கேரள மாநிலம் கொச்சியை அடுத்த நெடும்பாசேரி பகுதியில் நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி அதன் மறுமுனையை காரின் பின்பகுதியில் கட்டி காரை ஓட்டிச் சென்றிருக்கிறார் ஒருவர். காரின் பின்னால் ஓடிச் சென்ற நாய், ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் ரோட்டில் விழுந்தது. அப்போதும் கார் வேகமாக சென்றுகொண்டிருந்தது. சாலையில் உரசியபடியே சென்றதால் நாய்க்கு காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. அப்போது பைக்கில் சென்ற அகில் என்ற இளைஞர், இந்த கொடூர செயலை காரின் பின்னால் சென்றபடி மொபைல் போனில் வீடியோ எடுத்தார். பின்னர், காரை மறித்து நிறுத்தியவர் கார் ஓட்டிச் சென்றவரிடம் எதற்காக இப்படி செய்கிறார் என கேட்டுள்ளார். அதற்கு கார் ஓட்டிச் சென்ற யூஸப் என்பவர் "நாய் செத்தால் உனக்கு என்னடா" எனக்கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த நாயை அவிழ்த்து விட்டுவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அகில், அந்த நாயை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்திருக்கிறார். அகில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலானது. இதுகுறித்து அகில் கூறுகையில், ``அந்த நாய் அவரது வீட்டில் வளர்த்தது என தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்காததால், அதை எங்காவது விட்டுவிட வேண்டும் என்பதற்காக காரின் பின்புறம் கயிற்றால் கட்டி இந்த கொடுமை செய்திருக்கிறார். நான் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோதுதான் இந்த கொடுமையைப் பார்த்தேன்.
தொலைவில் இருந்து பார்த்தபோது நாய் காரை துரத்திக்கொண்டு ஓடுவதுபோன்று தெரிந்தது. அருகில் சென்றபோதுதான் காரில் நாய் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. ஒருகட்டத்தில் நாய் ரோட்டில் விழுந்து, சாலையில் இழுத்துக்கொண்டே சென்றதால், நான் காரை நிறுத்தினேன். இப்போது நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுள்ளது. அந்த நால் எளிதில் மனிதர்களிடம் பழகுகிறது. நாயை கொடுமை செய்ய எப்படிதான் மனது வந்ததோ" என்றார்.
இந்த சம்பவத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் செங்கமநாடு காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டிச் சென்ற நெடும்பாசேரி சாலாக்க பகுதியைச் சேர்ந்த யூஸப் என்பவரை போலீஸார் கைது செய்தனர். குடும்பத்தின ர் நாயை விரும்பாததால் அதை எங்காவது விட்டுவிடுவதற்கு இப்படி செய்ததாக யூஸப் ஒப்புக்கொண்டிருக்கிறார். மோட்டார் வாகன சட்டப்படியும் யூஸப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டதுடன், லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/news/crime/pet-dog-tied-to-car-dragged-on-road-kerala-police-books-owner
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக