Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

தென்னிந்தியாவின் முதல் குரங்குகள் மறுவாழ்வு மையம் தெலங்கானாவில்... எதற்காக?

தெலங்கானாவின் வடக்கு நிர்மல் மாவட்டத்தில்தான் இந்த மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. சின்சோலி என்ற கிராமத்தில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 15 நாள்களில் 200 குரங்குகள் வரை சேர்க்கப்பட்டுள்ளன. இங்கு வைத்துப் பராமரிக்கப்படும் குரங்குகள் பின்னர் வனத்திற்குள் கொண்டு போய் விடப்படும்.

வீடுகளுக்குள் புகுந்து பொருள்களை, உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் குரங்குகள் நகர்ப் பகுதியில் அதிகரித்து வருகின்றன. அதிலும் வனப்பகுதிக்கு அருகேயுள்ள வீடுகளில் குரங்குச் சேட்டை அதிகமாகவே இருக்கும். ஆனால் குரங்குகளைச் சொல்லியும் குற்றிமில்லை. வனத்தை அழித்து வருகிறோம். பிறகு அவை உணவுக்கு எங்கே செல்லும். எனவேதான் வீடுகளைத் தேடி வருகின்றன.

குரங்குகள்

இந்த நிலையில்தான் இதுபோல் வீடுகளைத் தேடி வரும் குரங்குகளைக் கட்டுப்படுத்த, மையம் அமைத்து அவற்றைப் பிடித்து அதில் சேர்த்துப் பராமரிக்கும் திட்டத்தை தெலங்கானா மாநில அரசு கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து தெலங்கானா மாநில வனத்துறை சிறப்பு அதிகாரி சங்கரன் கூறுகையில், "ஒரு மையத்தில் 50 குரங்குகள் வீதம் மொத்தம் 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமப் பஞ்சாயத்து மூலம் மயக்க மருந்து செலுத்தி இவை பிடித்து வரப்பட்டு இங்கு வைக்கப்படும்.

இங்கு இவை பராமரிக்கப்பட்டு கடைசியில் வனத்துக்குள் கொண்டு போய் விடப்படும். இதில் வயதான பெண் குரங்குகளுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்படும். அதேபோல ஆண் குரங்குகளுக்கும் வாசக்டமி செய்யப்படும். நாங்கள் பிடித்து வந்த குரங்குகளில் பாதிக்கு பாதி டி.பி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குணமடைந்ததும் அவை வனத்தில் விடப்படும்" என்றார் சங்கரன்.

சாலைகளில் உணவெடுக்கும் குரங்குகள்

இந்த மையம் அமைக்க ரூ.2.25 கோடி செலவிடப்பட்டுள்ளதாம். இதுபோன்ற மையம் முதன்முறையாக இமாச்சல் பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. அடுத்து இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. நிர்மல் மாவட்டம் தவிர நிஜாமாபாத், கரீம்நகர், மேடக் உள்ளிட்ட மாவட்டங்களில் பிடிக்கப்படும் குரங்குகளும்கூட இங்கு தங்க வைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலும் கிராம, நகரப் பகுதிகளில் இந்தப் பிரச்னை அதிகம். குறிப்பாக விவசாய நிலங்களில் அதிகச் சேதங்களை விளைவித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற குரங்குகள் மறுவாழ்வு மையத்தைத் தொடங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் விலங்கு ஆர்வலர்கள்.

-ஆனந்தி ஜெயராமன்



source https://www.vikatan.com/news/agriculture/south-indias-first-monkey-rehabilitation-centre-sets-up-in-telangana

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக