Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

அடுத்தடுத்து ஸ்கோர் செய்யும் சித்தார்த்... சிக்கலில் அபி... அடுத்து என்ன? #VallamaiTharayo

அபி ஆபிஸிலிருந்து வந்து வீட்டுக்குள் நுழையும்போது, அங்கே அவளின் பெரியப்பா, அப்பா, அம்மா என எல்லோரும் வந்திருக்கிறார்கள். மூவரின் முகங்களிலும் கடுங்கோபம் குடிகொண்டிருக்கிறது. நிலைமையைப் புரிந்துகொண்டு அம்மாவிடம் விளக்கம் சொல்ல முயற்சி செய்கிறாள் அபி.

Vallamai Tharayo

``ஒரு பெண்ணைப் பெத்துட்டு இப்படி அதுகிட்டே பேச்சு வாங்கணும்னு எங்க தலையில் எழுதியிருக்கு. உன்னை எல்லாம் பெத்து, வளர்த்து, படிக்க வச்சு, பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு நல்லா மதிக்கிறே. இந்த வீட்ல பிறந்த அவ ஓடிப் போயிட்டா. நீ யாருக்கும் அடங்காம ஆடிட்டிருக்கே. நாங்க இல்லாமலா நீ உன் குழந்தைகளை வளர்த்தே? கெளசல்யா உங்க பெரியப்பாவை அப்படிப் பேசிட்டுப் போனா. அவர் உடைஞ்சுட்டாரு. இப்படி ஒரு கேவலமான மகளைப் பெத்தா எப்படி நிம்மதியா இருக்க முடியும்? நாங்க செஞ்ச புண்ணியம், மாப்பிள்ளை தங்கமா அமைஞ்சிருக்காரு. அவர் கொடுக்கிற இடத்துலதான் நீ ஆடிட்டு இருக்கே. எவ்வளவு பொறுப்பா குழந்தைகளை கவனிச்சுக்கிறாரு! சாப்பாடு ஊட்டறாரு! விளையாடறாரு!” என்று, மகள் என்ன சொல்ல வருகிறாள் என்றுகூடக் கேட்காமல் திட்டித் தீர்க்கிறார் அபியின் அம்மா.

``மறைக்கணும்னு ஒண்ணும் இல்லம்மா. அவருக்கு வேலை போனதை அவர் சொல்லாமல், நான் எப்படிச் சொல்ல முடியும்? அவருக்கு வேலை இல்லைன்னுதான் நான் வேலைக்குப் போறேன்” என்று அபி சொல்வதைக் காதில் வாங்காமல் போகிறார் அவள் அம்மா.

இதைத்தான் சித்தார்த்தும் எதிர்பார்த்தான். அபியின் குடும்பத்தாராலேயே அபியை வெறுக்க வைப்பதுதான் அவன் திட்டம். அந்த வெறுப்பில் தனக்கு வேலை போன விஷயத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள், தனக்கு நல்ல பெயரும் வந்துவிடும். இப்படி எவ்வளவு பக்காவான கால்குலேஷன்!

Vallamai Tharayo

இரவு உணவை ஆர்டர் செய்து, அதிலும் மாமனார் வீட்டினரிடம் ஸ்கோர் செய்கிறான் சித்தார்த். ``அபிக்கு ரொம்ப இடம் கொடுக்கறீங்க மாப்பிள்ளை. அதான் இப்படி நடந்துக்கறா... அவளுக்குச் சுமையைக் குறைக்கறேன்னு உங்க சுமையை ஏத்திட்டே போகாதீங்க” என்று திருவாய் மலர்கிறார் அபியின் அப்பா.

காலையில் மூவரும் ஊருக்குக் கிளம்புகிறார்கள். இன்னும் சில நாள்கள் இருக்கச் சொல்கிறாள் அபி. ``இந்தக் கொடுமைகளை எல்லாம் எங்களால பார்க்க முடியாது. குழந்தைகளை அழைச்சிட்டுப் போகத்தான் வந்தோம். மாப்பிள்ளை நல்லா கவனிச்சுக்கறார். இனி இங்கே எங்களுக்கு என்ன வேலை?” என்று சொல்கிறார் அபியின் அம்மா.

Vallamai Tharayo

``உன் குடும்பம். உன்னோட விஷயத்துல தலையிட எங்களுக்கு உரிமை இல்ல. இப்ப கூட வந்திருக்க மாட்டோம். உங்க அம்மாவாலதான் வந்தோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறார் அபியின் பெரியப்பா.

சித்தார்த் அவர்களை பஸ் ஸ்டாண்டில் விடுவதற்கு காரை எடுத்துக்கொண்டு வருகிறான். அவனின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. அபியின் மதிப்பு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

இனி?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-44

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக