Ad

புதன், 27 ஜனவரி, 2021

`இது அபாயகரமானது!’ - கிரிக்கெட் வீரர் அஸ்வின் மீது போலீஸில் புகாரளித்த கறம்பக்குடி இளைஞர்

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. குறிப்பாக, பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது. ஆஸ்திரேலியா தொடரில் தமிழக வீரர்களான அஸ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறந்த பங்களிப்பைக் கொடுத்தனர். 3-வது டெஸ்ட் டிரா ஆவதற்கு அஸ்வின் முக்கியப் பங்கு வகித்தார். அஸ்வின் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார்.

அஸ்வின்

ஆஸ்திரேலியா தொடர் முடிவுற்ற நிலையில், தொடர் குறித்த அனுபவங்களை ஃபீல்டிங் கோச் ராமச்சந்திரன் ஸ்ரீதருடன் இணைந்து, தனது யூடியூப் சேனலில் வீடியோவாகக் கலந்துரையாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவின் இடையில் சில விநாடிகள் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தை ஒன்றைப் பேசியிருப்பதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது. இது பற்றி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், `நான் இந்து ஆதிதிராவிடன் ஆவேன். ஆஸ்திரேலியா வீரர்கள் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின், கோச் ராமச்சந்திரன் ஸ்ரீதர் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வீடியோவைப் பார்த்தேன். வீடியோவில், ராமச்சந்திரன் ஸ்ரீதர், அவன்`பற கேடி’ என்று அஸ்வினிடம் சொல்லிச் சிரிக்கிறார். அதற்கு அஸ்வினோ, `அவன் பற கேடியோ இல்லை... என்னவோ தெரியலை.. அவன் எங்க மூஞ்சியப் பார்த்து சொல்லாம விட்டானோ தெரியலை... ஆனா சூப்பர் அணி’’ என்று அஸ்வின் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் எங்கள் சமூகத்தை இழிவாகப் பேசியிருக்கிறார்கள்.

அஸ்வின், ஸ்ரீதர்

இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனு கொடுத்திருக்கிறார். இதற்கிடையே யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோவில் வரும் சர்ச்சைக்குரிய சில விநாடிகள் தற்போது நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் அஸ்வினுக்கு எதிராகப் பலரும் தங்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

இது குறித்து கறம்பக்குடியைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் பேசினோம். ``இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடும் இவர்கள் பொதுமக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர்கள். இது போன்று ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் அவர்கள் பேசியது, அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்றடையும்.

Also Read: உலகை ஆளும் இந்திய கிரிக்கெட்... இனி கிரிக்கெட்டின் சூப்பர் பவர் ஆஸ்திரேலியா அல்ல! #AUSvIND

இது அபாயகரமானது; வருத்தமளிக்கிறது. ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் தொனியில் பேசியிருக்கிறார்கள். இவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/karambakudi-youth-files-police-complaint-against-cricketer-ashwin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக