Ad

செவ்வாய், 15 டிசம்பர், 2020

`வழக்கறிஞர் மீது கொலைவெறித் தாக்குதல்; ஓடஓட விரட்டி வெட்டிய ரௌடி கும்பல்!’ - திருச்சி அதிர்ச்சி

திருச்சி அல்லிதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தர். இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். வழக்கறிஞர் சந்தர், தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது டாட்டா சுமோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழக்கறிஞர் சந்தரைத் தலையில் வெட்டியிருக்கிறது.

சந்தர்

பதறியடித்து அங்கிருந்து ஓடிய சந்தரை கை, முகத்தில் வெட்டியது அந்தக் கும்பல். அலறியபடியே சந்தர் ஓடியதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்திருக்கிறார்கள். இதனால், தங்களைப் பொதுமக்கள் பிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் உடனே அந்த மர்ம கும்பல் டூவிலர், காரில் தப்பியோடியது.

பின்னர், படுகாயமடைந்த சந்தரை மீட்டு தென்னூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வந்த தில்லைநகர் போலீஸார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வழக்கறிஞர் சந்தர்

இதற்கிடையில், வழக்கறிஞர் சந்தரை வெட்டியவர்களைக் கைது செய்யக் கோரி, அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தென்காசி: திருட்டில் ஈடுபட்ட நபரைப் பிடிக்கச் சென்ற போலீஸுக்கு அரிவாள் வெட்டு!

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் நந்தகுமார், ``திருச்சியில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சந்தர் என்பவர் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் இந்த செயலில் ஈடுபட்டது யாரென்று விசாரித்து வருகிறார்கள். படத்தில் வரும் காட்சியைப் போன்று பொதுமக்கள் முன்னிலையில், ஓட ஓட விரட்டப்பட்டு வழக்கறிஞர் ஒருவர் வெட்டப்பட்டிருக்கும் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வழக்கறிஞர்

அதேபோல், கடந்த மாதம் ஆடு திருடியதைத் தட்டிக் கேட்டதால் ரௌடி மற்றும் அவனது அம்மா இருவரும் ஆட்டோ டிரைவர் ஒருவரை பட்டப்பகலில் அவரது வீட்டு வாசலில் மக்கள் கூடியிருந்த நேரத்தில், கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர். இன்று வரையிலும் அந்த கொலையாளிகளைப் பிடிக்கவில்லை. இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/crime/trichy-police-files-fir-against-un-identified-men-over-attack-on-lawyer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக