Ad

சனி, 5 டிசம்பர், 2020

வேளாண் திருத்தச் சட்டத்திற்கு முன்பே தமிழகத்தில் நேரடி விற்பனை... எப்படி நடக்கிறது ஏலம்? #SpotVisit

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் வடமாநில விவசாயிகள் தீவிரமாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே நேரம், மத்திய அரசின் சார்பில் இடைத்தரகர்களை ஒழித்து விவசாயிகளைக் காக்கத்தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லி வருகிறார்கள்.

ஆனால், இதற்கு முன்பே தமிழகத்தில் இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை விற்பனை செய்யும் நடைமுறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக விவசாயிகளும், வேளாண்துறை அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

தேங்காய் ஏலம்

விவசாய உற்பத்தி பொருள்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை மையங்கள் தமிழகத்தில் இருந்தாலும், அதிகாரிகளின் அலட்சியம் விவசாயிகளை மீண்டும் கமிஷன் வியாபாரிகளிடம் செல்ல வைத்துவிடுகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுகளாலும் அரசின் நடவடிக்கையாலும் விவசாயிகள் பலனடையும் வகையில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

தேங்காய்

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி வட்டாரத்தில் 26,000 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. இதை நம்பி 12,000 விவசாய குடும்பங்கள் உள்ள நிலையில் இவர்களிடம் முன்பணம் கொடுத்து தந்திரமாக தேங்காய்களை மிகக்குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் வாங்கிக்கொண்டிருந்த கொடுமை தொடர்ந்துகொண்டிருந்தது. அது மட்டுமல்லாமல் 100 தேங்காய்களுக்கு 15 தேங்காய்கள் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையையும் ஏற்படுத்தி இருந்தனர்.

தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மதுரை மாவட்ட விற்பனை குழு, மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி, மேலூர் வட்டாரங்களில் தென்னை விவசாயிகளையும் வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலத்தை புதன்கிழமைதோறும் நடத்தி வருகிறது. இந்த மறைமுக ஏல நடைமுறை தென்னை விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நேரடி ஏலம்

Also Read: குறைந்தபட்ச ஆதார விலை இல்லை... வெளுத்தது வேளாண் சட்டம்!

கொரோனா காலத்தில் கூட பாதுகாப்புடன் தேங்காய் ஏலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாமும் சமீபத்தில் வாடிப்பட்டியில் நடந்த மறைமுக ஏலத்தை பார்வையிட சென்றிருந்தோம்.

விவசாயிகளும் வியாபாரிகளும் நாற்காலியில் அமர வைக்கப்பட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் மொத்தம் 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கு பெற்றனர். ரூ. 12 முதல் 12.50 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்ட நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட 22,036 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. அவை ரூ. 2,68,675 விலைக்கு எடுக்கப்பட்டு, அங்கேயே விவசாயிகளுக்கு உடனே பணம் பட்டுவாடா செய்யப்பட்டதைப் பார்த்து ஆச்சர்யம் ஏற்பட்டது. விவாசயிகள் மட்டுமல்ல, வாங்க வந்த வியாபாரிகளும் இடைத்தரகர் இல்லாமல் தரமான தேங்காய்களை நேரில் பார்த்து ஏலம் எடுத்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாடிப்பட்டி, மேலூர் வட்டாரத்தில் தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருவதால் தென்னை விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தத் தகவல் மாவட்டம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் மத்தியல் பரவி அனைவரும் வேளாண்துறையின் மதுரை விற்பனைக் குழுவைத் தொடர்புகொண்டு வருகிறார்கள்.

இது பற்றி தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மதுரை விற்பனைக்குழுத் தலைவர் மெர்சி ஜெயராணியிடம் பேசினோம், ``விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது, அவர்கள் உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்று அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. விவசாயிகள் நல்ல லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம். இதன் மூலம் அவர்களின் உழைப்பை வேறு யாரும் திருட முடியாது. வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இணைப்புப் பாலமாக நாங்கள் இருக்கிறோம்.

மெர்சி ஜெயராணி

தேங்காய் ஏலம் மட்டுமல்ல பல்வேறு தானியங்களையும் இதுபோன்று இடைத்தரகர் இல்லாமல் ஏலம் விட்டு வருகிறோம். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த நடைமுறை இருந்து வருகிறது'' என்றார்.

``வேளாண் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு முன்பே இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகள் பலனடையும் திட்டம் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுபோல் 20 வருடங்களுக்கு முன்பே மிகச் சிறு அளவிலான விவசாயிகள் பயன்படும் வகையில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட உழவர் சந்தை திட்டமும் இப்போதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றார்'' விவசாயி ஒருவர்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/coconut-farmers-happy-because-of-direct-auction-sale-in-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக