கடந்த அக்டோபர் முதல் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை நாம் அறிவோம். இறப்பு விகிதம் கூட கணிசமாகக் குறைந்துவிட்டது. அதாவது, ஒற்றை இலக்கத்துக்கு வந்துவிட்டது. பலரும் இரண்டாம் அலை வராது என்ற நம்பிக்கைக்கு வந்துவிட்டார்கள். தொற்று குறைவாகவே இருக்கிறதாமே... கொரோனா வீரியம் குறைந்துவிட்டதாமே... இனி எந்தப் பிரச்னையும் இல்லையாமே... தடுப்பூசி வராமலேயே பலருக்கும் நோய்க்கான மந்தை எதிர்ப்பாற்றல் (Natural Herd Immunity) வந்துவிட்டதாமே?
இனி நாம் சகஜமாக இருக்கலாமாமே... தடுப்பூசிகூட தேவையில்லையாமே என்றெல்லாம் ஆளாளுக்கு நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மேற்கூறிய அனைத்தும் உண்மையாக இருக்கக் கூடாதா என்ற ஆசை எனக்கும் உண்டுதான்! இதில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், இது தொற்றுநோய்! அடுத்தவரிடம் இருந்து தொற்றாமல் பரவாது!
அதே நேரத்தில் ஒவ்வொரு தொற்றுக்கும் ஒருசில மாறுபட்ட விதிகள் உண்டு. அந்த விதிகளின்படியே இவை தொற்றும்.
நம் உடல் ஒரு விந்தையான படைப்பு. ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு மனிதனுக்கு, வித்தியாசமான விதத்தில் அணுகும். அதை வைத்துப் பார்த்தால் கொரோனா தொற்று, தற்போது வீரியம் குறைவாகக் காணப்படுவதுபோல் இருப்பதாகவும், தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், நமக்கு நோய் பாதிப்பு குறைந்துபோனதாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
தீபாவளிப் பண்டிகை ஒன்றுகூடலால் எந்த மாற்றமும் இல்லை என்பது ஒருவித அசாத்திய அலட்சியத்தை ஏற்படுத்திடக் கூடாது!
சில நேரங்களில், இந்த வைரஸ் கிருமிகள் தம்மை முன்புபோல் அல்லாது வேறுமாதிரி உருமாற்றிக்கொள்ள (Antigenic Differentiation) எடுத்துக்கொள்ளும் காலமாகக்கூட இது இருக்கலாம். அடுத்த அலைக்கான ஓர் இடைக்கால நகர்தலாக (Transitory season) கூட இருக்கலாம்.
காரணம், இதற்கு முன்னர் வந்திருந்த வைரஸ் எதிர்ப்பாற்றல் (Viral Antibodies) நம்மில் பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பும் உண்டு. ஆனால், இதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்யாமல், நாமே நோய் இல்லை. நம்மை விட்டுச் சென்றுவிட்டது. இனி கவலையில்லை என வாழ்வது அபத்தம்.
எப்படி இதை உறுதி செய்வது ?
இதுவரை RT-PCR எனும் நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டிருந்த அரசு இனி, நோய் எதிர்ப்பாற்றல் பரிசோதனை (Mass Antibody testing) செய்திட முனைய வேண்டும்.
அதில் 70% மக்கள்தொகைக்கும் மேலாக Antibodies எனும் எதிர்ப்பாற்றல் அணுக்கள் உடலில் தென்பட்டால் நாம் சரியான பாதையில் செல்கிறோம். நமக்கான மந்தை எதிர்ப்பாற்றல் கிடைத்துவிட்டது என எடுத்துக்கொள்ளலாம்.
அதே நேரத்தில் புதிய தொற்றுகளை அறியும் RT-PCR எனும் பரிசோதனையைக் காட்டிலும், மிகவும் துரிதமாகவும் விலை குறைவாகவும் செய்திடும் FELUDA போன்ற POC (Point of Care Antigen Examination டெஸ்ட்களை செய்ய ஆரம்பிக்கலாம்
Also Read: ஃபைஸர் தடுப்பூசி... அனுமதி கொடுத்த பிரிட்டன்... முடிவுக்கு வருகிறதா கொரோனா?
நோய் உள்ளவர்களையும் (Active cases), நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்களையும் (Antibodies positive Cases) பிரித்திடலாம். தடுப்பூசி வருவதற்குள் இதை முறையாகச் செய்து முடித்துவிட்டால், நமக்கு கிடைக்கும் தடுப்பூசிகளை யாருக்கு முன்னுரிமை அளித்து தரப்பட வேண்டும் எனும் வியூகத்தையும் இதன் மூலம் அமைத்துவிடலாம்.
பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றிய முடிவும் எளிதாகக் கிட்டும்.
அடுத்ததாக, இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து (Strain differentiate) வந்தால் தற்போது இருக்கும் நோய் வீரியத்தைவிட பன்மடங்கு மோசமானதாக இருக்கலாம்! குழந்தைகளை வெகுவாகத் தாக்கும் கொடும் வைரஸாக உருவெடுக்கலாம். இளவயதினரை அதிகமாகத் தொற்றும் காரணியாக இருக்கலாம். இறப்பு விகிதம் அதிகப்படும்படியானதொரு தொற்றாகவும் மாறலாம்.
அல்லது மிக வீரியம் குறைந்த சாதாரண இருமல், சளி கொடுத்து விலகும் வழக்கமான HuCov (Human Coronavirus) தொற்றாகக் கூட எளிதாக மாறிவிட்டு நம்மைவிட்டு நகரலாம்!
Also Read: கோவிட்-19: இரண்டாம் அலை வருமா...!?
ஆனால், அதற்கான முன்னெடுப்புகளும் தற்காத்தல்களும் மிக அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்தல் அவசியம். அடுத்த அலை வீரியமானதாக வருமோ, எந்தப் பாதிப்பையும் கொடுக்காத மிகச்சாதாரண நோய்ப்பரவலாக வருமோ, நமக்கு தெரியாது. ஆனால், தடுப்பூசி வரும்வரை ``நமக்கு எதிர்ப்பாற்றல் இருக்கிறது" எனும் அறிவியல் உண்மை தெரிவது வரை... நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் முகக்கவசம் மட்டும்தான்.
அதைச் சரியாகக் கடைப்பிடித்து, அடுத்தடுத்த பாதிப்பை தவிர்த்திட முயல்வோம்.
source https://www.vikatan.com/health/healthy/why-we-should-be-more-careful-in-controlling-next-wave-of-coronavirus
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக