Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை... என்ன காரணம்? விளக்கும் மருத்துவர்

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் `அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த 15-ம் தேதி முதல் கொரோனா பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெற்று வந்தது. இந்தப் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் பங்கேற்றிருந்தனர். கொரோனா காரணமாக படக்குழுவினர் அனைவருக்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

கடுமையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாண்டி, படப்பிடிப்பு குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து உடனே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, படப்பிடிப்பு குழுவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும் ரஜினி ரசிகர்கள் பதற்றத்துக்குள்ளானார்கள்.

ரஜினி

இதனைத் தொடர்ந்து, ``ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா `நெகட்டிவ்' என ரிசல்ட் வந்துள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை. இருப்பினும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். சக நடிகர், நடிகைகளும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் ரஜினி சென்னை திரும்புகிறார்." என்றும் நேற்று முன்தினம் தகவல் வெளியானது.

மேலும், ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் அப்போது தகவல் வெளியானது. இந்தத் தகவலால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. ``நேற்றைக்கு முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு `நெகட்டிவ்' என ரிசல்ட் வந்த பிறகு, ஏன் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்; ரஜினிகாந்த் இதுபோன்ற சூழலில் வெளியே வருவது நல்லதா?" என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அலையடிக்க ஆரம்பித்துள்ளன.

RajiniKanth

இதுதொடர்பாக தொற்று நோய் மருத்துவர் ராமசுப்பிரமணியத்திடம் பேசினோம். ``கொரோனா பரிசோதனையை பொறுத்தமட்டில் முதல் பரிசோதனையில் 100 நபர்களில் சுமார் 65 நபர்களுக்குத்தான் கண்டுபிடிக்க முடிகிறது. மற்ற நபர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. அதனை `சென்சிட்டிவிட்டி' எனக் குறிப்பிடுவோம். அப்படியான பட்சத்தில், மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்வது அவசியமாகிறது. நமக்கு சந்தேகமாக இருக்கும்பட்சத்தில் ஒரு சில முறைகள் பரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை. இப்படி ஒருவருக்கு எத்தனை முறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையெல்லாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அடுத்ததாக ரஜினிகாந்த் இந்தச் சூழலில் வெளியில் வரலாமா வரக் கூடாதா என்பதெல்லாம் ரஜினி முடிவு செய்ய வேண்டியது. அதில் நாம் எதுவும் கருத்து சொல்ல முடியாது." என்றார்.



source https://www.vikatan.com/health/news/why-rajinikanth-taking-second-rt-pcr-test-in-short-span-of-time

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக