Ad

செவ்வாய், 15 டிசம்பர், 2020

புதிய தேசம் பிறந்தது! `ஜாய் பங்க்ளா!’ #VikatanOriginals

16.01.1972 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

“இது ஒரு அரசியல் அறைகூவல் அல்ல. சமூகம், பொருளாதாரம், கலாசாரம் எல்லாவற்றிலும் கலந்து நிற்பது இது. 1948-ம் ஆண்டு முதல் கிழக்கு வங்காள மக்கள் தங்கள் தாய் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்து போராடி வரும் மக்களின் மனத்துடிப்பு இது.”

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் இப்படிப் புலவர்களும் கலைஞர்களும் கூடியிருந்த கருத்தரங்கில் இவ்வாறு கூறியவர், ‘பங்கபந்து’வான ஷேக் முஜ்புர் ரஹ்மான்.

இந்த எழுச்சி முதற் குரல் கொடுத்தது, 1948-ம் ஆண்டு மார்ச்சு மாதம். டாக்காவில் கர்லான் மன்றத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்காகப் பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா வந்திருந்தார். “பாகிஸ்தானின் தேசிய மொழி உருது மட்டும் தான்” என்று அவர் அங்கே கூறிய போது, “இல்லை, இல்லவே இல்லை” என்று எதிர்க்குரல் எழும்பியது. அந்த அரங்கையும், தலைவரையும் திகைக்கச் செய்தவர்கள் அங்கே கூடியிருந்த மக்கள். பாகிஸ்தானில் உருது மொழி பேசும் மக்கள் 60 லட்சம்; வங்காள மொழி பேசுபவர்கள் 546 லட்சம், அன்று. இதற்கு எதிர்ப்புத் தோன்றியது.

1949-ம் ஆண்டு. மெளலானா பஷானி கிழக்குப் பாகிஸ்தான் அவாமி முஸ்லிம் லீக் என்ற எதிர்க் கட்சியை உருவாக்கி, முதல் கூட்டத்தை நடத்தினார். ஷேக் முஜ்புர் ரஹ்மான் அதன் இணைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

1954-ம் ஆண்டில் முஸ்லிம் லீக்கைத் தேர்தலில் தோற்கடித்து மெளலானா பஷானி, ஸுஹ்ரவர்த்தி, ஃபஸ்லுல் ஹக் மூவரும் கூட்டாட்சி அமைப்பை ஏற்படுத்தினார்கள். “பாகிஸ்தான் என்பது செயற்கையான பிரிவினை” என்றார் ஹக். அவர் பதவி பறிபோயிற்று. மந்திரி சபையை பாகிஸ்தான் அரசு கலைக்க உத்தரவிட்டது.

1958-ம் ஆண்டு. தனக்கு அடங்கிய பொம்மை அமைச்சரவைகள் பலவற்றைக் கொண்டு, கிழக்கு வங்காளத்தை அரசாள முயன்று, மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அரசு. அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். டாக்கா பல்கலைக் கழகத்தில் ஆப்கான், போக்கிரிகள், மாணவர்கள் என்று சேர்க்கப்பட்டார்கள். அவர்களிடம் கத்தியையும் துப்பாக்கியையும் கொடுத்து மாணவர்களை அடக்க வழிவகுத்தார்கள். “இஸ்லாம் தழைக்க வேண்டும். அதற்காகவே என் ஆட்சி” என்று கூறி மக்களை மத உணர்ச்சியைக் காட்டி ஏமாற்ற முற்பட்டார். அயூப். கடைசியில் இந்த அடக்கு முறை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. யாஹ்யாகானிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு சத்தம் போடாமல் விலகிக் கொண்டார் அயூப்கான்.

யாஹ்யாகானின் குறுகிய ஆட்சியில் வங்காள மக்களின் விடுதலை ஆர்வம் மேலும் அதிகமாயிற்று. மக்கள் ஆட்சியை பாகிஸ்தானின் இரு பகுதிகளிலும் நிறுவ ஒப்புக்கொண்டார் யாஹ்யா. தேர்தலில் அமோக வெற்றி அடைந்தது அவாமி லீக். 169 இடங்களில் நின்று 167 இடங்களில் ஜெயித்தது! மக்களுடைய தீர்ப்பை ஏற்கும் மனமில்லே யாஹ் யாகானுக்கு. பாதுகாப்பு, அயல் நாடுகள் தொடர்பு, நிதி - இந்த மூன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் பூரண சுயாட்சி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் முஜிபுர் ரஹ்மான்.

டாக்காவில் பத்து நாட்கள் யாஹ்யாகானுக்கும் முஜிபுர் ரஹ்மானுக்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. தன்னை நம்பி வாக்களித்த வங்க மக்களுக்குத் துரோகம் செய்ய முடியாது என்று தீர்மானமாக மறுத்துவிட்டார் முஜிபுர் ரஹ்மான். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அதே சமயம் சிட்டகாங், சல்னா துறை முகங்களில் போர்வீரர்களை ஏற்றி வந்த பாகிஸ்தான் கப்பல்களும் வந்து சேர்ந்துகொண்டிருந்தன.

1971-ம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து நான்காம் தேதி.

கிழக்குப் பாகிஸ்தான் படையினரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டாக்காவில் விமான மூலம் படைகள் இறங்கத் தொடங்கின. முதல் குண்டு வெடித்தது!

கிழக்குப் பாகிஸ்தான் படையில் பலர் கைது செய்யப்பட்டார்கள்.

பாகிஸ்தான் ராணுவம் தீவிரமான அடக்குமுறையில் இறங்கியது. முக்தி ஃபெளஜி என்ற பெயரில் பத்தாயிரம் வங்க வீரர்கள் தாய் நாட்டைக் காக்கும் பணியில் இறங்கினார்கள்.

ஒரு வாரம் கடுமையான சண்டை நடந்த பிறகு பாகிஸ்தான் படைவீரர்கள் பயந்து பின் வாங்கத் தொடங்கினார்கள்.

வெறி கொண்ட பாகிஸ்தான் படையினருக்கு, தோல்வி என்ற பயமும் பிடித்துக் கொண்டுது. விமானங்களிலிருந்து ராக்கெட்டுகளையும் கொடிய நஃபாம் வெடி குண்டுகளையும் வீசினார்கள். கப்பற் படை, சால்னா முதலிய துறைமுகங்களைத் தாக்கியது. பெரிய ‘போயிங்’ விமானங்களில் ஏராளமான தரைப்படையினர் வந்து இறங்கினார்கள். ஒரு வாரம் தீவிரமான போர் நடந்தது. விடுதலை வீரர்கள் பின்வாங்கி மறைந்து கொள்ள நேரிட்டது!

சுமார் எண்பதினாயிரம் படையினர் வங்க மக்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தார்கள். ஜெனரல் திக்காகான் தமது படையினரின் அழிவு வேலைகள் பெரும்பாலும் இரவிலேயே நடக்க வேண்டும் என உத்தரவிட்டார். வங்க நாட்டின் அரசியல் தலைவர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள், மாணவர்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். குடும்பங்களிலிருந்து இளம் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள். பகிரங்கமாகப் பெண்களின் மானமும், குழந்தைகளும் பறிக்கப்பட்டன. பயந்து போன மக்கள் கதறியழுது இந்தியாவை நோக்கி ஓடி வரத் தொடங்கினார்கள்.

ஆனால், லட்சக் கணக்கான மக்களை ஏற்று, உணவும் உடையும் பாதுகாப்பும் தந்து குடியிருக்கச் செய்யவும் நமக்கு சக்தியில்லை. பாகிஸ்தானுக்கு. எதிர்க்குரல் கொடுத்தது இந்தியா, உலகெங்கும் சென்று முறையிட இந்திய அரசின் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அனுப்பப்பட்டார்கள். பிரதம மந்திரியின் தனிச் செல்வாக்குடன் ஜெயப்பிரகாஷ் நாராயண் அனுப்பி வைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் படைகளை வெளியில் நின்று நேரடியாகச் சந்திக்க இயலாத நிலையில், முக்தி ஃபெளஜ் கொரில்லாப் போர் முறையைக் கடைப் பிடித்தது, தொடங்கி இரு மாதங்களில் அதன் பெயர்முக்திபாஹினி என்று மாறியது; சுமார் 1,50,000 ஆண்களும் பெண்களும் பங்கு பெற்றார்கள்.

நமக்கு அதுதாபமும், அறிவுரைகளும் கிடைத்தன. உலக நாடுகள் நிறுவனத்தின் மூலம் உணவுப் பொருளும், மருந்தும் கிடைத்தன. ஆனால், நியாயம் கிடைக்கவில்லை!

சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான், இந்தியாவைத் தாக்கக்கூடும் என்ற அபாயம் அதிகரித்தது. அமெரிக்காவின் ஆதரவு பாகிஸ்தானுக்குத்தான் இருந்தது. இந்த நிலையில் இந்தியா தற்காப்புக்காக ஆகஸ்டு ஒன்பதாம் தேதி ரஷியாவுடன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஆகஸ்டு பதினைந்து தேதி டில்லியில் கொண்டாடப்பட்ட போது, செனட்டர் எட்வர்ட் கென்னடி வந்திருந்தார். அகதிகள் குடி வைக்கப்பட்டிருந்த இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, “இது அரசியல் பிரச்னை அல்ல; மனிதாபிமானப் பிரச்னை. இது இந்தியாவை மட்டும் பாதிப்பதல்ல். சுதந்திரத்தின் புனிதப் பண்புகளைப் போற்ற விரும்பும் உலகத்தையே பாதிப்பது” என்று கூறினார்.

ஆறு முக்கிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் இந்திரா காந்தி. அப்போது, நாட்டில் அவர் இல்லாத சமயத்தில் போர் மூளுமோ என்ற சந்தர்ப்பம். எதிர்க் கட்சியினர் அனைவரும் பிரதமருக்கு உறுதிமொழி கொடுத்து வழி அனுப்பினார்கள்.

பிரான்ஸும் பிரிட்டனும் நமது நிலையை நன்கு புரிந்து கொள்ளப் பிரதமரின் விஜயம் துணை செய்தது. உலக நாடுகள் தலையிட்டு பங்களாதேஷ் தலைவர்களுடன் யாஹ்யாகான் பேச்சு வார்த்தை நடத்த வழிசெய்யும் என்ற நம்பிக்கையோடு திரும்பினார் பிரதமர் இந்திரா. விரைவில் வழி கிடைக்காவிடில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பகைமை முற்றும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

நவம்பர் மாத இறுதி. “எப்படியும் ஒரு மாதத்தில் நீங்கள் உங்கள் தாய் நாட்டுக்குச் செல்ல வசதி செய்வோம்” என்று அகதிகளுக்கு ஆறுதல் கூறி, தைரியம் சொன்னார்கள் நமது பிரதமரும், ஜனாதிபதியும்.

பாகிஸ்தானிலோ? படைகள் எல்லையை நோக்கி நகர்ந்து போருக்குத் தயாராக நின்று கொண்டன. “இன்னும் பத்து நாட்களில் நான் போர் முனையில் இருப்பேன்” என்று பெருமை அடித்துக் கொண்டார் யாஹ்யாகான். பாகிஸ்தானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி. பிற்பகல் நேரம். பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து முக்கிய இடங்களில் குண்டுகளை வீசின. “போர் தொடங்கி விட்டோம்" என்று அறிவித்தார் யாஹ்யாகான்.

கல்கத்தாவில் இருந்த பிரதமர் இந்திர அவசரமாக டில்லிக்குத் திரும்பினார். அவசரநிலை பிரகடனம் ஆயிற்று. நாட்டின் சுதந்திரத்துக்குக் கடுமையான சோதனை நேரம்.

போர் தொடங்கிய இரண்டாம் நாளிலேயே மூன்று போர்க் கப்பல்களையும், ஒரு நீர் மூழ்கிக் கப்பலையும் அழித்து நமது கப்பற்படை தீவிரமாகச் செயல்படத் தொடங்கிற்று. 47 ஆகாய விமானங்களை வீழ்த்தியது நமது விமானப்படை. சாம்ப் பகுதி தவிர மற்ற இடங்களில் நமது தரைப்படைகள் பாகிஸ்தான் மண்ணில் நுழைந்து முன்னேறிப் போரிட்டன.

டிசம்பர் மாதம் ஏழாம் தேதி. பங்களாதேஷ், இந்தியாவினால் அங்கீகரிக்கப்பட்டது. பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதர் உறவைத் துண்டித்துக் கொண்டது. அமெரிக்கா நமக்குப் பொருளாதார உதவியை நிறுத்துவதாக அறிவித்தது.

பல முக்கிய கிழக்கு வங்க நகரங்களும் இந்தியா வசமாயின. மேற்கு பாகிஸ்தானில் சாம்ப் பகுதியிலும் கூட நமது படைகள் முன்னேறி சுமார் 70 சதுர மைல்களைப் பிடித்துக் கொண்டன. ஐ. நா. பந்தோபஸ்து சபை, போரை நிறுத்தச் சொல்லிக் குரல் எழுப்பிற்று. ரஷியா தனது 'வீட்டோ’வை உபயோகித்து அதைத் தடுத்தது.

டாக்காவை நோக்கி இந்தியப் படை முன்னேறிக் கொண்டிருக்கும் நிலை. பங்களாதேஷ் மக்களுக்கு நியாயம் வழங்கப்படுவதுபற்றி எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் போர் நிறுத்த கோரிக்கையை ஒப்புக் கொள்ளும்படி ஐ. நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 104 நாடுகளில் இந்தியாவுடன் பத்து நாடுகளே அதை மறுத்து ஓட் செய்தன. பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 11 நாடுகள் நடு நிலைமை வகித்தன. மற்ற நாடுகள்யாவும் தீர்மானத்தை ஆதரித்தன.

இந்த சிரம மிகுந்த நிலையில் நமக்குத் துணை நின்றது ரஷியா.

டிசம்பர் 12-ம் தேதி. டாக்காவுக்கு 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருங்கி விட்டது நமது படை. முன்னோடியாக பாராசூட் மூலம் நமது படையினர் ஆங்காங்கே இறங்கத் தொடங்கினார்கள். வங்காளா விரிகுடாவை நோக்கி, ‘டாக்காவில் உள்ள அமெரிக்கர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகச் சொல்லி ஒரு பெரிய அமெரிக்கப் போர்க் கப்பல் (ஏழாவது ஃப்ளிட்) முழுப் போர் வசதிகளுடன் வந்து கொண்டிருந்தது! சீனா, பாகிஸ்தானுக்குத் துணை புரியப் போவதாகப் பயமுறுத்தியது!

டாக்காவில் இருந்த நாற்பதினாயிரம் பாகிஸ்தான் படையினர் சரணடைந்தால் பாதுகாப்பு அளிப்பதாகச் சொல்லி அழைப்பு விடுத்தார் இந்தியப்படைத்தலைவர் மானெக்ஷா. அதற்குப் பதில் கிடைக்கவில்லை.

டிசம்பர் 15-ம் தேதி. நமது படைகள் டாக்காவை நெருங்கிச் சூழ்ந்து கொண்டன. யாஹ்யாகான் நியமித்த அரசாங்கம், பதவியைத் துறந்தது. கவர்னரும் பிற முக்கிய அதிகாரிகளும், செஞ்சிலுவை சங்கத்தார் ‘இண்டர் காண்டிநெண்டல்’ ஹோட்டலில் நிறுவி இருந்த நடுநிலைப் பகுதியில் வந்து புகுந்து கொண்டார்கள். சிட்டகாங் துறைமுகம் பற்றி எரிந்து கொண்டிருந்தது!

டிசம்பர் 16-ம் தேதி. டாக்காவில் இருந்த பாகிஸ்தான் படைத்தலைவர் நியாஜி, “போரை நிறுத்துங்கள்” என்று டில்லியில் இருந்த அமெரிக்க தூதரகத்தின் மூலம் வேண்டிக் கொண்டார். நிபந்தனை இன்றிச் சரணடைய ஒப்புக் கொள்ளும்படி கூறினார் நமது படைத்தலைவர் மானெக்ஷா. விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

அன்று மாலை நேரம். ஜெனரல் நியாஜி, டாக்காவின் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஆயிரக்கணக்கான வங்க மக்கள் முன்னிலையில் தனது வலது தோள் பட்டையிலிருந்து ராணுவ மதிப்புக்குரிய வர்ணப் பகுதியைப் பிய்த்துவிட்டு, தனது ரிவால் வரை எடுத்து அதன் குண்டுகளை இந்தியப் படையின் ஜெனரல் அரோராவிடம் கொடுத்துத் தலை வணங்கினார்.

டாக்கா வானொலி நிலையத்தில் முதன் முறையாக பங்களாதேஷ் மக்களின் சுதந்திரக் குரல் ஒலித்தது. "தங்க வங்கம்' என்று தாகூர் புகழ்ந்த நாடு, பங்களாதேஷ் என்ற புதுப் பெயர் பூண்டு, புதிய சுதந்திர தேசமாக உருவெடுத்தது!

அந்தக் கடைசி நேரத்திலும் பாகிஸ்தான் படையினர் வெறி கொண்டு, டாக்காவில் இருந்த நிபுணர்கள் அனைவரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து, கைகளைக் கட்டிச் சுட்டுத் தள்ளினார்கள். பாங்கில் புகுந்து பண நோட்டுக்களைக் கொளுத்தினார்கள். முக்கியமான கட்டடங்களைத் தகர்க்கவும் முனைந்தார்கள்.

கிழக்கு முனையில் போர் நின்றதை ஒட்டி மேற்கு முனையிலும் போர் நிறுத்தப்பட்டடு விட்டது. யாஹ்யாகான் பதவியைத் துறந்து, பூட்டோ ஜனாதிபதியனார்.

டிசம்பர் 22ம் தேதி

பங்களாதேஷ் சரித்திரத்தில் ஒரு பொன்னாள். தாற்காலிக ஜனாதிபதி கையத் நஸ்ரூல் இஸ்லாம். பிரதமர் தாஜுதீன் அகமது இருவரும் விமானத்தில் வந்து இறங்குகிறார்கள், சுதந்திர பங்களாதேஷின் தலைநகரான டாக்ககாவில். லட்சக்கணக்கான மக்கள் நெடுந்தூரத்திலிருந்து வந்து கூடி இருக்கிறார்கள். இந்திய விமானப் படையின் விமானம் ஒன்றில் அவர்கள் வந்து இறங்கியதும், ‘ஜாய் பங்களா’ என்ற கோஷம் வானைப் பிளக்கிறது. மலர் மாலைகள் குவிகின்றன.

- எஸ்.எல்.எஸ்.



source https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/vikatan-originals-article-on-vijay-diwas-from-1972-ananda-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக