Ad

சனி, 5 டிசம்பர், 2020

திருச்சி: `எங்கள் மீது மட்டும் வழக்கு போடுகிறார்கள்!’ - கொதிக்கும் தி.மு.க-வினர்

அரசு அனுமதியில்லாமல் ஊரடங்கு நேரத்தில் கூட்டம் நடத்தியதால், அன்பில் மகேஷ் உள்ளிட்ட தி.மு.க வினர் 1,250 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. `முதல்வர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் அரசின் சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகிறதா? அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், எங்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தால் என்ன அர்த்தம்?’ என்று ஆதங்கப்படுகிறார்கள் திருச்சி தி.மு.க-வினர்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயச் சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்து உள்ள நிலையில், அவர்களின் இந்த போராட்டம் 10 நாள்களை கடந்திருக்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் போராட்டம்

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். தொடர்ந்து தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.கவினர் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சட்ட மன்ற உறுப்பினர் செளந்தரப்பாண்டியன்,

திமுகவினர் போராட்டம்

துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யாமொழி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் உள்ளிட்ட 1,250 பேர் மீது கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் பேசினோம். ”முழுக்க முழுக்க எங்கள் மீதுள்ள பயத்தால் அ.தி.மு.க அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். டெல்லியில் கடும் குளிரையும் தாண்டி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்துப் பேசுவதற்கு மோடிக்கு நேரம் இல்லை. ஆனால் நடிகர் நடிகைகளை மட்டும் சந்திக்க நேரம் இருக்கிறது. இது வெட்கமாக இல்லையா? மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தைக் கையாளாகாதா எடப்பாடி அரசும் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இச்சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது தவறு என்கிறது மாநில அரசு. தமிழகம் முழுவதும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சுற்றி வருகிறார்களே. அங்கெல்லாம் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா? அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்களா? நாங்கள் மட்டும் அரசின் சட்டத்தை மீறிவிட்டதாக எங்கள் வழக்குப் போடுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.இந்த வழக்கையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்றனர்.



source https://www.vikatan.com/news/politics/dmk-slams-government-over-the-case-filed-for-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக