டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தலைநகர் டெல்லியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இதில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள 52 ஏக்கர் காலி நிலத்தில் கொச்சின் விமான நிலையம் (சி.ஐ.ஏ.எல் இன்பிராஸ்டிரக்சர்) சார்பில் 12 எம்.டபிள்யூ.பி சக்தி கொண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே சூரிய சக்தி மின்சாரம் மூலம் இயங்கும் முதல் விமான நிலையமாக சிஐஏஎல் உருவெடுத்துள்ளது. ஆனால் இந்த நல்ல செயல்பாட்டுக்கு மத்தியிலும்கூட, காலி இடத்தைச் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதன் காரணமாக சூரிய சக்தி பேனல்களுக்கு இடையே உள்ள காலி இடத்தில் ஆர்கானிக் (இயற்கை) விவசாயம் செய்யலாமே என்ற யோசனை சொல்லப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம், காலி இடத்தில் களைச் செடிகள் வளருவது தடைப்படும். கூடவே விவசாயப் பணிகளையும் மேற்கொண்டு சுற்றுச்சூழலை காத்தது போலாகும் என்ற கருத்து கிளம்பியது. மேலும் சூரிய சக்தி பேனல்கள் சூடாகாமல் தடுக்கவும் இந்தச் செடிகள் உதவும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் 58 சென்ட் நிலத்தில் ஆர்கானிக் ஃபார்மிங் மூலம் விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டது. இதன்விளைவாக 400 கிலோ வெண்டைக்காய், 400 கிலோ பீன்ஸ், 425 கிலோ வெள்ளரிக்காய், 2184 கிலோ சுரைக்காய், 378 கிலோ பூசணிக்காய் ஆகியவை விளைவிக்கப்பட்டன.
நாளடைவில் தக்காளி, இஞ்சி, மஞ்சள் ஆகியவையும் கூட பயிரிடப்பட்டன. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது முழுமையாக இந்த விவசாயத்தை விஸ்தரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போது 3 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயப் பணிகள் நடந்து வருகின்றன. கூடுதலாக பச்சை மிளகாய், புடலங்காய், பாவக்காய், கத்திரிக்காய் உள்ளிட்டவையும் பயிரிடப்படுகின்றன.
ஆங்காங்கே, விவசாயம் செய்வதில் பல பிரச்னைகள் நடந்து வரும் நிலையில், விமான நிலையம் அருகே விவசாயம் செய்வதற்கு அனைத்து வசதிகளும் பொருத்தமாக உள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். உண்மையில் சொல்லப்போனால், கொச்சி அருகே உள்ள விமான நிலையமே ஒரு ரோல் மாடலாக அமைந்துள்ளது.
- ஆனந்தி ஜெயராமன்
source https://www.vikatan.com/news/agriculture/cochin-international-airport-successfully-doing-organic-farming
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக