வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணுவிடம் தேர்தல் செலவுக்காகக் கொடுத்துவைத்திருந்த பெரும் தொகையை, அவர் மறைவுக்குப் பின்னர் மீட்டெடுக்கப் பெரிய போராட்டத்தையே நடத்தியது கட்சித் தலைமை. டெல்டா பகுதியைச் சேர்ந்த கட்சி முக்கியஸ்தர் ஒருவர் துரைக்கண்ணுவின் மகன் அய்யப்பன் தரப்புக்கு `வைத்தியம்’ அளித்து, பாதிப் பணத்தைக் கைப்பற்றித் தன்வசம் வைத்திருக்கிறாராம்.
`பாபநாசம் தொகுதி உனக்குத்தான்ப்பா. உன் சீட்டுக்கு நாங்க கேரன்டி’ என்று அய்யப்பனையும் கன்ட்ரோல் எடுத்திருக்கிறாராம். இந்தநிலையில், அய்யப்பன் தரப்பிடமிருந்து முழுப் பணத்தையும் பெற்ற பிறகு, அவரைக் கழற்றிவிட அ.தி.மு.க தலைமை முடிவெடுத்திருப்பதால், சீட் கிடைக்குமா, கிடைக்காதா என்கிற பரிதவிப்பில் இருக்கிறது அய்யப்பன் தரப்பு.
அய்யப்பா... உங்களுக்கு சீட்டுன்னு சொன்னதெல்லாம் பொய்யப்பாவா?!
மத்திய அரசுப் பணியிலிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப் மிட்டல், தமிழக கேடருக்கு கடந்த டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் திரும்பியிருக்கிறார். ஏ.டி.ஜி.பி அந்தஸ்திலுள்ள அவருக்கு இன்னும் பொறுப்பு ஒதுக்கப்படவில்லை.
தேர்தல் சமயத்தில் சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அல்லது தேர்தல் பிரிவுக்குப் பொறுப்பாக நியமித்து, ஆட்டத்தை ஆட டெல்லி முடிவெடுத்திருக்கிறதாம். சந்தீப்பின் தமிழக வருகை ஐ.பி.எஸ் வட்டாரங்களில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுவரும் என்கிறது காக்கிகள் வட்டாரம். சந்தீப்...
தேர்தல் வேலைகளைச் சந்தியுங்க... அதுக்கு முன்னாடி கொஞ்சம் சிந்தியுங்க!
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சமீபத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க போராட்டம் நடத்தியது. சேலம் மாவட்டம், எருமாபாளையம் கந்தாஸ்ரமம் பின்புறம் தனியாருக்குச் சொந்தமான எஸ்.ஆர்.பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஆனால், ஊருக்கு வெளியே இந்த இடத்தைத் தேர்வு செய்தது ஸ்டாலினுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம்.
``சேலம் தி.மு.க எம்.பி-யான எஸ்.ஆர்.பார்த்திபனுக்குச் சொந்தமானது என்பதாலேயே இந்த இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த மைதானம் மலைக்குன்றுகளைத் தாண்டி நகருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. மைதானத்துக்குச் செல்ல குறுகலான ஒரே வழிதான் இருக்கிறது. அதனால், போராட்டத்துக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மலை அடிவாரத்திலேயே நின்றுகொண்டார்கள்’’ என்கிறது தி.மு.க வட்டாரம். மைதானத்தில் கூட்டம் குறைவாக இருந்ததால் கோபமடைந்த ஸ்டாலின், கூட்ட ஏற்பாட்டாளர்களைக் கடிந்துகொண்டாராம்.
போராட்டத்தையும் விளையாட்டா நினைச்சிட்டாங்கபோல!
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை மையமாகவைத்து அடிக்கடி சர்ச்சைகள் எழுவது வழக்கம். இப்போது அவரின் உதவியாளர் பாக்கியா என்பவரின் பண பேர ஆடியோ ஒன்று கட்சித் தலைமைக்குக் கிடைத்திருக்கிறதாம். சமீபத்தில், காஞ்சிபுரம் ஒன்றிய நிர்வாகி ஒருவரை மாற்றி உத்தரவு பிறப்பித்தது கட்சித் தலைமை. புதிதாக ஒரு நிர்வாகியை நியமிக்க ஆர்.எஸ்.பாரதியின் உதவியாளர் பாக்கியா என்பவர் 13 லட்சம் ரூபாய் பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோ வெளியாகியிருக்கிறது.
இந்த ஆடியோவுடன் ஸ்டாலினைச் சந்தித்த பாதிக்கப்பட்ட ஒன்றிய நிர்வாகி தரப்பினர், `நம்ம கட்சிக்குள்ளேயே இப்படிப் பணத்துக்காகப் பதவி போடுறாங்களே... உழைச்சதுக்கு இதுதான் மரியாதையா?’ என்று பொங்கிவிட்டார்களாம். டென்ஷனான ஸ்டாலின், சம்பந்தப்பட்டவர்களை கண்டித்ததுடன், ஒன்றிய நிர்வாகி மாற்றத்தை நீக்கியிருக்கிறார்.
பாக்கியா, சகல செளபாக்கியமா வாழ ஆசைப்பட்டிருப்பாருபோல!
காங்கிரஸ் கட்சியில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மாநில நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, அனைத்து கோஷ்டிகளையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக துணைத் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்.
இந்த ஐடியாவை அழகிரிக்குக் கொடுத்ததே முன்னாள் தலைவர் ஒருவர்தானாம். இந்த அறிவிப்புக்குப் பிறகாவது சத்தியமூர்த்தி பவனில் சண்டைகள் மூளாது; கோஷ்டிப்பூசல் ஒழியும் என்பது அழகிரியின் எதிர்பார்ப்பு.
அப்ப கதர் சட்டை சேல்ஸ் குறைஞ்சிடுமே!
தி.மு.க மேற்கு மண்டலப் பொறுப்பாளரான கொறடா சக்கரபாணியும் ஐபேக் டீமும் இணைந்து, டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு தெற்கு மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முத்துசாமிக்கு எதிராகப் பல நிர்வாகிகள் குமுறியிருக்கிறார்கள். ``அ.தி.மு.க-வுல இருந்து வந்ததாலோ என்னவோ, யாரும் அவரை எதிர்த்து பேசக் கூடாதுன்னு நினைக்கிறாரு. காலங்காலமா இருக்கும் கட்சிக்காரர்களை மதிக்குறதே இல்லை. முத்துசாமியாலதான் போன தேர்தல்ல நாம ஜெயிக்க முடியாமப் போச்சு.
Also Read: ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்த ம.பி முதல்வர் முதல் அப்செட்டில் ரஜினி வரை! - கழுகார் அப்டேட்ஸ்
இந்த தடவையும் அந்தத் தப்பு நடந்துடக் கூடாது’’ என்று வெடித்துவிட்டார்களாம். இதையடுத்து, ஐபேக் டீம் முத்துசாமியிடம் மட்டும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தனியாகப் பேசியிருக்கிறது. அதேபோல, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் மீதும் உடன்பிறப்புகள் பக்கம் பக்கமாகப் புகார்க் கடிதம் வாசித்திருக்கிறார்கள். ``ஈரோடு மாவட்டத்திலுள்ள இரண்டு மாவட்டச் செயலாளர்களையும் மாத்துங்க. இல்லைன்னா ஈரோட்டுல இருக்குற எட்டு தொகுதிகளின் வெற்றியையும் மறந்துடுங்க’’ என்று நிர்வாகிகள் கோரஸ் பாடவும், ஐபேக் டீம் மட்டுமன்றி கட்சித் தலைமையும் அதிர்ந்துபோயிருக்கிறதாம்.
முத்துசாமியோட குத்துச்சண்டைன்னு சொல்லுங்க!
வேல் யாத்திரையை நிறைவு செய்திருக்கும் பா.ஜ.க-வின் ஹிட் லிஸ்ட்டில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியும் இருக்கிறதாம். இங்கு பா.ஜ.க சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யுமான சசிகலா புஷ்பாவைக் களமிறக்கக் காய்நகர்த்துகிறது கமலாலயம்.
இதற்காக அ.தி.மு.க கூட்டணியில் திருச்செந்தூரைப் பெற்றே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். `மினரல்ஸ்’ தொழிலதிபர் தரப்பும் சசிகலா புஷ்பாவுக்குக் கைகொடுக்கத் தயாராக இருக்கிறதாம்.
இதற்கிடையில், சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய உறவினரான ஆறுமுகநேரி ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க சார்பாக இதே தொகுதியில் போட்டியிட முயல்கிறார். தீபாவளியில் தொடங்கி, தொகுதிக்கு உட்பட்ட பெண் வாக்காளர்களைக் கவர வீடு வீடாக ‘குக்கர்’ பரிசளித்துவந்தவர், பா.ஜ.க-வின் திட்டத்தை அறிந்து, குக்கர் வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கிறாராம். ``தி.மு.க-வை தோற்கடிக்கணும்... அதுக்காக, சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவு அளிக்கவும் தயாரா இருக்கோம்’’ என்று சுபாஷ் பண்ணையார் தரப்பும் முஷ்டியை முறுக்குவதால், தூத்துக்குடி அரசியல் வட்டாரம் சூடுபிடித்திருக்கிறது.
சூரியனை நோக்கிப் பாயும் வேல்... அடடே நல்லாயிருக்கே டைட்டில்! (உதயநிதி கேட்ச் பண்ணுங்க)
தேனி மாவட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே நீண்டநாள்களாகப் பனிப்போர் நடந்துவருகிறது. `அரசு ஒப்பந்தப் பணிகளில், தனக்கு நெருக்கமான சில நபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்’ என்று ஓ.பி.எஸ் மீது கட்சி நிர்வாகிகள் சிலர் பொருமலில் இருக்கிறார்கள். இது தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் சிலர் முதல்வர் பழனிசாமி தரப்பினரை சென்னையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்களாம்.
ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடிக்கு செக் வைத்ததால், பன்னீர் மீது ஆத்திரத்தில் இருக்கும் எடப்பாடி தரப்பு, பன்னீரின் சொந்த மாவட்டமான தேனியிலேயே அவருக்கு எதிராக அரசியலை ஆரம்பிக்கவே இப்படி கொம்புசீவி விட்டிருக்கிறதாம். இதையடுத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலுமே எடப்பாடி ஆட்களை போட்டியிடவைக்க திட்டம் தயாராகிவருகிறதாம்.
பன்னீருக்குக் காத்திருக்குது வெந்நீர்!
source https://www.vikatan.com/news/politics/from-rs-bharatis-audio-to-epss-move-against-ops-kazhugar-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக