Ad

சனி, 12 டிசம்பர், 2020

தென்காசி: திருட்டில் ஈடுபட்ட நபரைப் பிடிக்கச் சென்ற போலீஸுக்கு அரிவாள் வெட்டு!

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பூட்டிய கடைகளை உடைத்துத் திருடுவது, தனியாக சாலையில் செல்பவர்களை வழிமறித்து பணம் நகைகளைப் பிடுங்கிச் செல்லும் சம்பவங்கள் சில மாதங்களாக அதிகரிக்கத் தொடங்கின. அதனால் குற்றச் செயல்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

காயமடைந்த காவலர்

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் கண்காணிக்கப்பட்டதுடன், அவர்கள் மீதுள்ள பழைய வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தென்காசி அருகே உள்ள ஊர்மேல் அழகியான்புரம் கிராமத்தை சேர்ந்த பால்தினகரன் என்பவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஆனாலும், போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

சமீபத்தில் இலத்தூர் பகுதியில் உள்ள செல்போன் கடையை உடைத்து பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்தச் சம்பவத்தில் பால்தினகரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை போலீஸார் கண்டுபிடித்தார்கள். அதனால், போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருக்கும் அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Also Read: குற்றங்கள் குறையக் காவடி எடுத்த போலீஸ்... கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பர்யத் திருவிழா!

இலத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸாருக்கு, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பால்தினகரன் தங்கியிருந்த இடம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதனால், போலீஸ் படையினர், அவர் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்துக் கைது செய்ய முயன்றார்கள்.

போலீஸார் தன்னைச் சூழ்ந்து கொண்டதை அறிந்த பால்தினகரன், கையில் வைத்திருந்த அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார். அப்போது இலத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சக்திவேல், பிடிக்க முயன்றுள்ளார். அவரை பால்தினகரன் அரிவாளால் கழுத்தை குறிவைத்து வெட்டியுள்ளார்.

காயமடைந்த காவலர்

காவலர் சக்திவேல் தலையைக் குனிந்து கொண்டதால் பலத்த வெட்டு விழாமல் தப்பியுள்ளார். இருப்பினும் அவரது காது பகுதியில் வெட்டு விழுந்தது. அவரை சக காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, பால்தினகரன் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/police-man-got-injured-while-trying-to-catch-offender

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக