மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் தொடங்கி இன்று 30 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், மத்திய அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறது.
சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. எனினும் முதலில் நடைபெற்ற் 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்தது. 6-கட்ட பேச்சுவார்த்தை ரத்தான நிலையில் தற்போது பேச்சுவார்த்தை தேதியை அறிவிக்க விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளது மத்திய அரசு.
முன்னதாக கடந்த 20-ம் தேதி விவசாய அமைப்பு தலைவர்களுக்கு மத்திய வேளாண் துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் கடிதம் எழுதியிருந்தார். எனினும் உறுதியான பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என விவசாயிகள் பதில் கடிதம் எழுதினர். மேலும் சட்ட திருத்தம் என்ற நிலைபாட்டிலேயே அரசு இருப்பது முறையானது அல்ல எனவும் விவசாயிகள் தங்களில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்,
இந்த நிலையில் தான், விவசாயிகளின் இந்த கடிதத்துக்கு வேளாண் துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் நேற்று பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ``வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. அதனால், பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைக்கிறோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகான அறிவிப்பை வெளியிடுங்கள்.
Also Read: டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு!
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான எந்தவொரு புதிய கோரிக்கையும், விவசாய சட்டங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டவை, பேச்சுவார்த்தையில் சேர்க்க தர்க்கரீதியானதல்ல. முன்னர் அறிவித்தபடி, விவசாய சங்கங்கள் எழுப்பியுள்ள அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது” என்று குற்ப்பிடப்பட்டுள்ளது.
மின்சார திருத்த மசோதா மற்றும் அறுவடைக்குப் பின் தீ வைப்பது தொடர்பான சட்டங்கள் தொடர்பாக, டிசம்பர் 3 -ம் தேதி விவாதத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட வரைவு முன்மொழிவைத் தவிர விவசாயிகள் சங்கங்களுக்கு வேறு பிரச்னைகள் இருந்தால் விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அழைப்பை தொடர்ந்து, இன்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று கூறப்படுகிறது,
இதனிடையே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ரூ .18,000 கோடி நிதி வழங்கும் நிகழ்வில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர், ``போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். புதிய சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன், விரைவில் பிரச்னை தீர்க்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/news/union-ministry-asks-the-farmers-to-come-for-talks-will-delhi-protest-comes-to-end
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக