Ad

புதன், 23 டிசம்பர், 2020

பருப்பு சண்டை பார்ட் 2; `கட்டதுரை' ஆரி ப்ரோ; யாருக்கு என்ன ரேங்க்?! பிக்பாஸ் – நாள் 80

பருப்பிற்கும் அனிதாவிற்கும் ஜாதகக்கட்டத்தில் ஏதோவொரு விரோத மூலை இருக்கிறது போல. ‘விடாது கருப்பு’ மாதிரி பருப்பு என்கிற சமாச்சாரம் அனிதாவைத் துரத்திக் கொண்டே வருகிறது. ‘பதினெட்டு பட்டி ஊருக்கும் ஒத்தையாளா நின்னு சமைச்சேன்’ என்று சொடக்குப் போட்டு கம்பீரமாக சொன்ன அனிதாவிற்கு கடலைப்பருப்பிற்கும் பயத்தம் பருப்பிற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. என்னதான் தூக்கக்கலக்கம் என்றாலும் இப்படியா நிகழும்? நல்ல வேளை முந்திரிபருப்பு டப்பா தப்பித்தது.

சரி, கவனக்குறைவாக போட்டு விட்ட விஷயத்தை ‘டேய் பசங்களா... இதை தூக்கி ஃபிரிட்ஜில் வெச்சுடுங்க’ என்று சொல்லி விட்டு அந்த விஷயம் அங்கேயே கிடப்பதை கிச்சன் டீமில் யாருமே சீந்தவில்லை என்பது இன்னொரு ஆச்சர்யம். கிச்சன் டீமில் இல்லாத எவரோ கூட அதை எடுத்து உள்ளே வைத்திருக்கலாம். ஆனால் அந்த வீட்டை தன்னுடைய வீடாக எவருமே நினைக்கவில்லை என்பதுதான் பிரச்னை.

பிக்பாஸ் – நாள் 80

வண்ணமயமாகவும் ருசியாகவும் சமைப்பதோ, அதை அழகாக அலங்கரிப்பதோ, நேர்த்தியாக பரிமாறுவதோ மட்டுமல்ல சமையல் கலை. சமைத்த இடத்தை சுத்தமாக பராமரிப்பதும் மற்றவற்றைப் போலவே முக்கியமான அம்சம். கேட்டரிங்கில் இந்த விஷயம் அடிக்கோடிட்டு வலியுறுத்தப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் பல சமயங்களில் இது கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று தெரிகிறது. கடந்த வாரத்தில் கேபி கூட இது குறித்து புகார் கூறினார். அப்போது காட்டப்பட்ட காட்சியைப் பார்த்தால் சமையல் மேடை மாடு கன்னு போட்ட இடம் போல் கண்றாவியாக இருந்தது.

மறுபடியும் அதேதான். பிக்பாஸ் வீட்டை ஹோட்டலாக, சுற்றுலா தளமாக கருதுவதின் பிரச்னை இது. ‘தங்கள் வீடு’ என்கிற பிரக்ஞை துளியாவது இருந்தால் இத்தனை அலட்சியப் போக்கு வராது.

ஆனால் இந்தக் கடலைப் பருப்பு பிரச்னையைப் பொறுத்தவரை கிச்சன் டீம் கேப்டன் என்கிற வகையில் அனிதாதான் இதற்கு பிரதான பொறுப்பு. அதை அப்படியே நீண்ட நேரம் ஊற வைத்து வீணாக்காமல் ‘மசால்வடை’யாக மாற்ற முடியுமா என்று யோசித்து இருக்கலாம். போலவே இது பற்றி புகார் வரும் போது ‘ஆம். கவனக்குறைவால் நடந்தது. மன்னித்து விடுங்கள்’ என்று எளிதாக கடந்திருக்கலாம். தன் குறையை ஒப்புக் கொள்ளாத அனிதாவின் ஈகோ காரணமாக ‘கடலைப் பருப்பு’ மேட்டரை தீயும் அளவிற்கு வறுத்து எடுத்து விட்டார்கள்.

அடுத்ததாக ஆரி ப்ரோ. ‘ஊருக்கு உபதேசம் செய்வதை நீ முதலில் பின்பற்று’ என்கிற புகார் ஆரியின் மீது தொடர்ந்து அங்கு வைக்கப்படுகிறது. அதற்கான நிரூபணம் இப்போதும் உறுதியானது. அனிதாவின் பிழையைத் தொடர்ந்து கவனித்து அவர் சுட்டிக்காட்டியது ஓகே. ஆனால் அது வீணாகாதவாறு, கிச்சன் டீமிடம் தெரிவித்து அவரே கூட ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்திருக்கலாம்.

இதைப் போலவே அனிதாவின் மீது புகார் கூறிய ஆரி, உணவுத்தட்டில் மிச்சத்தை வைத்து அப்புறப்படுத்தாமல் கிச்சன் மேடையில் அப்படியே வைத்திருக்கிறார். ‘உணவுப்பொருளை வீணாக்கக்கூடாது’ என்கிற ஆரியின் கொள்கை மிகச் சிறந்த விஷயம். அப்படியாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் குறிப்பிட்ட வேளையில் அவர் மீந்த உணவை வீணாக்காமல் சாப்பிட முயன்றிருக்கிறார். இதுவரைக்கும் சரி. ஆனால் சாப்பிட முடியாமல் போனதை அவர் உடனே அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். சனம் இப்படி முன்னர் செய்ததற்காக ஆரி எத்தனை கடுமையாக ஆட்சேபித்தார் என்பதை நாம் பார்த்தோம். இன்னொருவரை உபதேசிப்பதற்கு முன்னால் அதற்கு தானும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

சிறிய அற்பமான விவகாரங்களைக் கூட அகங்காரம் உள்ளிட்ட சிறுமையான விஷயங்களால் நாம் எப்படி வளர்த்துக் கொண்டே போய் பிரச்னையை பூதாகரமாக்குகிறோம் என்பதற்கான உதாரணங்கள் இவை.

பிக்பாஸ் – நாள் 80

ஓகே... 80வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

79-வது நாளின் தொடர்ச்சி. ‘பால் போடுங்க’ என்று அனிதாவும் பாலாஜியும் பிக்பாஸ் டீமிடம் பைப் வழியாக கத்தி போராடியும் எந்தவொரு அசைவும் இல்லை. இந்த விஷயத்தை நேற்று பார்த்தோம், அல்லவா? அதிகாலை ஐந்து மணிக்கு பஸ்ஸர் ஒலி அடிக்க, தூங்குகிறவர்... தூங்காதவர்... என்று எல்லோருமே பதறியடித்துக் கொண்டு ஒடி வந்தார்கள். வந்த ஒரே பந்தை அனைவரும் கைப்பந்து மாதிரி தட்டி தட்டி சென்றதில் இறுதியில் சோமுவிற்கு வெற்றி கிடைத்தது.

விழித்துக் கொண்டிருந்த ஆரிக்குக் கிடைக்காமல் படுத்துக் கொண்டிருந்த சோமுவிற்கு கிடைத்ததில் முயல் – ஆமை கதையின் ரிவர்ஸ் நீதி இருக்கிறது போல.

"யார்ரா என்னை கிணத்துல தள்ளி விட்டது?” என்ற நகைச்சுவையைப் போல, "யார் என்னை தள்ளி விட்டது? பாலை தள்ளி விட்டது…" என்று தூங்காத அசதியில் உளறிக் கொட்டினார் பாலாஜி. எதிரே மாட்டியவர் ஷிவானி. “டேய் நீதானா?” என்பது போல பாலாஜி அவரை வித்தியாசமாகப் பார்க்க, ஷிவானியின் வழக்கமான கண் இன்னமும் பெரிதாக விரிந்து, "என்னையா குத்தம் சொல்றே?” என்று பதிலுக்கு முறைத்தது.

தள்ளுமுள்ளுவில் இதெல்லாம் சகஜம் என்று முன்பே சொன்னவர் இதே பாலாஜிதான். ஆனால் இரவெல்லாம் விழித்திருந்தும் ஒரு நொடியில் எதிரணி தட்டிக் கொண்டு சென்றுவிட்டார்களே என்கிற எரிச்சலில் வந்த கோபம். யார் மீது காட்டுவது என்று தெரியாமல் எதிரேயிருந்த ஷிவானி மீது கொட்டி விட்டார். பல சமயங்களில் நம்மிடம் வெளிப்படும் கோபத்திற்குக் காரணம், நமக்குள் இருக்கும் அச்சம், பதற்றம், கையாலாகத்தனம் போன்றவற்றின் வெளிப்பாடுதான்.

பிக்பாஸ் – நாள் 80

பிக்பாஸ் விளையாட்டில் தான் பின்தங்கியிருக்கிறோம் என்கிற தாழ்வுமனப்பான்மையால் ஏற்கெனவே துயருற்றிருக்கிற ஷிவானிக்கு பாலாஜியின், "நீதான் தவறு செஞ்சே. எல்லா கேம்லயும் அதைக் கெடுக்கறதுக்கு ஒருத்தன் இருப்பான்" என்கிற குற்றம்சாட்டல் கோபத்தையும் அழுகையையும் ஏற்படுத்தி விட்டது. பதிலுக்கு இவரும் மல்லுக்கட்ட ‘மன்னிச்சுடும்மா’ என்று சர்காஸ்டிக்காக சரணாகதி அடைந்தார் பாலாஜி.

நாள் 80 விடிந்தது. ‘ஓடியோடி ஓடியோடி விளையாட’ என்று வினுச்சக்கரவர்த்தி போன்ற கடுமையான குரலில் பாடுபவர் எழுப்ப மக்கள் தூக்கக் கலக்கத்துடன் சாமியாடினார்கள்.

பிறகு ஆரம்பித்தது அந்த ‘கடலைப்பருப்பு’ பஞ்சாயத்து. கிச்சன் ஏரியாவில் பயத்தம் பருப்பிற்குப் பதிலாக கடலைப்பருப்பு ஊற வைக்கப்பட்டு அப்படியே கிடக்கும் மெத்தனத்தை பாலாஜியின் காதில் ஓதினார் ஆரி. பதிலுக்கு ஆரி தட்டில் சாதம் மிச்சம் வைத்திருப்பதை பிறகு சுட்டிக் காட்டினார் பாலாஜி. உணவு அதிகமாக இருந்ததால் அதைச் சாப்பிட முயன்று இயலாமல் போனது என்று பதில் அளித்தார் ஆரி. எனில் சாப்பிட இயலாமல் போனதை உடனே அப்புறப்படுத்தியிருக்கலாம்.

ஆரியின் புகாரை ரம்யாவிடமும் அனிதாவிடமும் மெல்ல விசாரிக்க ஆரம்பித்தார் பாலாஜி. 'நான் ரெண்டு ரூவாத்தான்டா கேட்டேன்... அவன் என்ன கோவத்துல இருந்தானோ... தெரியல. இத்தாம்பெரிய கத்திய உருவிட்டான்’ என்கிற வடிவேலுவின் நகைச்சுவை போல அனிதா என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியவில்லை. "அது மூணு நாளா கிடக்கலை. சண்டே அன்னிக்குதான் தவறு நடந்தது" என்றார். "சமைக்காத உணவு வீண் பண்றது சரி. இவரு சமைச்ச உணவை வீணாக்குவாராமா?" என்று சர்காஸ்டிக்காக கிண்டல் செய்தார் ரம்யா.

"என்னை ஏதோ இன்ஸ்வெஸ்டிகேட் செய்யற மாதிரி இருக்குது. தப்புன்னு சொல்லிட்டேன். இந்த சின்ன விஷயத்தை காலைல இருந்து பேசிட்டே இருக்காங்க... கடுமையா கேட்கறாங்க. அதனாலதான் சாரி கேட்கத் தோணலை" என்றெல்லாம் புலம்பும் அனிதா முதலிலேயே தன் தவற்றை உணர்ந்திருந்தால் பிரச்னை பெரிதாக்கியிருக்காது. பிரச்னை வளர அவர்தான் பிரதான காரணம். கிச்சன் டீம் கேப்டன் என்கிற வகையில் அவர்தான் பொறுப்பையும் ஏற்றிருக்க வேண்டும்.

பிக்பாஸ் – நாள் 80

பாலாஜி முதலில் நிதானமாகத்தான் விசாரிக்க ஆரம்பித்தார். ஆனால் அனிதாவின் பொறுப்பற்ற பதில்களால் அவர் மண்டையில் ‘சுர்’ ஏற, கடுப்பாகி விசாரணையைத் தீவிரப்படுத்தினார். "புகார்னு ஒரு விஷயம் வந்தா ரெண்டு பக்கமும் கேட்காமயா இருக்க முடியும்?” என்று ஒரு கேப்டனாக அவர் நினைப்பது நியாயமானது.

சோம் சில முறை நினைவுப்படுத்தியும், "யாராவது வெச்சிருப்பாங்கன்னு நெனச்சேன். நானேதான் எல்லாத்தையும் பண்ணணுமா... இதுக்குத்தான் கிச்சன் டீமிற்கு நான் வர்றதில்லை" என்றெல்லாம் அனிதா நீட்டி முழக்குவது பொறுப்பின்மையின் உச்சம். "கிச்சன் டீம் உங்களுக்கு செளகரியப்படலைன்னா நீங்க விலகிக்கலாம்" என்று பாலாஜி எரிச்சல் அடைந்த போது அதற்கும் ஒப்புக் கொள்ளாமல் அனிதா வீம்பைக் கடைப்பிடித்தது முறையானதல்ல. ‘அதிகாரமும் வேண்டும், ஆனால் அதன் பொறுப்புகளையும் ஏற்க மாட்டேன்’ என்று நினைப்பது அலட்சியத்தின் அடையாளம்.

அத்தனை கேமராக்கள் இருக்கும் வீட்டில் "மறைக்கணும்னு நெனச்சா எப்பவோ பண்ணியிருக்க மாட்டேனா?" என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் அனிதா. "கிச்சன் டீம் அணியான நாங்கள் இதை தெரியாம பண்ணிட்டோம். இனிமே நடக்காம பார்த்துக்கறோம். ஓகேவா?" என்கிற ஒரே வாக்கியத்தில் இந்தத் தீயின் மீது நீரை ஊற்றி அணைத்தார் ரம்யா. இதை அனிதாவே முதலில் செய்திருக்கலாம்.

பிறகு பாலாஜி ஆஜித்திடமும், அனிதா ரம்யாவிடமும் நடந்தவற்றை மீண்டும் கிளறி புலம்பிக் கொண்டிருந்தார்கள். "‘இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை’ என்று ஆஜித் சொல்லும் போது அமைதியாக இருந்த பாலாஜி என்னிடம் வரும் போது மட்டும் ஊதிப் பெருக்குகிறார்’. ‘ஷிவானி தூங்கியதை மட்டும் குறித்துக் கொள்ளாமல் மறைக்கிறார்’" என்றெல்லாம் பாலாஜியின் மீது புகார் பட்டியல் வாசித்தார் அனிதா.

ஆரியிடம் சென்று அவரது தவற்றை பாலாஜி சுட்டிக் காட்டிய போது மிக நேர்மையாக அதை ஆரி ஒப்புக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம். பிறகு அனிதாவும் பாலாஜியும் ஒரு சம்பிரதாயமாக பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள். “நீங்க டீமா கூப்பிட்டு கேட்டிருக்கணும். என்னை மட்டும் கூப்பிட்டு தனியா விசாரித்திருக்கக்கூடாது" என்கிற அனிதாவின் தரப்பில் நியாயம் இல்லை. ஒவ்வொரு சிறு விஷயத்திற்கும் ஒட்டு மொத்த டீமையுமா கூப்பிட முடியும்? அதற்காகத்தானே கேப்டன் என்கிற பொறுப்பை உருவாக்குகிறார்கள்?

பிக்பாஸ் – நாள் 80

பந்து பொறுக்கும் டாஸ்க்கின் மூன்றாம் பகுதியை அறிவித்தார் பிக்பாஸ். இதில் போட்டியாளர்கள் தனித்தனியாக விளையாடுவதற்கான சந்தர்ப்பம் இருக்கும். டிவியில் எந்த போட்டியாளரின் பெயர் வருகிறதோ அவர் விரைவில் வெளியே ஓடிச் சென்று பந்தைப் பிடிக்க வேண்டும். பிடித்தால்தான் மதிப்பெண். தவற விட்டால் மதிப்பெண் கிடையாது.

கூட்டாக சேர்ந்து விளையாடிப் பெற்ற மதிப்பெண்களை கலந்துரையாடி ஆளுக்குப் பிரித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார் பிக்பாஸ். ‘சமமா பகிர்ந்துக்கலாம்’ என்று பொதுவுடமைத் தத்துவத்தையொட்டி நேர்மையாக ஆரி அறிவுறுத்த அதை அவர்கள் அணி ஏற்றுக் கொண்டது. அதன்படி ஆரி அணியில் இருந்த ஒவ்வொருவருக்கும் 22 மதிப்பெண்கள் கிடைத்தன.

இதைப் போலவே சோம் அணியில் இருந்த ஒவ்வொருவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். ஆளுக்கு 54 மதிப்பெண்கள் கிடைத்தன. ரம்யாவிற்கு மட்டும் ஒரு புள்ளி குறைந்து 53 கிடைத்த போது பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டார்.

பஸ்ஸர் ஒலியுடன் தொலைக்காட்சியில் பெயர்கள் அடுத்தடுத்து வர ஆரம்பித்தன. முதலில் அனிதா பெயர் வந்தது. உணவருந்திக் கொண்டிருந்த அவர் விரைவாக ஓடிச் சென்றாலும் பிடிக்க இயலவில்லை. அடுத்தது பாலாஜி. கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த பாலாஜி ஆவேசமாக ஒடி வந்தார். ‘உங்களால பிடிக்க முடியாது’ என்று ரம்யா எச்சரித்தும் பாலாஜி பாய்ந்து வந்து பிடித்து சாதித்தது சிறப்பு. ஆனால் அடுத்த முறையில் சறுக்கி கீழே விழுந்தார் பாலாஜி. அனிதா, ஷிவானி, ரியோ ஆகியோர் தங்களின் முறை வரும் போது பந்துகளைத் தவற விட்டார்கள். மற்றவர்கள் பிடித்தார்கள். கடைசியாக வந்த சோமுவிற்குப் பந்து வராமல் ஏமாற்றியது.

‘போரடிக்குது பிக்பாஸ்... தூக்கம் வரலை’ என்று ரம்யா அனத்திக் கொண்டிருந்த போது, 'இருடி... செல்லம்... எல்லார் தூக்கத்தையும் கலைக்கறேன்’ என்பது போல் rapid fire round-ஆக பெயர்களை மின்னல் வேகத்தில் அறிவித்தார் பிக்பாஸ். முதலில் சோமின் பெயர் வந்தது. உறங்கிக் கொண்டிருந்த இவர் பாய்ந்து வந்தும் தன் பந்தைத் தவற விட்டார். அத்துடன் இவர் ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து வந்த இரு பந்துகளையும் பிடித்ததின் மூலம் வரிசையைக் கலைத்து விட்டார். நியாயப்படி அடுத்த பந்தை அனிதா பிடித்திருக்க வேண்டும். ஆனால் பந்து விழுந்த வேகத்தில் அனிதா ஓடி வந்திருந்தாலும் பிடித்திருக்க முடியாது என்பது வேறு விஷயம்.

பிக்பாஸ் – நாள் 80

சோம் முதலில் செய்த குளறுபடியால் இறுதியில் ரம்யாவிற்கு பந்து வரவில்லை. "எப்படியாச்சு?” என்று ஆளாளுக்கு குழம்பி பிறகு சோம் அதிக பந்துகளைப் பிடித்ததால்தான் கோளாறு நடந்தது என்று கண்டுபிடித்தார்கள். முதலில் தன் தவறை மழுப்பிய சோம் பிறகு "அப்படியா சொல்றீங்க?” என்கிற மாதிரி குழம்பி அமர்ந்திருந்தார். முதல் சுற்றில் இவருக்கு பந்து வராததால் இந்த முறை தனக்குத்தான் அடுத்தடுத்து வருகிறது போல என்று நினைத்து விட்டாரோ... என்னமோ!

‘இவிய்ங்களுக்கு கேமே புரிய மாட்டேங்குது. மார்க்கை சொல்லிடுவோம். அப்பவாவது வெளங்குதான்னு பார்ப்போம்’ என்று முடிவு செய்த பிக்பாஸ், அவரவர்கள் பெற்ற மதிப்பெண்களை தொலைக்காட்சியில் வரிசையாக காண்பித்தார். இதில் உச்சபட்சமாக கேபியும் ரியோவும் தலா 64 மதிப்பெண்களை பெற்று முன்னணயில் இருந்தார்கள். தன் வழக்கப்படி முகத்தில் ஆச்சர்யம் கலந்த பதட்டத்தை காண்பித்தார் ரியோ. இப்போதுதான் வரிசையில் குளறுபடி ஆகி தாங்கள் மதிப்பெண்களை இழந்த விஷயம் இவர்களுக்கு முழுதாகப் புரிந்தது.

"நமக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் பிக்பாஸ் இந்த திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறார்" என்று சொன்ன பாலாஜி, அடுத்து சொன்ன விஷயம்தான் ஹைலைட் காமெடி. "நமக்கு கிடைச்ச பந்துக்கு மேல இன்னொரு பந்தை எடுக்கறது தப்பு என்பதுதான் இதிலுள்ள நீதி" என்று நான் கட்டுரைக்கு இடையில் சொல்வது போலவே மெசேஜ் சொன்னது டைமிங்கான நகைச்சுவை. (பயபுள்ள விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை பத்து தடவைக்கும் மேல பார்த்திருக்கும் போல).

இரவு 10:45. மக்கள் அனைவரும் சோர்ந்து போய் அசந்து உறங்கிக் கொண்டிருக்க ‘தூங்காதே. தம்பி தூங்காதே. தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே’ பாடலை சர்காஸ்டிக்காக போட்டு அவர்களை எழுப்பினார் பிக்பாஸ். (என்னாவொரு வில்லத்தனம்!). அனைவருமே நமட்டுச்சிரிப்புடன் பாடலின் தாளத்திற்கு ஏற்ப தலையாட்டிக் கொண்டே எழுந்திருக்க, ரம்யா மட்டும் பொங்கல் சாப்பிட்ட எபெக்ட்டில் டொங்கலாக அமர்ந்திருந்தார். (அனிதா செஞ்ச பொங்கலாக இருக்குமோ?!).

பிக்பாஸ் – நாள் 80

ஆந்தைகளும் உறங்கச் செல்லும் இரவு பதினோரு மணிக்கு மக்களை இவ்வாறாக எழுப்பிய பிக்பாஸ் ‘குட்மார்னிங்’ என்று நக்கலாகச் சொல்லி அவர்களின் தூக்கத்தில் பெட்ரோலை ஊற்றினார். ‘உங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு’ என்று அவர் தெரிவித்ததும் மீண்டும் அந்த ‘கொணகொண’ சத்தம் அபஸ்வரமாக ஒலிக்க ஆரம்பித்தது.

இம்முறை கேபி, பாலாஜி, அனிதா ஆகியோர் பந்துகளைத் தவற விட மற்றவர்கள் சரியாகப் பிடித்து விட்டார்கள்.

இதுவரை நடந்த டாஸ்க்கில் இருந்து ஈடுபாடு, போட்டியிடும் தன்மை போன்றவற்றை மனதில் கொண்டு போட்டியாளர்கள் தங்களுடன் கூடிப் பேசி 1 முதல் 9 வரை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒன்று, இரண்டு, மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சிறப்புச் சலுகை உண்டு என்று அறிவித்தார் பிக்பாஸ். (சனம் இருந்த போது நடந்த கலாட்டா இப்போதும் நடக்குமா என்பது அவரின் நப்பாசை போல).

வரிசைப்படுத்தும் கலந்துரையாடல் ரணகளமாக ஆரம்பித்தது. ஒன்றாம் ரேங்கிற்காக தன்னை முதலில் பரிந்துரைத்துக் கொண்டார் ரம்யா. மூன்றாம் எண்ணிற்கு ஒதுங்கிக் கொண்டார் பாலாஜி. சிவப்பு பந்தை பிடித்த குற்றவுணர்வினால் இருக்கலாம். நான்காம் எண்ணை அனிதா கோர, ‘இன்னமும் பெட்டரா பண்ணியிருக்கலாம்’ என்று ஒப்புக் கொண்டாலும் ஆறாம் எண்ணிற்கு ஆசைப்பட்டார் ஆஜித். ஏழாம் எண்ணை கேபி ஏற்றுக் கொள்ள ஒன்றாம் எண்ணிற்கு சோம் ஆசைப்பட்டார்.

ஆக முதல் மூன்று இடங்களுக்கு போட்டி கடுமையாக நடந்தது. ‘டீமாக இருந்த போது நாங்கள் சிறப்பாக செயல்பட்டதைப் போல தனியாக விளையாடிய போதும் நான் அதிக மதிப்பெண்களை எடுத்தேன்’ என்று ஒன்றாம் எண்ணிற்காக ரியோ வாதாட ‘நீங்க தூங்கிட்டீங்க... நான் தூங்கலை’ என்னும் பாயிண்டை ஆரி முன்வைத்தார். ‘போட்டியில் ஈடுபாடு’ என்கிற விதியையொட்டி ஆரி சுட்டிக்காட்டியது நியாயமான காரணமே. ஆனால், "ஏங்க... அரை மணி நேரம் சும்மா கண்ணசந்து இருப்பேன். அதுக்காக... இப்படியா" என்று எரிச்சலானார் ரியோ.

பிக்பாஸ் – நாள் 80

"மற்றவர்கள் விட்டுக்கொடுத்தால்தான் உங்கள் வெற்றி கிடைத்தது" என்பது போல் ஓர் அபத்தமான லாஜிக்கை ஆரி முன்வைக்க ரியோவின் மண்டையில் ‘சுர்’ என்று ஏறியது. ஆரியிடம் உள்ள ஒரு சிறப்பு என்னவெனில் விவாதம் என்று வந்தால் விடிய விடிய லாஜிக் பேசிக் கொண்டேயிருப்பார். ('நீயா? நானா?' நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக போனால் நிச்சயம் டிவி பரிசு கிடைக்கும்). எனவே டயர்ட் ஆன ரியோ. "உங்க கூட பேசி ஜெயிக்க முடியாது” என்று எரிச்சலோடு எழுந்து போனார்.

‘வின்னர்’ திரைப்படத்தில், ஆட்களுடன் கூட்டமாக வந்து விட்டு பின்னர் வில்லனின் ஆட்களைப் பார்த்ததும் அவரின் ஆட்கள் பயந்து ஓட, “டேய்... எங்கடா ஒரு ஈ காக்கா காணோம்" என்று கைப்புள்ள பின்னால் பார்த்து பதறும் நகைச்சுவைக் காட்சியைப் போல், "டேய் எங்கடா என்னை தனியா விட்டுட்டு போனீங்க. இந்தக் கட்டத்துரையோட தனியா மல்லுக்கட்ட முடியலைடா” என்று ரியோ பதறியது ஜாலியான காட்சி. முன்னர் ஒரு முறை கூட இப்படி அவர் மற்றவர்களை துணைக்கு அழைத்தது நினைவிற்கு வந்தது.

‘உங்க டீம்ல அஞ்சு பேர் இருந்தீங்க. நாங்க நாலு பேர்தான் இருந்தோம்’ என்கிற பாயிண்ட்டை ரம்யா எடுத்து வைத்தார். இறுதியில் வாக்களிப்பு மூலம் இந்தத் தேர்வு நடந்தது.

இதில் சிவப்பு நிற பந்தைத் தொட்டு தன் அணியின் ஒட்டுமொத்த மதிப்பெண்ணை இழக்க வைத்ததை பாலாஜியின் பின்னடைவாக பார்க்க முடியும். ரம்யா உட்பட சிலர் இந்த விஷயத்தை உதாரணம் காட்டினார்கள். பாலாஜி இருந்த அணியும் இதை வழிமொழிந்தாலும் ‘செய்த தவறிலிருந்து மீள அனைத்து உத்திகளையும் பாலாஜி பயன்படுத்த தவறவில்லை’ என்று பாராட்டவும் செய்தார்கள்.

தான் ஒவ்வொரு எண்ணாக பின்னுக்கு நகர்த்தப்படுவதைக் கண்டு எரிச்சலுற்ற பாலாஜி ‘ரெட்பால் பிடிச்சது ஒரு ஸ்ட்ராட்டஜி’ என்று அபத்த லாஜிக்குடன் உளறிக் கொட்டியது கொடூர நகைச்சுவை. இந்த ரணகளத்திற்கு நடுவில் காமெடியாக ‘பிடிச்சவங்க’ என்று ஆரி சொல்லியதை ‘ஒருத்தருக்குப் பிடிச்சவங்க’ என்று மற்றவர்கள் நினைத்து விட "அடேய்... பாலை பிடிச்சவங்கன்னு சொன்னேன்டா" என்று அவர் திருத்தியது ஜாலியான நகைச்சுவை.
பிக்பாஸ் – நாள் 80

ஏழாம் எண்ணிற்கு ஆசைப்பட்ட கேபி அதுவும் கிடைக்காததால் வெறுப்புற்று எட்டாம் எண்ணை ஷிவானிக்கு தந்து விட்டு கடைசி நிலைக்குச் சென்றார்.

முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு வாழ்த்து சொன்ன பிக்பாஸ், ‘சரி... போய் நல்லாத் தூங்குங்க’ என்று பெரிய மனது வந்து ஆசிர்வாதம் அளிக்க சாப்பாட்டுக்கு ஓடுவதைப் போலவே மக்கள் இப்போதும் அடித்துப் பிடித்து வீட்டின் உள்ளே மகிழ்ச்சியாக ஓடினார்கள்.

ஒருவன் இரவில் தூக்கம் வரவில்லை என்று சொன்னால், அவன் அன்று சரியாகவும் நேர்மையாகவும் உழைக்கவில்லை என்று பொருள். நாள் முழுவதும் கடுமையாக உழைத்து விட்டு, படுக்கையில் ‘ஹா’வென்று சாய்ந்து அந்த இன்பமான அசதியுடன் தூக்கத்தில் மெல்ல நழுவும் அந்த சுகம் இருக்கிறதே! உழைப்பாளிகளுக்கு மட்டுமே கிடைத்த வரம் அது.



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/ball-task-concludes-bigg-boss-tamil-season-4-day-80-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக