Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

உத்தரகாண்ட் ஒருநாள் முதல்வரான 19 வயதுக் கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி! - என்ன காரணம்?

உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகரானா கெர்சாய்ன் என்கிற இடத்திலிருந்து, சிருஷ்டி இன்று அம்மாநில முதல்வராக செயல்படுவார் என்றும், அவர் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வும் செய்யவிருக்கிறார்.

உத்தரகாண்ட் (uttarakhand) மாநிலம் ஹரித்வார் (haridwar) நகருக்கு அருகிலுள்ள தெளலத்பூர் (daulatpur) கிராமத்தைச் சேர்ந்தவர் சிருஷ்டி கோஸ்வாமி (Shristi Goswami). 19 வயதாகும், கல்லூரி மாணவியான சிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஜனவரி 24) உத்தரகாண்ட் மாநிலத்தின் 'ஒரு நாள் முதல்வராக' பதவியேற்று பணியாற்ற உள்ளார்.

வியாபாரியான சிருஷ்டியின் தந்தை பிரவீன் பூரி (Praveen Puri) தெளலத்பூர் கிராமத்தில் சிறிய கடையை நடத்தி வருகிறார், அவரது தாயார் அங்கன்வாடி ஊழியர். ரூர்கியில் (Roorkee) உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாயப் பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்கலை அறிவியல் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் சிருஷ்டி, கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து உத்தரகாண்ட் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வரும், குழந்தைகள் சட்டசபையில் (பால் விதான் சபா - Bal Vidhan Sabha) முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். 2019-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற, பெண்கள் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார் சிருஷ்டி கோஸ்வாமி.

சிருஷ்டி கோஸ்வாமி

இந்நிலையில், இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி, சிருஷ்டி கோஸ்வாமி'க்கு ஒரு நாள் முதல்வராகப் பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என உத்தரகாண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உஷா நேகி கூறியுள்ளார். சிருஷ்டி முதல்வராக செயல்படும்போது, அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியில் இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார். இந்நிகழ்ச்சி இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவிருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான கெர்சாய்ன் (Gairsain) கோடைகால மாநில தலைநகரிலிருந்து, சிருஷ்டி இன்று உத்தரகாண்ட் மாநில முதல்வராக செயல்படுவார். மேலும், அவர் அடல் ஆயுஷ்மான் திட்டம் (Atal Ayushman Scheme), ஸ்மார்ட் சிட்டி திட்டம் (Smart City project), உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத் துறையின் ஹோம் ஸ்டே திட்டம் (Homestay Scheme) போன்ற பல்வேறு மாநில அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறார்.

சிருஷ்டி கோஸ்வாமி

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராகும் வாய்ப்பைப் பற்றி பேசிய சிருஷ்டி கோஸ்வாமி,``இது உண்மை என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அதே நேரத்தில், மக்கள் நலனுக்காக உழைக்கும்போது இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று கூறினார்.

``என் மகள் புத்திசாலி. எல்லா இடங்களிலும் பெண்களின் முன்னேற்றத்துக்காக அவர் பணியாற்ற விரும்புகிறார். சிறுமிகள் கல்விபெற ஊக்குவிக்கும் ஒரு சமூக அமைப்பின் பகுதி அவள்" என்று பெருமிதம் கொள்கிறார் சிருஷ்டியின் தந்தை பிரவீன் பூரி.

இது குறித்து பேசிய உத்தரகாண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உஷா நேகி, ``சிருஷ்டி முதல்வராக செயல்படுவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் கெர்சாய்ன் சட்டசபைக் கட்டடத்தில் செய்யப்பட்டுள்ளது. சிருஷ்டியும் இது தொடர்பாக எங்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் திறனைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

முதல்வன் திரைப்படத்தில் வரும் 'ஒரு நாள் முதல்வர்' போல் பதவியேற்க இருக்கும் சிருஷ்டி, உத்தரகாண்ட் மாநில வரலாற்றில் முதல் பெண் முதல்வர். இவர் மாநில முதல்வராக செயல்படுவதற்கு முன், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து விளக்கமளிப்பார்கள் என மாநில அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/india/haridwar-teen-shrishti-goswami-to-become-uttarakhand-cm-for-one-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக