மு.க. அழகிரி தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கிறார். வருகிற ஜனவரி மாதம் 3-ம் தேதியன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறார். கலைஞர் பெயரை தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கட்சியை பதிவு செய்யும் பூர்வாங்க வேலைகளை செய்வதற்காக சென்னையில் முகாமிட்டுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர். இதன் தொடர்ச்சியாக, நடிகர் ரஜினியை சந்திக்கும் திட்டமும் இருக்கிறது. ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள ரஜினி, ஒரிரு நாட்களில் சென்னை திரும்புவார் என்று பேச்சு அடிபடுகிறது. அதுவரை சென்னையில் தங்கியிருந்து ரஜினியை சந்தித்துவிட்டு மதுரை கிளம்பிப்போக இருக்கிறார் அழகிரி.
வழக்கமாக மு.க. அழகிரி, தனது சகோதரர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து ஏதாவது பேசுவார். அவரது குடும்ப உறுப்பினர்கள் வந்து அழகிரியிடம் சமாதானம் பேசுவார்கள். உடனே, அழகிரியும் விட்டுக்கொடுத்துப்போவார். ஆனால், இந்த முறை மாறுபட்டு நிற்கிறார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளார் மு.க. அழகிரி. அவரது குடும்பத்தினரை தனது மகன் வீட்டிற்கு வரச்சொல்லியிருக்கிறார். அவர்களிடம் பேசும்போது, ''நான் என்ன செய்தேன்? என்னை கோபக்காரன் என்பீர்கள். அதனால்தான் இதுவரை பொறுமையாக இருந்தேன். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துவிட்டது. என்னை நம்பியிருக்கும் கட்சிக்காரர்களை நான் நற்றாற்றில் விடமுடியுமா? மு.க.ஸ்டாலினும் தேர்தல் சுற்றுப்பயணம் போகப்போகிறார்.
இதற்கு மேல் நான் சும்மா இருக்கமுடியுமா? அவரது மகன் உதயநிதியை கட்சியின் முக்கிய பதவியில் உட்கார வைக்க நான் முட்டுக்கட்டையாக இருப்பேன் என்று தப்பு கணக்குப்போட்டார்கள். அவன் யார்.. என் தம்பி மகன்தானே? இப்படி ஒவ்வொரு விஷயத்திலேயும் என்னை புறக்கணிக்கிறார்கள். என்னை கட்சியின் உறுப்பினராக கூட சேர்க்கக்கூடாது என்று தீவிரமாக இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று உங்களுக்கே புரியும். என் தரப்பு நியாயத்தை சொல்லிவிட்டேன். நீங்கள் பதிலை சொல்லுங்கள். நான் புதுக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போகிறேன்'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அவரது குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். அதைதொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்தார். வயதாகிவிட்ட நிலையில், அடிக்கடி மறதி பிரச்னையில் தவிக்கிறார். இருந்தபோதிலும், அவர் அருகே உட்கார்ந்த அழகிரி..அவரது உறவினர்களிடம் சொன்ன அதே கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அழகிரியை ஆசிர்வதித்தாராம் தயாளு அம்மாள். அவரது தந்தையார் கலைஞரின் படம் முன்பு கண்களை மூடி அமைதியாக நின்றிருந்தாராம். பிறகு, வெளியே வந்து மீடியாக்களை சந்தித்து பேசி பரபரப்பை கிளம்பியிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/azhagiri-explained-his-plan-to-his-family-regarding-new-political-party
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக