Ad

திங்கள், 11 ஜனவரி, 2021

1 கோடி ஃபாலோயர்ஸ்... ஆனால், சோஷியல் மீடியாவில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து இளவரசர்... ஏன்?!

இங்கிலாந்து இளவரசர் ஹேரியும், அவரது மனைவி மேகனும் சமூக வலைதளங்களில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்திருப்பது அவரது ஃபாலோயர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹேரி. இளவரசர் ஹேரியும், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகை மேகனும் பல ஆண்டுகள் காதலித்து பின்னர் 2018-ல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின் கணவன் - மனைவியாகப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஏழை மக்களுக்கு உதவிகள் செய்துவந்தனர்.

இங்கிலாந்து ராணியுடன் இளவரசர்

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக ஹேரி அறிவித்தார். இது இங்கிலாந்து மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. "இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் எங்களின் நேரத்தைச் சமமாகச் செலவிடத் திட்டமிட்டுள்ளோம். அதோடு எங்கள் மகன் ஆர்ச்சி, அவர் பிறந்த அரச பாரம்பர்யத்தைப் பற்றிய புரிதலுடன் வளர்க்க விரும்புகிறோம்” என்று விலகலுக்குக் காரணம் சொன்னார் ஹேரி.

தற்போது ஹேரி - மேகன் தம்பதி தங்களது ஒரு வயது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அங்கே ஆர்க்கிவெல் என்ற நிறுவனத்தையும் தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 1 கோடி பேருக்கும் மேல் தொடரும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து விலகுவதாக ஹேரி - மேகன் தம்பதியினர் அறிவித்துள்ளனர். தங்கள் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்த இருப்பதாகவும், வளர்ச்சியை நோக்கிய இப்பயணத்தில் சமூக வலைத்தளங்களின் குறுக்கீட்டை இந்த முடிவு தடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹேரி - மேகன்

ஆனால், ஹேரி - மேகன் தம்பதியினரின் இந்த முடிவுக்குப்பின், சமூக வலைத்தளங்களில் நிகழும் வெறுப்பு மற்றும் தனிமனித தாக்குதல்தான் முக்கிய காரணமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. இளவரசரின் இந்த முடிவினால் ஃபோலோயர்ஸ் வருத்தமடைந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் வெறுப்பை மட்டுமே விதைக்கின்றனவா... ஹேரி - மேகன் முடிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?!



source https://www.vikatan.com/social-affairs/international/prince-harry-and-meghan-markle-quit-social-media

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக