திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த 45 வயதான கிறிஸ்தவ பாதிரியாரான ஜெயராஜ் என்பவர் ஜவ்வாதுமலை பெருங்காட்டூர் கிராமத்தில் தங்கி மதபோதனைகளைச் செய்துவந்துள்ளார். அங்குவசிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரத்தில் டியூஷனும் எடுத்துள்ளார். இந்த நிலையில், பாதிரியார் ஜெயராஜிடம் டியூஷன் சென்ற 13 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அதே சமயம், பாதிரியாரையும் காணவில்லை.
மாணவியை மூளைச்சலவைச் செய்து பாதிரியார் கடத்திச் சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தனிப்படையும் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. இதனிடையே, திருவண்ணாமலையில் உள்ள தனது சகோதரி பரிமளாசெல்வியின் வீட்டில் மாணவியுடன் பாதிரியார் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு விரைவதற்குள் மாணவியுடன் பாதிரியார் தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது.
Also Read: சென்னை: மாயமான 17 வயது சிறுமி! - போக்சோ சட்டத்தில் கைதான தலைமைக் காவலரின் மகன்
பாதிரியாரின் சகோதரியைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைத்தனர். அதன்பின்னரும், பாதிரியாரைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியாரின் சகோதரி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன. இதையறிந்த பாதிரியார் ஜெயராஜ் சகோதரியைக் காப்பாற்றுவதற்காக மாணவியை நேற்று முன்தினம் பெருங்காட்டூர் மலைக் கிராமத்துக்கு அழைத்துவந்து விட்டுச் சென்றுள்ளார்.
இதையறிந்த போலீஸார், அந்த கிராமத்துக்குச் சென்று மாணவியை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையில்,``பாதிரியார் தன்னை கடத்திச் செல்லவில்லை. பெங்களூருவில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்ப்பதற்காகத்தான் தன்னை அவர் அழைத்துச் சென்றார்’’ என்று சிறுமி கூறியுள்ளார்.
இருந்தபோதும், ``சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? பாதிரியாரின் மிரட்டலுக்குப் பயந்து இப்படி பொய் சொல்கிறாரா?’’ என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். தொடர்ந்து தலைமறைவாக உள்ள பாதிரியார் ஜெயராஜையும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். பாதிரியார் ஜெயராஜ் மீது ஏற்கெனவே கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் போக்ஸோ பிரிவிலும் வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
source https://www.vikatan.com/social-affairs/crime/tiruvannamalai-police-books-priest-over-abduction-13-year-old-child
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக