதிராக 205 எம்.பி.களும் வாக்களித்தனர்.

வரும் காலங்களில் ட்ரம்பை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையிலான மசோதாவையும் தாக்கல் செய்ய அமெரிக்க எம்.பி.கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு 51 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதும் என்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் வன்முறையை தடுக்கும் வகையில், ட்ரம்ப் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 70 ஆயிரம் பேரின் ட்வீட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. ட்ரம்பின் முகநூல் பக்கத்தை "காலவரையின்றி" முடக்கியது பேஸ்புக் நிறுவனம். டிரம்பின் யூடியூப் (Youtube) சேனலில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ வன்முறையைத் தூண்டும் (policy violation) வகையில் உள்ளது என்ற யூடியூப் நிறுவனம், அந்த வீடியோவை நீக்கியதோடு, அந்த சேனலையும் யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் முதல் அதிபர் என்ற பெயரை ட்ரம்ப் பெற்றுள்ளார். தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் ட்ரம்ப் மீது விசாரணை நடைபெறும். செனட்டில் ட்ரம்ப் மீதான குற்றத்தை உறுதி செய்ய, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. குறைந்தது 17 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், செனட் சபையில் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்தால், அவர் முழுமையாக பதவிநீக்கம் செய்யப்படுவார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/donald-trump-becomes-first-us-president-to-be-impeached-twice

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக