Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

பாரிமுனை தல்வார் டவரும், ஆரஞ்சு டிவியும்! இடியட் பாக்ஸ் - 1

ரமணகிரிவாசன், தமிழ்நாட்டின் மிக முக்கியமான வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பொறுப்பில் பணியாற்றியவர். 'கனா காணும் காலங்கள்', 'ஆபிஸ்' 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களின் கதாசிரியர். 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' உள்ளிட்டப் படங்களுக்கு திரைக்கதை - வசனங்கள் எழுதியவர்.

காட்சி - ஒன்று

பாரிமுனை...

நீங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கடிதம் எழுதி இருந்தால் விலாசத்தில் 600 என பின்கோடு எழுதத்துவங்குகிறபோது 600001 எதுவாக இருக்கும் என்கிற கேள்வி ஒரு முறையாவது வந்துபோயிருக்கும். அந்த ஒன்றாம் எண் பின்கோடுக்கு சொந்தமான இடம்தான் பாரிமுனை. மெட்ராஸின் தலை அதுதான். அங்கிருந்துதான் சென்னை கைகால் முளைத்து பெருநகரமாக பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது. சென்னையின் நீண்ட நெடிய வரலாறு இன்னமும் மிச்சமிருக்கும் ஒரு சில பகுதிகளில் பாரிமுனையும் ஒன்று.

பாரித்தெருவின் முனையில் உயர்ந்து நிற்கும் பாரி பில்டிங். அதன் ஒருபுறம் பர்மா பஜார். மறுபுறம் உயர்நீதிமன்றம். உயர்நீதிமன்றத்தின் எதிர்புறம் தம்புசெட்டி தெரு, கோவிந்தப்பநாயக்கன் தெரு, நைனியப்பன் நாயக்கன் தெரு, காசிசெட்டி தெரு என வரிசையாக பல தெருக்கள். ஒவ்வொரு தெருவுக்கும் தனிச் சிறப்பு உண்டு.

தம்புசெட்டி தெரு முழுக்க ஹார்ட்வேர் பொருட்கள், செராமிக் டைல்ஸ்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடைகள் இருக்கும். லிங்கிசெட்டி தெரு முழுக்க எலெக்ட்ரிக் மோட்டார்கள் பம்புகள். ஆண்டர்சன் தெருமுழுக்க பிரின்ட்டிங் பைண்டிங் பொருட்கள், பேப்பர்கள் நோட்புக்குகள், டைரிகள். குடோன் தெரு முழுக்க துணிமணிகள் என ஒவ்வொரு தெருவும் ஒரு குறிப்பிட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகளால் நிரம்பியிருக்கும். சில்லறை வியாபாரம் அல்ல எல்லாமே மொத்த வியாபாரக்கடைகள்.

வெள்ளைக்காரர்கள் சென்னையை ஆட்சி செய்ததற்கான அத்தாட்சிகளாக பழைய சிவப்பு நிற பெரிய பெரிய கட்டடங்களை அங்குதான் பார்க்கமுடியும். ஒருகாலத்தில் மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்யும் கொத்தவால் சாவடி, மொத்தமாக பூக்கள் விற்பனை செய்யும் ஃபிளவர் பஜார், வெளியூர் செல்லக் கூடிய பேருந்துகளுக்கான பிராட்வே பேருந்து நிறுத்தம் என ஒட்டு மொத்த சென்னையின் தேவைகள் அனைத்தும் குவிந்து கிடக்கிற இடமாக பாரிமுனைதான் இருந்தது.

2000-ம்களில் பேருந்து நிலையம், மொத்த காய்கறி மார்கெட், பூ மார்கெட் எல்லாம் கோயம்பேட்டிற்கு இடம் பெயர்ந்துவிட்டன. சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் ஷாப்பிங் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக இருந்த பாரிமுனையை தி.நகர் முற்றிலுமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. மெல்ல மெல்ல பாரிமுனை தனது பொலிவை இழந்து வயதுக்குப் பொருந்தாத மேக்கப்புடன் இருக்கும் முதிர்ந்த நடிகையை போல காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அவள் பேரழகியாக இருந்திருப்பாள் என்பது உற்றுப் பார்ப்பவர்களுக்கு புரியும். புதியதாக பாரிமுனை வருபவர்களுக்கு அது வாழ்ந்து கெட்ட மனிதர்களின் வீட்டை நினைவூட்டும். ஈசிஆரும், ஓஎம்ஆரும், கிண்டி தொழிற்பேட்டையும் அறிவியலின் அடுத்த வளர்ச்சியான ஐடி நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடங்களாக மாறிவிட பாரிமுனை எண்பதுகளிலேயே பின்தங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரிமுனையின் இயல்புக்கு சற்றும் பொருந்தாத ஒரு கட்டடமாக அதன் நடுவே நின்று கொண்டிருந்தது 'தல்வார் டெக் பார்க்'. சந்தையில் தொலைந்துபோன குழந்தை மாதிரி சுற்றுப்புறத்திற்கு சற்றும் பொருந்தாமல் தனியாக நின்று கொண்டிருக்கும் 14 மாடி கட்டடம் அது. பல ஐடி கம்பெனிகள் அந்த கட்டடத்தின் பல தளங்களை ஆக்கிரமித்திருந்தன. உள்ளே நுழைந்து விட்டால் அது மில்லினியல்ஸின் உலகம். பில்டிங்கை விட்டு வெளியே வந்தால் டைம் மிஷினில் ஏறி முப்பது வருடம் பின்னால் போனது போல வேறு ஒரு உலகம்.

இடியட் பாக்ஸ் - 1

தல்வார் டெக் பார்க்கின் பத்து, பதினொன்று, பன்னிரெண்டு என மூன்று தளங்களில் இயங்கிக் கொண்டிருந்தது ஆரஞ்ச் டிவி. இது போன்ற ஐடி நிறுவனங்களில் நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையான கேன்டீன்கள் இருக்கும். அங்கு வேலை செய்பவர்களுக்கு சலுகை விலையில் அனைத்தும் கிடைக்கும். பட்டனை அழுத்தினால் காபி, டீ என சகலத்தையும் கோப்பைக்குள் கொண்டுவந்து நிறைக்கும் இயந்திரங்கள் தளத்துக்கு நான்கைந்து இருக்கும். ஆனாலும், அந்த நிறுவனங்களுக்கு வெளியே இருக்கும் ஒரு சின்ன டீக்கடையில் கையில் சிகரெட்டும் கண்ணாடி கிளாஸில் டீயும், கழுத்தில் கம்பெனி அடையாள அட்டைகளையும் தொங்கவிட்டபடி ஒரு பெரிய கூட்டத்தைப் பார்க்க முடியும்.

சத்தமாக சிரித்துப் பேசியபடி சந்தோஷமாக நிற்கும் அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் டீ குடிக்க வந்ததாக தோன்றாது. அலுவலகக் கட்டடத்துக்குள் பறிபோன மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் அவர்கள் அந்த டீக்கடையில் மீட்டெடுக்க முயல்வது போலவே தோன்றும். மூச்சடைக்கும் வேலைப்பளுவுக்கு நடுவே அவர்கள் சுதந்திரகாற்றை சுவாசிப்பது அந்த டீக்கடைகளில் இருக்கும் சில நிமிடங்களில்தான். சென்னையின் அழுத்தமான வாழ்வில் இருந்து சிறு விடுதலை தரக்கூடியவை டீக்கடைகள். தல்வார் டெக்பார்க்கின் காம்பவுண்டுக்கு வெளியேயும் டீக்கடைகள் இருந்தன. அதில் ஒன்றுதான் கண்ணன் டீக்கடை.

தட்...தட்... சத்தத்துடன் புல்லட்டை கண்ணன் கடையருகே கொண்டுவந்து நிறுத்தினான் கார்ல் மார்க்ஸ். நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தான். கறுப்பு நிற முழுக்கை சட்டையை இன் செய்து முழங்கைக்கு மேலே மடித்து விட்டிருந்தான். கையில் சில்வர் வளையம் ஒன்று. மற்றொரு கரத்தில் சற்று தடிமனான வாட்ச். ஷூ அணிந்திருந்தான். சட்டையின் முதல் பட்டன் திறந்திருந்தது. கழுத்தில் அவன் போட்டிருந்த வெள்ளி சங்கிலியில் சின்ன டாலர் ஒன்று பாதி தெரிந்தும் தெரியாமலும் மறைந்திருந்தது. மாநிறம். உறுதியான உடற்கட்டு சீரான மெல்லிய தாடி. தலைமுடி காற்றில் அலைந்து கொண்டிருந்தது. அவனை கடந்து செல்பவர்கள் மீண்டும் ஒரு முறை திரும்பி அவனை பார்க்க வைக்கிற வசீகரம் அவனிடம் இருந்தது. அணிந்திருந்த கூலிங்கிளாஸை கழட்டி நெஞ்சில், சட்டை பட்டனுக்கிடையில் மாட்டிக் கொண்டவன் கண்ணனைப் பார்த்து புன்னகைத்தான். கண்ணனின் முகத்திலும் முகத்திலும் கார்ல் மார்க்ஸைப் பார்த்ததும் சிறு புன்னகை.

''வா சார்'' என அவன் வணக்கம் வைத்தபடியே கிங்ஸை எடுத்து கார்ல் மார்க்ஸிடம் நீட்டினான்.

“கண்ணா ஒரு டீ” என்றவன் கண்ணனின் முகத்தைப் பார்க்காமல் ஏதோ யோசனையில் இருக்கிற பாவனையில் சிகரெட்டைப் பற்றிவைத்துவிட்டு புகைக்கிற சாக்கில் கொஞ்சம் தள்ளிப்போனான்.

வாட்சை திருப்பி நேரத்தை பார்த்தான் மார்க்ஸ். மணி 11. இத்தனை வருடத்தில் அவன் ஒரு போதும் இத்தனை தாமதமாக அலுவலகம் வந்ததேயில்லை. விடிய விடிய வேலை செய்துவிட்டு காலை 11 மணிக்கு ஆபிஸிலிருந்து கிளம்பி இருக்கிறானே ஒழிய 11 மணிக்கு ஆபிஸ் வருவது அவனுக்கு நினைவு தெரிந்து இதுவே முதல் தடவை. கண்ணன் டீயை கொண்டு வந்து நீட்ட மார்க்ஸ் வாங்கிக் கொண்டான். டீயை வாங்கி ஒரு மடக்கு குடிக்க இஞ்சியின் சுவை இதமாகத் தொண்டையில் இறங்கியது.

“சார்...”

கண்ணனைத் தவிர்க்க முடியாது எனப் புரிந்துகொண்டு மார்க்ஸ் அவனை ஏறிட்டு பார்த்தான்.

“என்ன கண்ணா?”

“என்னென்னமோ சொல்றாங்களே சார் உண்மையா?”

“என்ன சொல்றாங்க?”

“இல்ல சார்... நம்ம ஆபிஸ்ல நிறைய பேர வேலைய விட்டு தூக்கப் போறாங்கன்னு”- கண்ணன் இழுத்தான்.

“யார் சொன்னது?”

“எனக்குத் தெரியும் சார்”

இடியட் பாக்ஸ் - 1

அலுவலகத்தின் அனைத்து ரகசியங்களும் தெரிந்த ஒரே ஆள் அலுவலகத்திற்கு வெளியே டீ கடை வைத்திருக்கும் கண்ணன் ஒருவன்தான். தம்மோடும் டீயோடும் விவாதிக்கபடும் அத்தனை அலுவலக விஷயங்களையும் பரபரப்பாக வேலை செய்தபடி காதில் வாங்கி மனசுக்குள் ஓரமாக போட்டு வைத்துக் கொள்வான் கண்ணன்.

அவனுக்குப் பிடித்த ஆட்களுக்கு எதிராக ஏதேனும் விஷயம் என்றால் மட்டும் அதை மெதுவாக அவர்கள் காதில் போட்டு வைப்பான். அப்போது கூட யார் சொன்னது என்பதை அவன் ஒரு போதும் வெளியே சொல்ல மாட்டான். தர்மம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. தன்னை போட்டு கொடுத்துவிடுவார்கள் என்கிற பயம்தான். அதைவிட முக்கியமாக சம்பந்தபட்டவர்கள் உஷாராகித் தன் முன்னால் பேசாமல் இருந்துவிட்டால் மேற்கொண்டு சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்காமல் போய்விடும் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வும் அதில் கலந்திருந்தது.

கண்ணன் அவனது பதிலை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க, மார்க்ஸ் அவனைத் தீர்க்கமாக பார்த்தபடி இருந்தான்.

“என்ன சார் நிஜமாவே ஆளுங்கள தூக்க போறாங்களா சார்?”

“ஆமா கண்ணா... அப்படித்தான் பேசிக்கிறாங்க!”

- Stay Tuned...



source https://cinema.vikatan.com/literature/idiot-box-a-new-series-by-ramanagirivasan-part-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக