Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

வேலூர்: பொதுமேலாளருக்கு ஏஜென்ட்; லஞ்ச வழக்கில் சிக்கிய மேலாளர்! -ஆவினில் அதிரடி காட்டிய விஜிலென்ஸ்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்துள்ள சொரக்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன். இவர் அந்த பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை மினிவேன் மூலம் குளிர்பதன கிடங்கிற்கு எடுத்துச்செல்லும் பணியை ஒப்பந்தம் மூலம் செய்துவந்தார். இதற்காக, ஒரு லிட்டருக்கு 40 பைசா வீதம் வேலூர் ஆவின் நிர்வாகம் முருகையனுக்கு கமிஷன் கொடுத்துவந்தது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கமிஷன் தொகையை முருகையனுக்கு வழங்காமல் நிலுவையில் வைத்தது, ஆவின் நிர்வாகம். அந்த தொகையை கேட்டு முருகையன் நடையாய் நடந்த அதே வேளையில், வேலூருடன் இணைக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட ஆவின் மேலாளர்

அவர்களுக்கென்று திருவண்ணாமலையிலேயே தனி ஒன்றியமும் உருவாக்கப்பட்டது. இதனால், முருகையனுக்குக் கிடைக்க வேண்டிய கமிஷன் தொகையை வழங்காமல் வேலூர் ஆவின் நிர்வாகம் மேலும் இழுத்தடித்தது. இதுநாள் வரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன்பு பால் கொள்முதல் பிரிவு மேலாளர் ரவியைச் சந்தித்துள்ளார் முருகையன். அப்போது ரவி, ‘‘நிலுவைத் தொகைக்கான காசோலை கையெழுத்துப் போட்டுத் தயாராக இருக்கிறது. 50,000 ரூபாய் கொடுத்தால் உடனடியாக காசோலையைக் கொடுத்துவிடுகிறோம்’’ என்று லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகையன், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார்.

ஆவின் மேலாளர் ரவியைக் கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவுசெய்தனர். அதன்படி, ரசாயனம் தடவிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 50,000 ரூபாயை முருகையனிடம் நேற்று கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை ஆவின் மேலாளர் ரவி கை நீட்டி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை அதிரடியாக கைதுசெய்தனர். விசாரணையில், மேலாளர் ரவி லஞ்சம் வாங்குவதற்குத் தூண்டுதலாக இருந்தது ஆவின் பொதுமேலாளராக இருந்த கணேசன் என்பதும் தெரியவந்தது. பொதுமேலாளர் கணேசனுக்கு மேலாளர் ரவி ஏஜன்ட்டாக செயல்பட்டுவந்துள்ளார்.

ஆவின் அலுவலகம்

திருவண்ணாமலை மாவட்ட ஆவின் உதவி பொதுமேலாளராக இருந்த கணேசன் கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் வேலூர் ஆவின் பொதுமேலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கணேசன் கடந்த 16-ம் தேதி திருநெல்வேலி ஆவினுக்கு விருப்ப இடமாறுதலில் அவரச அவசரமாகச் சென்றுவிட்டார். திருநெல்வேலியில் இருந்த பொதுமேலாளர் கணேசனையும் அந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரின் உதவியுடன் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். திருநெல்வேலியிலிருந்து வேலூருக்கு அவர் அழைத்து வரப்படுகிறார். இருவரும் விசாரணைக்குப் பின்னர் சிறையிலடைக்கப்பட உள்ளனர். ஒரே சமயத்தில், இரண்டு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறையின் பிடியில் சிக்கியிருப்பது, ஆவின் வட்டாரத்தையே நடுங்க வைத்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/aavin-officers-arrested-2-people-in-bribe-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக