ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், ஆறு பேர் உறுப்பினர்களைக் கொண்ட சீராய்வுக் கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.
"நிதிக்கொள்கைக் கூட்டத்தில் குறுகிய கால கடன் வட்டியில் எந்த மாற்றமும் செய்யவேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி 4 சதவிகிதமாக நீடிக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், வீடு, வாகனக் கடன்களுக்கான இ.எம்.ஐ குறைய வாய்ப்பில்லை. இதேபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும். எனவே, இதன் காரணமாக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 9.5% சரியும் என கடந்த அக்டோபர் மாதம் கணிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலைகளின்படி, இந்தச் சரிவு நடப்பு நிதியாண்டில் 7.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் ஆர்.டி.ஜி.எஸ் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முறையில் தற்போது வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அனுப்பலாம். வரும் 14-ஆம் தேதி முதல் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நடைமுறைக்கு வருகிறது. இது பலருக்கும் பலனளிக்கும் வகையில் இருக்கும்.
Also Read: `90% தங்க நகைக் கடன்; மாற்றமில்லா ரெப்போ வட்டி விகிதம்!’ - ரிசர்வ் வங்கி ஆளுநர்
வங்கி மூலதனத்தைப் பாதுகாக்கவும், இழப்பை ஈடுகட்டவும், லாபத்தை தக்க வைக்கவும், செப்டம்பர் காலாண்டில் வங்கிகளின் நிதிநிலை அறிக்கையை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகளில் நிதிநிலை அறிக்கை மோசமான நிலையில் இருப்பதால், இதை கருத்தில் கொண்டு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த 2019-20 நிதியாண்டுக்கான டிவிடெண்ட் தொகை எதையும் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
வங்கிகள் கான்டாக்ட்லெஸ் கார்டுகள் எனப்படும் கார்டுகளை வழங்கி வருகின்றன. பாயின்ட் ஆப் சேல் கருவியில் உரசாமலேயே, அந்த கருவிக்கு அருகில் சென்று காட்டுவதன் மூலம் பரிவர்த்தனை செய்யலாம். இதற்கான உச்சவரம்பு தற்போது 2,000 ரூபாயாக உள்ளது. இதை தற்போது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது" என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறது.
அதிகரிக்கும் பணவீக்கம்...!
மேலும், நாட்டின் நுகர்வோர் பணிநீக்கம் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ரீடெய்ல் பணவீக்கம் கடந்த 9 மாதமாகத் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், அக்டோபர் மாதம் அதன் அளவு 7.61 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியக் காரணம், உணவு பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை உயர்வுதான். மேலும், ரீடெய்ல் பணவீக்கம் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 6.8 சதவிகிதமாகவும், நான்காம் காலாண்டில் 5.8 சதவிகிதமாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மே 2014-ல் நாட்டின் ரீடெய்ல் பணவீக்கத்தின் அளவு 8.33 சதவிகிதமாக இருந்தது. இதுதான் வரலாற்று உச்ச அளவாகும். தற்போதைய பணவீக்க உயர்வுக்கு மிக முக்கிய காரணம், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதிகமான லாபம் மற்றும் மறைமுக வரிகள்தான்.
மேலும், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த ஏப்ரல் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவிகிதமாக சரிந்தது. இதன்பிறகு பொருளாதாரம் சற்று மீண்டு வருவதாக கூறப்பட்டாலும், தொழில்துறைகள் முழுமையாக மீள்வதற்கு இன்னும் ஓராண்டு வரை கூட ஆகலாம். கொரோனா தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பது பொருளாதார சரிவு மற்றும் பணவீக்க உயர்வுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது" என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய உச்சத்தைத் தொட்ட பங்குச் சந்தை!
வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்பட மாட்டாது உள்பட ரிசர்வ் வங்கியின் பல்வேறு அறிவிப்பால் பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. இதன் காரணமாக 4.12.2020-ம் தேதி வர்த்தகத்தில் ஒரு கட்டத்தில் பங்குச் சந்தை 45,000 புள்ளிகளைக் கடந்து 45,128-ஐ தொட்டது. இத்தகைய எழுச்சி காணப்பட்டது இதுவே முதல் முறை. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் எப்.எம்.சி.ஜி தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
வர்த்தகம் முடிவில் 447 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டு எண் 45,080 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையில் 125 புள்ளிகள் உயர்ந்ததில் நிஃப்டி குறியீட்டு எண் 13,259 புள்ளிகளானது.
source https://www.vikatan.com/business/banking/changes-in-rtgs-and-inflation-target-recent-announcements-by-rbi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக