வேளாளர் பெயரில் மாற்று இனத்தவரை குறிப்பிடக்கூடாது என்று மதுரையில் தமிழக முதலமைச்சர் உருவ படத்தை எரித்து சாலை மறியல் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
7 உட்பிரிவிவுகளில் அழைக்கப்படும் மக்களை ஒரே இனமாக தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அறிவிக்க வேண்டும் என்றும், பட்டியல் சாதியிலிருந்து வெளியேற்றி தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளும், ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தென்மாவட்ட சுற்றுப்பயணம் வந்த முதலமைச்சர் எடப்பாடி, சிவகங்கையில் பேசும்போது, ''7 உட்பிரிவுகளில் வாழும் மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும்'' என்றார். இதை பல்வேறு தேவேந்திர குல வேளாளர் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அதே நேரம் பட்டியலிலிருந்து வெளியேற்றியும் அறிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பழனிசாமி, அன்னலட்சுமி, சகிலாகணேசன், பாலசுப்ரமணியன், தாஸ்,வெற்றி ஆகியோர் முன்னிலையில் அனைத்து வெள்ளாளர்-வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நேற்று மதுரை சிம்மக்கல் வஉசி சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
''எங்களுக்கு சொந்தமான வேளாளர் என்ற பெயரை மாற்று இனத்தவருக்கு வழங்கக் கூடாது, மத்திய அரசுக்குகு இதனை பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றனர். '
அரசுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள், திடீரென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலந்து செல்லவில்லை. அதன் பிறகு 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இதேபோல் விருதுநகரிலும் வெள்ளாளர் சமூகத்தினர் ஆர்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் முன்பு அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.மேலும் சிலர் மண்டபத்தின் மீது கல் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் விருதுநகரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/protest-against-cm-in-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக