மனித நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை, மனிதனை மனிதன் அழிக்கும் காட்டுமிராண்டித்தனம் இன்னும் பல வழிகளில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதில் ஒரு சில உச்சக்கட்ட நிகழ்வுகளை, வரலாறு என்றும் வலியோடு நினைவு கூறும். அதில் முக்கியமானது Auschwitz படுகொலைகள்.
ஓர் இனத்தையே அழிக்கும் நோக்கில், கிட்டத்தட்ட 60 லட்சம் மக்களை குப்பையைக் கூட்டுவது போல ஒதுக்கி, ஓர் இடத்தில் அடைத்து வைத்து, துடிக்கத் துடிக்க கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்ட Auschwitz படுகொலைகள் ஏற்படுத்திய அதிர்வலை, இன்று வரை யூதர்கள் மத்தியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பியர்கள் மனங்களிலும் ஒரு பயம் கலந்த ரணமாய் பதிந்திருக்கிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 60 லட்சம் யூதர்கள் நாஜிக்களால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு எழுப்பிய கேள்விகளுக்கு இன்றுவரை விடை காணப்படவேயில்லை.
1933 முதல் 1945-க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தப் படுகொலைகள் ஜெர்மனியின் நாஜி ராணுவத்தால் நடத்தப்பட்டது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இந்நிகழ்வு, வரலாற்றின் ஒரு கரும்புள்ளியாக, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 27-ம் தேதி, UNESCO அமைப்பால் நினைவுகூரப்படுகிறது.
ஆஷ்விட்ஸ் விடுதலையின் 76வது ஆண்டுவிழா இந்த ஆண்டு corona பரவல் காரணமாக ஆன்லைனில் நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. “ஆஷ்விட்சில் உள்ள குழந்தைகளின் தலைவிதி” என்பது இவ்வாண்டு கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த நிகழ்வுகளை www.auschwitz.org மற்றும் 76.auschwitz.org என்ற வலைதளங்களிலும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணியிலிருந்து நேரடியாகக் காணலாம்.
Holocaust என்றால் என்ன?!
கிரேக்க வரலாற்றில் பலி பீடத்தில் மனித உயிர்கள் எரிக்கப்பட்டு பலி கொடுக்கப்பட்ட ஒரு நிகழ்வைக் குறிக்கும் சொல்தான் Holocaust. கிரேக்க வார்த்தைகளான holos (முழு) மற்றும் “kaustos” (எரிக்கப்பட்டது) ஆகியவற்றிலிருந்து Holocaust எனும் சொல் உருவானது. ஆனால் 1945-ம் ஆண்டு முதல், இவ்வார்த்தை லட்சக்கணக்கான அப்பாவி யூதர்களின் அவலக்குரலின் எதிரொலியாக அடையாளம் மாறியது.
ஹிட்லர்!
வியன்னாவில் வாழ்ந்த காலம் தொட்டு anti semitic எனப்படும் யூத எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டிருந்த ஹிட்லர், முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்களே காரணம் என நம்பினார். அதன்பின் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்து அதன் தலைவரானபோது, யூத விரோதப் பிரசாரம் வாக்காளர்கள் மத்தியில் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதை கவனித்து, அதிகாரத்துக்கு வருவதற்கு அதைப் பயன்படுத்திக் கொண்டார். அதிலிருந்து நாஜி ஆட்சியில் யூதர்கள் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளாகத் தொடங்கினார். இதன் உச்சக்கட்டமாக ஹிட்லரின் 'இறுதித் தீர்வு' அதாவது ஹோலோகாஸ்ட் அறிவிக்கப்பட்டது.
இங்கு சிறைபிடிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒரு கதை உள்ளது. மனிதனைக் கொலை செய்யும் தொழிற்சாலையாகக் கட்டப்பட்ட Auschwitz வதை முகாம்களில் மாட்டிக்கொண்ட பல லட்சக்கணக்கான மக்களின் அவல மரணம், நாம் இப்போது வாழும் இந்த வாழ்க்கை எவ்வளவு பெரிய வரம் என்பதைப் புரிய வைக்கும்!
கொலைக்கலத்தில் விழுந்த ஆரம்ப விதை
முதல் வதை முகாம் 1933 மார்ச் மாதம் மூனிச் நகரில் Dachau எனும் இடத்தில் திறக்கப்பட்டு, கம்யூனிஸ்ட்கள் பலர் கைதிகளாக அங்கு அனுப்பப்பட்டனர். செப்டம்பர் 1939-ல், ஜெர்மன் ராணுவம் போலந்தின் மேற்குப் பகுதியை ஆக்கிரமித்த பின் பல்லாயிரக்கணக்கான யூதர்கள், முள்வேலிகளால் சூழப்பட்ட போலந்தில் யூத கொட்டகைகளுக்குள் சிறைபிடிக்கப்பட்டனர்.
1939 தொடங்கி, கிட்டத்தட்ட 2,75,000 ஊனமுற்ற, மனநலம் குன்றியவர்களை Euthanasia Program என அழைக்கப்பட்ட கருணைக் கொலை செய்யும் திட்டம் மூலமாக கொலை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. ஹிட்லரின் தனிப்படை இயக்குநரான Philipp Bouhler மற்றும் மருத்துவர் Karl Brandt தலைமையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.
ஜெர்மானியர்களிடையே மரபணு குறைபாட்டை ஒழிக்கவும், ஊனமுற்றோரால் அரசுக்கு ஏற்படும் செலவினத்தைக் குறைக்கவும் முடியும் என இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் சொல்லபட்டது. ஆகஸ்ட் 18, 1939 அன்று, கிரீஸ் உள்துறை அமைச்சகம் அனைத்து மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களுக்கும் புதிதாகப் பிறக்கும் மற்றும் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே மன அல்லது உடல் ஊனமுற்றவர்கள் பற்றிய அறிக்கையை அளிக்க வேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தது.
அக்டோபர் 1939 முதல், பொது சுகாதார அதிகாரிகள், இவ்வாறான குழந்தைகளை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா முழுவதும் சிறப்பாக அமைக்கப்பட்ட குழந்தை மருத்துவ மையங்களில் அனுமதிக்குமாறு கட்டளையிட்டனர். அங்கே அந்தப் பிஞ்சுகள் அளவுக்கதிகமாக மருந்து கொடுக்கப்பட்டும், பட்டினியால் துடிக்க விடப்பட்டும் கொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து வளர்ந்த ஊனமுற்றவர்களுக்கு என, ஆறு வெவ்வேறு இடங்களில் வதை முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் கார்பன் மோனாக்ஸைடு வாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் வரை தொடர்ந்த இந்த Euthanasia Program அதன் பின் வந்த Holocaust கொலைகளுக்கு ஒரு முன்னோட்டமானது.
Auschwitz எனும் நரகம்
23 பிரதான வதை முகாம்கள். கிட்டத்தட்ட 900 கிளை முகாம்கள். ஆண்கள், பெண்கள், வயோதிகர், குழந்தைகள் எனப் பல லட்சக்கணக்கான மனிதர்களுடன் நிரம்பி வழிந்தன. சிறைக்கைதிகளுக்கு எனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளில், ஐரோப்பாவின் பல இடங்களிலிருந்தும் மக்கள் ஆடு மாடுகளைப்போல் அடைத்துக் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். பலர் வழியிலேயே மூச்சு விட முடியாமல் இறந்தனர். முகாம்களில் கொட்டப்பட்டவர்களில் ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும், குழந்தைகளோடு இருந்த பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். உடலில் வலு இருந்தவர்கள் அடிமைகளாக பல இடங்களுக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு மரணம் சற்றுத் தள்ளிப்போடப்பட்டது. ஏனையோர் உடனடியாகக் கொல்லப்பட்டனர். பிரிந்த குடும்பங்கள் அதன் பின் என்றுமே ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை.
1939-களின் ஆரம்பத்தில் ஜெர்மனியால் கைது செய்யப்பட்ட பல போலந்துக் குடிமக்களுக்கான தடுப்பு மையமாகவே Auschwitz பயன்படுத்தப்பட்டது. அதுவரை மறைமுகமாக இடம்பெற்று வந்த ஹிட்லரின் இறுதித்தீர்வு (Holocaust) எனப்படும் படுகொலைகள் அதிகாரபூர்வ நாஜி கொள்கையாக மாறியவுடன், ஆஷ்விட்ஸ் ஒரு வெளிப்படையான மரண முகாமாக மாற்றப்பட்டது.
இது ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள அனைத்து ஜெர்மன் ஆக்கிரமிப்பு நாடுகளின் மையத்திற்கும் அருகில் அமைந்துள்ளதனாலும், நாஜி முகாம்களின் கைதிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ரயில் பாதைகளின் சுரங்கத்திற்கு அருகிலேயே இருப்பதனாலும், இதுவே பொருத்தமான இடம் என ஹிட்லரால் முடிவு செய்யப்பட்டது.
வெறும் சேற்றால் நிரம்பப்பட்ட சகதி நிலத்தில் அமைக்கப்பட்ட, 52 குதிரைகள் கட்டப்படக்கூடிய அளவு தொழுவங்களில், ஆயிரக்கணக்கான மனிதர்கள் அடைக்கப்பட்டனர். உடைகள் களையப்பட்டு, தலைமுடி வழிக்கப்பட்டு, உடலில் அவர்களுக்கான இலக்கங்கள் குத்தப்பட்ட பின், அவர்கள் தங்கள் பெயர்களை மறந்து வெறும் இலக்கம் பொறிக்கப்பட்ட விலங்குகளாக்கப்பட்டனர்.
பசி, பிணி, அயர்ச்சி, அதிர்ச்சி எனச் சுழற்றி அடிக்கப்பட்ட வேதனையில் மக்கள் நின்ற இடங்களிலேயே திடீர் திடீரெனக் கீழே விழுந்து மாண்டனர். வேலை செய்ய உடலில் தெம்பு இல்லாதவர்கள் உடனடியாக ட்ரக்குகளில் குப்பைகள் போல எடுத்துச் செல்லப்பட்டு உடலில் Zyklon-B எனப்படும் விஷவாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒருவர் தூங்கும் கட்டிலில் ஒன்பது பேர் படுத்திருந்தனர். குளிர் காலங்களில் பென்குவின்களைப் போல ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டே உடல் வெப்பநிலையில் குளிர்காய வேண்டும். இல்லையென்றால் உறை பனியில் விறைத்து செத்து மடிய வேண்டும்.
சுற்றி அமைக்கப்பட்ட மின்சார வேலிகளில் தாமே சென்று விழுந்து பலர் உயிரை மாய்த்தும் கொண்டனர். வரிசையாக நிற்க வைக்கப்பட்டு கழுத்தில் துளைத்த குண்டுகள், இரத்தத்தை உரைய வைக்கும் உறைபனி, கை பட்டாலே மின்சாரம் பாயும் மின் வேலிகள், கைகளால் அல்லப்படும் மலக்குழிகள், வாய்க்குள் செலுத்தப்படும் நச்சு வாயு எனத் திரும்பிய பக்கமெல்லாம் மரணத்தின் மயான பீதி.
பல ஆஷ்விட்ஸ் கைதிகள் மனிதாபிமானமற்ற மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தக் காட்டுமிராண்டித்தனமான ஆராய்ச்சியின் பிரதான சூத்திரதாரியாக, 1943-ம் ஆண்டில் ஆஷ்விட்ஸில் பணியாற்றத் தொடங்கிய, Death of Angel என அழைக்கப்பட்ட ஜெர்மன் மருத்துவரான ஜோசப் மெங்கேல் செயற்பட்டார். கண் நிறத்தை அறியும் முயற்சியில் குழந்தைகளின் புருவங்களுக்குள் சீரம் செலுத்தியும், ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக இறந்துவிடுவார்களா என்பதைத் தீர்மானிக்க இரட்டையர்களின் இதயங்களில் குளோரோஃபார்மை செலுத்தியும் பலவிதமான கொடூரமான சோதனைகளை இவர் மேற்கொண்டார்.
Auschwitz-ன் அழிவு
1944-ல் நாஜி ஜெர்மனியை, நேச நாட்டுப் படைகள் தோற்கடித்தது உறுதியாகத் தெரிந்ததும், ஆஷ்விட்ஸ் தளபதிகள் அங்கு நடந்த கொடூரங்களின் ஆதாரங்களை அழிக்கத் தொடங்கினர். கட்டடங்கள் இடிக்கப்பட்டன, பதிவுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன.
ஜனவரி 1945-ல், சோவியத் இராணுவம் Krakowக்குள் நுழைந்தபோது, ஆஷ்விட்ஸைக் கைவிடுமாறு ஜெர்மானியர்களுக்கு உத்தரவிட்டனர். ஆஷ்விட்ஸ் மரண அணிவகுப்புகள் (Auschwitz death march) என அறியப்பட்ட இந்த நிகழ்வில் 60,000 கைதிகள், நாஜி காவலர்களுடன் சேர்ந்து, முகாமிலிருந்து புறப்பட்டு, 30 மைல் தொலைவில் உள்ள போலந்து நகரங்களான Gliwice மற்றும் Wodzislawலாவுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிகழ்வின் போது எண்ணற்ற கைதிகள் இறந்தனர். இந்த முகாம்களை ஆக்கிரமித்த சோவியத் படைகள், பல சடலங்கள், ஆயிரக்கணக்கான ஆடைகள், ஜோடி காலணிகள் மற்றும் ஏழு டன் மனிதத் தலைமுடி ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
இன்று இந்த இடம் ஒரு நினைவு மன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையின் கொடூரத்தையும், வெகுஜன கொலைத் தளத்தின் கதையையும் நினைவூட்டி நிற்கின்றது இந்த அருங்காட்சியகம்.
எப்போது, எந்த ரூபத்தில் மரணம் தம்மை வந்து சேரும் எனத் தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் அச்சத்துடன் கடந்து, உணவின்றி, உடை இன்றி, பெயர் இன்றி, பிணி வந்து, பிணங்களுக்கருகே உறங்கி மடிந்துபோயின பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள்.
உறவுகள் பிரிக்கப்பட்டு, உணர்வுகளும் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் இலக்கங்களால் அடையாளப்படுத்தப்பட்ட உயிருள்ள உருவங்களாக, தம் வாழ்நாளை நாஜிக்களுக்கு அடிமைகளாகவே சேவை செய்து, கடைசியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு செத்து மடிந்த அந்த அப்பாவி மக்களின் மரண ஓலம் இன்றும் Auschwitz-ன் பாழடைந்த சுவர்களுக்கிடையே இன்னமும் எதிரொலித்துக்கொண்டேயிருக்கிறது!
source https://www.vikatan.com/social-affairs/international/international-day-of-commemoration-in-memory-of-the-victims-of-the-holocaust
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக