Ad

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

10 ஏக்கர் சாகுபடி, இயற்கை விவசாயம், துபாய் ஏற்றுமதி... தோனியின் பண்ணையில் என்ன ஸ்பெஷல்?

தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பீங்க... ஏன் விளம்பரத்தில் நடிச்சு கூட பார்த்திருப்பீங்க... அவர் தக்காளி வித்து பாத்திருக்கீங்களா..? முள்ளங்கி வித்து பாத்திருக்கீங்களா..? இனிமேல் பாப்பீங்க பாஸ்!

பல சாதனையைச் செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. இளம் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றாலும், தல என்று அன்புடன் அழைக்கப்படுவதுண்டு. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, கடந்த ஆண்டு 39-ம் வயதில் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தோணியின் இயற்கை விவசாயம்

தோனி சமூக ஊடகங்களில் பரவலாக வராமல் இருந்தாலும், அவரது மனைவி அவர் குறித்த செய்திகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் தோனியின் அன்றாட நடவடிக்கை குறித்த செய்திகள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தவர், தனது விவசாயம் குறித்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிராக்டர் ஒன்றை தோனி ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தது. அத்துடன் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து குறித்தும் இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்தும் தோனி விளக்கியிருந்தார்.

இப்ப அதுதான் செம மேட்டர். ஆமாங்க, தனது ஓய்வுக்கு பின்னர் தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தோனி இயற்கை விவசாயத்தில் குதித்துள்ளார். அவரது வயலில் விளைந்த பயிர்களுக்கு இப்போது ராஞ்சியிலும் சரி பிற மாநிலங்களிலும் ஏன் வெளிநாடுகளிலும் சரி செம கிராக்கியாம்.

அவரது நிலத்தில் விளைந்த ஸ்டிராபெரி, முட்டைகோஸ், தக்காளி, முள்ளங்கி, காளிஃபிளவர், பீன்ஸ், பூசணிக்காய், பப்பாளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்குத் தயாராகிவிட்டன. இவை அனைத்தும் 10 ஏக்கர் நிலத்தில் விளைவிக்கப்பட்டுள்ளன. தோனியின் விவசாய நிலம் கிட்டத்தட்ட 43 ஏக்கர் வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஏக்கர் மட்டும் மிக பெரியவை.

இந்த காய்கறிகளை இப்போது ஒரு ஏஜென்சி மூலம் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்கவுள்ளார் தோனி. இதற்கான பொறுப்பை ஜார்க்கண்ட் மாநில அரசே ஏற்றுக் கொண்டுள்ளதாம். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கூட தோனியின் காய்கறிக்கு நல்ல மவுசு உள்ளதாம்

தனது நாயுடன் தோணி

மேலும், தோனி விளைவித்த காய்கறிகளை ஜார்கண்ட் மாநில அரசு துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வேளாண்மைத்துறை மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கை உரங்களைக் கொண்டு தன்னுடைய பண்ணை வீட்டில் தோனி விவசாயம் செய்திருக்கிறார்.

அடுத்து சீக்கிரமே விளம்பரத்தில் “உன் பேரு தல... உன் தக்காளி கிலோ என்ன வில” என்று கேட்டு தோனிக்காக யாராவது வந்து நடித்து கலக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

- ஆனந்தி ஜெயராமன்



source https://www.vikatan.com/news/agriculture/ms-dhoni-doing-organic-farming-in-his-farmhouse-and-has-big-plans-too

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக