Ad

சனி, 5 டிசம்பர், 2020

தஞ்சை:`சீனியர்களை சந்திச்சி உதயநிதி நலம் விசாரிச்சிருக்கணும்!’ - ஆதரவாளர்கள் ஆதங்கம்

`தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி, வெளி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டால், அங்குள்ள கட்சி முன்னோடிகளை அவர்களது வீட்டிற்கே சென்று சந்திப்பது வழக்கம். முதலமைச்சர் பதவியில் இருந்த காலங்களிலும் கூட கருணாநிதி அதை கடைப்பிடித்தார். தற்போதைய தலைவர் ஸ்டாலினும் அதை கடைப்பிடிக்கிறார். ஆனால்,தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினோ, இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை’ என கழக சீனியர்களின் ஆதரவாளர்கள் சிலர் ஆதங்கப்படுகிறார்கள்.

எல்.கணேசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர்களின் ஆதரவாளர்கள், ‘’தி.மு.க. சட்டத் திருத்தக்குழு தலைவர் எல்.கணேசன் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் தஞ்சாவூர் மருத்துவர் கல்லூரி சாலையில் உள்ள வீட்டில் வசிக்கிறார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கட்சியை வளர்த்த முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர் எல்.கணேசன். சட்டமன்ற உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் என பதவிகளை வகித்தவர். டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட, உதயநிதி ஸ்டாலின், எல்.கணேசன் வீட்டிற்கு சென்று நலம் விசாரிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

தஞ்சாவூரில் பல மணிநேரம் தங்கியிருந்த போதும் கூட, எல்.கணேசனை நலம் விசாரிக்க உதயநிதி ஸ்டாலின் செல்லவில்லை. இத்தனைக்கும் எல்.கணேசனின் மகன் அண்ணாதுரை, தி,மு.க கழக தஞ்சை மாவட்ட பொருளாளராக பதிவி வகிக்கிறார்.

தஞ்சை சட்டமன்ற தொகுதியில் பல முறை வெற்றிப்பெற்றவர் எஸ்.என்.எம் உபயதுல்லா. தி.மு.க நகர செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்தவர். தஞ்சாவூரில் கட்சி நிகழ்ச்சி எதுவென்றாலும் தனது சொந்த செலவில் பிரமாண்டமாக நடத்தி காட்டியவர். இதனாலேயே இவர் மீது கருணாநிதி மிகுந்த அபிமானாம் கொண்டிருந்தார். 2006-11 வரையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் உபயதுல்லாவை வணிகவரித்துறை அமைச்சராக்கி அழகுப் பார்த்தார். தி,மு.க நிர்வாகிகளிடம் மட்டுமல்லாமல், கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாக, எளிமையாக பழக கூடியவர் உபயதுல்லா. கட்சிக்காக கடுமையாக உழைத்த உபயதுல்லா தற்போது வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நிலை நலிவுற்று இருக்கிறார். தஞ்சாவூரில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் இவரை நலம் விசாரிக்க செல்லவில்லை. தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி, உயிருடன் உள்ள கழக முன்னோடிகளின் வீட்டிற்கு செல்வதோடு மட்டுமல்லாமல், மறைந்த கழக முன்னோடிகளின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். தற்போதைய தலைவர் ஸ்டாலினும் இதை இயன்றவரை கடைப்பிடித்து வருகிறார்.

கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் உதயநிதி ஸ்டாலின் தற்போது டெல்டா மாவட்டங்களில் துவக்கிய தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் என்பது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமனது. கழக முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்துவதும், அவர்களது வாழ்த்துகளை பெறுவதும் மிகவும் அவசியமானது. தி,மு.க-வின் முக்கிய தலைவர்களாகவும், முன்னாள் அமைச்சர்களாகவும் திகழ்ந்த மறைந்த மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி ஆகியோரின் வீட்டிற்கு சென்று, மரியாதை செலுத்தாதது பெரும் குறை. கட்சியை வளர்க்க, வலிமைப்படுத்த ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. தி.மு.க.-வை பொறுத்தவரை, கழக முன்னோடிகளுக்கு மரியாதை செய்வது மிகவும் அவசியமானது. மற்ற மாவட்டங்களிலாவது இதை உதயநிதி ஸ்டாலின் கடைப்பிடிக்கப்பட்டும். இவருக்கு தற்போது ஆல் இன் ஆலாக திகழும் ஐபேக்காவது இதை அவரிடம் வலியுறுத்த வேண்டும்.” என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/udhayanithi-not-met-any-seniors-on-tanjore-supporters-upset

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக