Ad

செவ்வாய், 15 டிசம்பர், 2020

தெர்மகோல் முட்டையில் குஞ்சு பொறித்த ஒரே கோழி நம்ம பாலாஜி கோழிதான்! பிக்பாஸ் - நாள் 72

மனித குலத்திற்கும் முட்டைக்கும் நெடுங்காலமாகவே பிரச்னைதான். ‘முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா’ என்னும் தத்துவார்த்தக் கேள்விக்கு பல நூற்றாண்டுகளாக விடைகாண முடியாமல் மனிதன் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறான். இதைப் போலவே முட்டை அசைவம் என்கிற கேட்டகிரியில் மெல்ல உருண்டு வந்து ‘சைவப்’பட்டியலில் இணைந்து எத்தனையோ காலம் ஆகிறது. சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் அசைவத்திற்கு மாறும் முதல்படியின் வாசல் என்பது முட்டைதான்.

முட்டையின் சவாலை எதிர்கொள்ள முடியாத மனிதன், தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெறும் போது அதை ‘முட்டை’ என்று அழைப்பதின் மூலம் அதை மலினப்படுத்தி சமாதானம் ஆக முயன்றான். ‘ஜீவாத்மா, பரமாத்மா’ இரண்டும் ஒன்றாகி ‘அத்வைத’ நிலையை அடைவதைப் போலவே வெள்ளையும் மஞ்சளும் கலந்த தத்துவத்தின் குறியீடு என்றே முட்டையைச் சொல்லலாம்.

இந்த ‘முட்டை’ பிரச்னை பிக்பாஸ் வீட்டையும் விட்டுவைக்கவில்லை. முன்னொரு காலத்தில் ‘கணேஷ் வெங்கட்ராமன்’ என்பவர் இங்கு வாழ்ந்து வந்தததாகவும் அவர் அதிக முட்டைகளை எடுத்து உண்டதால் காயத்ரி முனிவரின் சாபத்திற்கு ஆளானதாகவும் ஒரு புராணக்கதை உண்டு. அந்த சாபத்தின் காரணமாகத்தான் அவர் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் - நாள் 72

இந்த நான்காம் சீஸனிலும் முட்டையின் தொடர் தலையீடு இல்லாமல் இல்லை. கணேஷ் சந்தித்த அதே பிரச்னையை பாலாஜி என்கிற பயில்வானும் இந்த நான்காம் சீஸனில் சந்தித்தார். ‘முட்டையை அதிகம் எடுத்து உண்டுவிடுகிறார்’ என்று துவக்க நாளில் அவர் மீது புகார் கூறப்பட்டாலும் பயில்வான் அதை சாமர்த்தியமாக அடித்துப் பேசி கடந்து வந்தார்.

‘ரோபோ’ என்கிற டாஸ்க்கிலும் முட்டையின் பங்கு மிக ஆதாரமாக அமைந்ததைப் பார்த்தோம். முட்டையை சந்தனம் போல பூசிக் கொண்டார்கள்; மவுத்வாஷ் போல கொப்பளித்து அழகு பார்த்தார்கள். இன்னொரு டாஸ்க்கில் தலையில் முட்டையை உடைத்து ஹோலி கொண்டாடினார்கள்.

இத்தோடு பிக்பாஸிற்கும் முட்டைக்கும் உள்ள தொடர்பிற்கு சற்று தற்காலிகமாக ரெஸ்ட் கிடைக்கும் என்று பார்த்தால், இல்லை. கோழி vs நரி என்றொரு டாஸ்க்கில் முட்டையின் அந்தஸ்து உயர்ந்து தங்க முட்டையாக மாறி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்கை யோசிப்பதற்குள் பிக்பாஸ் டீம் முட்டையிடும் கோழியின் அவஸ்தையை அடைந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், இவர்கள் ரூம் போட்டு யோசிக்கும் டாஸ்க் ஐடியா பல சமயங்களில் கூமுட்டையாகி விடுகிறது. வெளிப்பார்வைக்கு நன்றாக பட்டாலும் உள்ளே ஒன்றுமே இல்லை.

இந்த டாஸ்க்கும் அப்படித்தான். இதை பிக்பாஸ் டீம் விவாதித்து கற்பனை செய்து பார்க்கும்போது நன்றாகவே இருப்பது போல்தான் தெரிந்திருக்கும். ஆனால் நடைமுறையில் பார்த்த போது தீய்ந்து போன ஆம்லேட் போல சொதப்பலாகியது.

கிராமத்து சந்தையில் நடக்கும் கோழி வியாபாரம் போல சளசளவென்று ரணக்களக் குழப்பமாக நடந்த இந்த டாஸ்க்கை கவனித்து பதிவு செய்வதற்குள் நான் ‘பொடிமாஸ்’ போல சிதறுண்டு போனேன். எனவே கூட்டிக்குறைத்து அதற்கேற்ப வாசித்துக் கொள்ளுங்கள்.

பிக்பாஸ் - நாள் 72

நல்ல வேளையாக ‘அழுகாட்சி’ டாஸ்க் இன்று தொடரவில்லையே என்று ஆறுதல் அடைந்தேன். ஆனால் இந்த கோழி டாஸ்க் ‘அதுவே தேவலை’ என்றாக்கி விட்டது. வழக்கம் போல் போட்டியாளர்கள் சண்டைக்கோழிகளாக மாறி விட்டார்கள்.

72-ம் நாளில் என்ன நடந்தது என்ன?!

அந்த வாரத்தின் லக்‌ஷுரி பட்ஜெட் டாஸ்க் எதைப் பற்றியது என்பதற்கான ஹின்ட்டை விடியற்காலை பாடலிலேயே தருவது பிக்பாஸ் ஸ்டைல். எனவே இந்த வாரம் கோழி டாஸ்க் என்பதால் கில்லி படத்திலிருந்து ‘கொக்கர கொக்கரக்கோ’ என்கிற பாடலைப் போட்டார். ஆனால் லாஜிக் மிஸ்ஸிங். அது சேவல் பற்றிய பாடல் வரியாக இருந்தது. சரி... சேவல் இல்லாமல் எப்படி முட்டை வரும் என்று ஆறுதல் அடைய வேண்டியதுதான்.

புன்னகை இளவரசி ‘ரம்யா’ விஜய் ரசிகர் போலிருக்கிறது. "விஜய் பாட்டு போட்டா நல்லாயிருக்கும்னு நேத்து நைட்டுதான் சொல்லிட்டு இருந்தேன்" என்று பாடல் முடிந்த பிறகு சொல்லிக் கொண்டிருந்தார். பாட்டு முடிந்து அரைமணி நேரமாகியும் தரையில் அமர்ந்து நடனத்தை பாலாஜி தொடர்கிறாரே என்று ஆச்சர்யமாக பார்த்தால் இல்லை. காலை நீட்டி நீட்டி செய்து கொண்டிருந்த விஷயம் எக்சர்சைஸ் போலிருக்கிறது.

இன்றைய காலையின் கலகம் ஷிவானியின் மூலமாக வந்தது. அவர் சமையல் மற்றும் பாத்திரம் விளக்குதல் ஆகிய இரண்டு அணிகளிலும் இருக்கிறார் போலிருக்கிறது. கால் மணிக்கு ஒருமுறை, அவ்வப்போது பாத்திரம் விளக்க அழைப்பதால் அவருக்கு ‘ஒருமாதிரி’யாக இருக்கிறதாம். எனவே மொத்தமாக போட்டுவிட்டு அழைத்தால் அப்படியே கழுவிடுவாராம்.

"எல்லாத்துலயும் நான் லாஸ்ட்டு வர்ரேன்... ஸ்ட்ரெஸ் ஆவுது" என்று குழந்தை போல் நேற்று கேவி கேவி அழுத போது ஷிவானியின் மீது சற்று பரிதாபம் வந்ததென்னமோ நிஜம். ஆனால் சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வேலை செய்யாமல் தன் சொகுசு செளகரியத்திற்கு ஏற்ப அதை வளைக்க முயல்வது முறையற்ற காரியம்.

பிக்பாஸ் விளையாட்டில் கலந்து கொள்ள அவர் கணிசமான சம்பளம் வாங்குகிறார். எனில் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப தன் உழைப்பைத் தருவதுதானே நியாயம்? ஒப்பனைக்கு அவர் தரும் நெடும் நேரத்தை சற்று உழைப்பிற்கும் தரலாமே? இப்படி எல்லாவற்றிலும் சொகுசாக அமர்ந்து விட்டு ‘கடைசியில்தான் வர்றேன்’ என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

பிக்பாஸ் - நாள் 72

அது எந்த பாலினத்தவராக இருந்தாலும் இன்றைய தலைமுறையின் சோம்பேறித்தனத்திற்கு ஷிவானி ஒரு நல்ல உதாரணம். ‘எதுக்கு கிச்சன்ல டைம் வேஸ்ட் பண்ணனும்... ஆப்ல வரவழைச்சா போச்சு’ என்கிற கலாசாரத்தில் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் தரப்பட்டிருக்கும் பாத்திரங்கள் குறைவு எனும்போது சமையல் செய்பவருக்கு பாத்திரங்கள் அடிக்கடி தேவைப்படும். எனில் அவற்றை சுத்தம் செய்யும் அணியில் இருப்பவரும் அதற்கு ஒத்துழைத்தால்தானே சமைக்க இயலும்?

இந்த விஷயத்தை ஷிவானி ரம்யாவிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அர்ச்சனா, "இதை என்னிடம் முதலில் சொல்லியிருக்கலாமே?" என்றார். இது சரியான கேள்வி. கிச்சன் கேப்டன் என்கிற முறையில் இதை முதலில் அர்ச்சனாவிடம்தான் ஷிவானி எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

ஷிவானிக்கு நேர்ந்த ‘இமாலயப்’ பிரச்னையைப் புரிந்து கொண்டு வீட்டில் உள்ள அனைவருமே அதற்காக ஒத்துழைக்க முன்வந்தார்கள். ரம்யாவும் பாலாஜியும் இதர அணியில் இருந்தாலும் ‘தன்னார்வ’ சேவையாக செய்ய ஒப்புக் கொண்டார்கள். பாலாஜி ஒப்புக் கொண்டதில் ஆச்சர்யமில்லை. அவர் ஷிவானியை தலையில் கூட ஏந்தி தாங்குவார்.

ஷிவானியைப் போல ஆஜீத்தும் சோம்பேறித்தனம் உள்ளவர் என்பது தெரிகிறது. பாத்திரம் விளக்க இரண்டு பேர் இருந்தும் "அது பத்தாது... வேலை அதிகம்" என்று முனகிக் கொண்டிருந்தார். ‘பத்து பாத்திரம்’ துலக்க நூறு பேரை அழைப்பார்கள் போலிருக்கிறது.

ஷிவானியின் பிராது பஞ்சாயத்திற்கு வந்தது. "தன்னார்வ சேவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் பெஸ்ட் பர்ஃபாமர்ன்னு வரும் போது இதையெல்லாம் கணக்கு காண்பிச்சா நான் பிச்சிப்பிடுவேன்" என்று கோபத்துடன் கண்களை உருட்டினார் ஆரி. என்னடா மனுஷன் இப்படி டெரரா இருக்கிறாரே என்று பார்த்தால் அதன் பின்னே ஒரு பிளான் இருந்தது.

ஆரி தனது ஆட்சேபத்தை வீட்டின் கேப்டனான ரம்யாவிடம் சொன்ன போது, "இது அவங்கங்க தனிப்பட்ட தேர்வு. நான் தலையிட முடியாது” என்று சமயோசிதமாக சொல்லி எஸ்கேப் ஆனார். “அதெல்லாம் நீங்க எப்படி சொல்லலாம். தப்பு தப்பு...” என்று கில்லி பிரகாஷ்ராஜ் போல ஆட்சேபித்துக் கொண்டு வந்தார் பாலாஜி.

பிக்பாஸ் - நாள் 72

பாலாஜி சொல்லி முடிக்கும் வரை காத்திருந்த ஆரி, “அப்படியா தம்பி... இதே விஷயத்தை நீதான் ஆரம்ப வாரத்துல சொன்னேன். வாலன்ட்டியர் வேலையெல்லாம் பெஸ்ட் பர்ஃபாமர்ல கொண்டு வரக்கூடாதுன்னு... இப்ப நீயே மாத்தி சொல்றே?!" என்று கிடுக்கிப்பிடி போட்டவுடன், "ஓஹோ... இவரு போட்டு வாங்கறாருடோவ்'’ என்று புரிந்தது.

ஆனால், ஆரி கோடு போட்டால் அதில் வட்டம் போட்டு தப்பித்து வரும் சாமர்த்தியம் பாலாஜிக்கு இருந்தது. "முன்னாடி நபர்களின் எண்ணிக்கை அதிகமா இருந்தது. இப்ப கம்மியா இருக்கு. அதனால்தான் அஞ்சு ஷிஃப்ட்டா பிரிச்சோம். அதுல சில பேர் வாலன்ட்டியர் பண்றோம்" என்பது போல் ஒரு லாஜிக் சொன்னார். "ஒரு வேலையை 18 பேர்கள் இணைந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் முடித்தால்..." என்கிற மாதிரி சிறுவயதில் கணக்குப் பாடத்தில் படித்த விஷயங்கள் எல்லாம் இப்போது நினைவிற்கு வந்து பீதியூட்டியது.

"என்னத்த அஞ்சு ஷிஃப்ட்டோ. எனக்கு ஒண்ணும் புரியலை. என்னமோ கல்யாணத்திற்கு சமைக்கிற மாதிரி சீன் போடுறீங்க... நான் ஒருத்தனே அந்த வேலையைப் பண்ணிடுவேன்" என்று ஆரி சொன்னது ‘கெத்தாக’ தெரிந்தது. உழைப்பிற்கு அஞ்சாதவர்கள்தான் இப்படி பேச முடியும்.

ஷிவானி கஷ்டப்படுகிறார் என்பதால்தான் ‘அய்யோ... பாவம்’ என்று குஷி மும்தாஜ் மாதிரி சொல்லிக் கொண்டு அவருக்கு உதவ பாலாஜி முன்வந்திருக்கிறார். இல்லையென்றால் அவரது சமீபத்திய ‘மனமாற்றத்தின்’ படி சைலன்ட்டாக பதுங்கியிருப்பார்.

ஷிவானி வேலை செய்யாமல் டபாய்ப்பதும் பாலாஜி முன்னே சொன்னதை இப்போது மாற்றிப் பேசுவதும் ஆரிக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனவேதான் ‘போட்டு வாங்கியிருக்கிறார். "வாலன்டியர் பண்ற விஷயத்தை நாம எப்பவுமே பெஸ்ட் பர்ஃபாமர்ல ஒரு விஷயமா கொண்டு வந்ததில்லை" என்று சாட்சியம் கூறினார் அர்ச்சனா.

ஆரி குறிப்பிடும் லாஜிக்கும் சரியானதுதான். "ஒருவர் வாலன்ட்டியர் செய்ய முன்வருவது வெறும் தியாக அடிப்படையில் அல்ல. நாளைக்கு ‘சிறந்த பங்கேற்பாளர்’ பகுதியில் அதை அவர் கிளையிம் செய்யக்கூடும். ஏனெனில் நபர்களின் எண்ணிக்கை குறைந்து போட்டியின் இறுதி நிலை நெருங்கும் போது ஒவ்வொரு அசைவுமே முக்கியம்.

"யாரு வேணா, எந்த அணிக்கு வேணா வாலன்ட்டியர் பண்ணலாம்" என்று நாட்டாமை ரம்யா தீர்ப்பு கூற கூட்டம் ஒருவழியாக கலைந்தது. ‘போ போ... கூட்டம் போடாத... இப்படியே மெயின்டெய்ன் பண்றா சூனா பானா" என்ற மைண்ட் வாய்ஸூடன் ரம்யாவும் சென்றார்."

பிக்பாஸ் - நாள் 72
லக்‌ஷுரி பட்ஜெட் டாஸ்க் அறிவிப்பு வந்தது. முட்டை பற்றிய டாஸ்க் என்றாலும் இதன் விதிமுறைகள் வான்கோழி பிரியாணி அளவிற்கு நீண்டு கொண்டே சென்றது.

கார்டன் ஏரியா கோழிப்பண்ணையாக மாற்றப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய தங்க முட்டைகளை கோழி இடுமாம். (பிரின்ட்டிங் பிரஸ்ல பொறந்த கோழி போல). அதை சம்பந்தப்பட்ட போட்டியாளர்கள் (அதாவது கோழிகள்) பாதுகாக்க வேண்டுமாம். முட்டைகளைப் பெறாத இதர போட்டியாளர்கள் நரிகளாக மாறி விடுவார்கள். அவர்கள் தங்கள் கைகளில் பூசப்பட்டிருக்கும் வண்ணத்தின் மூலம் முட்டையைத் தொட்டுவிட்டால் அந்தச் சுற்றில் கோழி வெளியேற வேண்டும்.

நரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள கோழிகளுக்கு 200 பிக்பாஸ் கரன்ஸி தரப்படுமாம். இந்த பேரத்தின் மூலம் நரிகள் தங்களை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். ஒப்பந்தத்தில் ஈடுபடாத நரிகள் முட்டையைத் தொட்டு விட்டால் கோழி அவுட். கோழியிடமுள்ள கரென்ஸியும் நரிக்குச் சென்று விடும்.

இறுதியில் எந்த நரியிடம்.... ச்சே.... எந்த நபரிடம் அதிக பிக்பாஸ் கரென்ஸி இருக்கிறதோ அவர்களுக்கு ‘ஸ்பெஷல் பவா்’ தரப்படுமாம். நரியின் வாலை கோழி இழுத்து விட்டால் அந்தச் சுற்றில் நரி அவுட்டாம். ஏதாவது புரிகிறதா? எனக்கும் முழுதாக புரியவில்லை.

பிக்பாஸ் டீமின் உழைப்பு இந்த டாஸ்க்கிலும் தெரிந்தது. கார்டன் ஏரியா ஃபுல்லா புல் வளர்த்து வைத்திருந்தார்கள். ஒரு மெகா சைஸ் கோழி வேறு. அது டைனோசர் சைஸிற்கு முட்டை போடுகிறது. அதிலும் அது ஆதார் கார்டு கம்பெனியில் வேலை செய்த கோழி போல. புகைப்படம் ஒட்டி ஐடென்ட்டி கார்டு போலவே முட்டையைத் தயாரிக்கிறது. இதற்காக பிக்பாஸ் டீமிற்குப் பாராட்டு. ஐடியாதான் சகிக்கவில்லையே தவிர, ஆர்ட் டிபார்ட்மென்ட் ரணகளமாக உழைத்திருந்தார்கள்.

முதலில் ஆரிக்கும் பாலாஜிக்கும் முட்டை வந்து விழுந்தது. சோமுவுடன் பேரத்தை ஆரம்பித்தார் பாலாஜி. அவரது முட்டையை தொடாமல் இருப்பதற்கு பேரம் பேச ஆரம்பித்து ரூ.50-ல் வந்து முடித்தார்கள். ஆனால் ரியோவுடன் ஆரி போட்ட அக்ரிமென்ட் வித்தியாசமாக இருந்தது. ரியோ கடைசியாக வந்துதான் தொட வேண்டுமாம். ஆரம்பக்கட்டத்தில் வரக்கூடாதாம். இதற்காக ரூ.30-க்கு பேரம் பேசினார்.

பிக்பாஸ் - நாள் 72

இந்தப் பேரத்தில் ஆண் போட்டியாளர்களுக்கே முன்னுரிமை கிடைத்தது. பெண் போட்டியாளர்கள் எல்லாம் ‘நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு’ வந்தவர்கள்போல பரிதாபமாக மூலையில் உட்கார்ந்திருந்தார்கள். '‘எல்லோருக்கும் டீ வாங்கித் தர்றேன். ஓகேவா…” என்பது போல “ஆளுக்கு பத்து ரூவா தர்றேன்... ஓகேவா'’ என்று அடிமாட்டு ரேஞ்சிற்கு அவர்களிடம் பேரம் பேசினார் பாலாஜி. "கட்டுப்படியாவாது தம்பி. வேற இடம் பார்த்துக்கோ" என்று கெத்து காட்டினார் அர்ச்சனா.

பாலாஜி தனது டி-ஷர்ட்டின் பின்பக்கத்தை மேலே இயல்பாக தூக்க, "ஏன்... இன்னொரு முட்டை போடப் போறியா?” என்று அப்போது அர்ச்சனா அடித்த கமென்ட் டைமிங்கில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் ரகளையான காமெடி. இந்த ‘காமெடி டைம்’ அர்ச்சனா அதிகம் வெளிவந்தால் நல்லது.

“ஏம்ப்பா தம்பி... அங்க விலை போயிட்டியா... பொறுக்கிட்டு வந்தியா?" என்றெல்லாம் கேட்டு ரியோவை ‘பங்கம்’ செய்தார் அர்ச்சனா. ‘கடைசியா வரணும்’ என்று ரியோவிடம் போட்ட அக்ரிமென்ட்டை சோமுவிடமும் ஆரி போட்டிருக்கிறார் போல. இந்த விஷயம் ரியோவும் சோமுவும் பேசிக்கொண்டபோது நமக்கு தெரிந்தது. எனவே ‘அக்ரிமென்ட்’ கேன்சல் என்கிற மோடிற்கு சென்றார் ரியோ. என்றாலும் "அப்புறம் பார்த்துட்டு சொல்றேன்" என்று ஜாக்கிரதையாகவும் இருந்தார்.

பெண்கள் டீமிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. ஆளுக்கு ரூ.25/- என்று பேரம் படிந்தது. பஸ்ஸர் அடித்தபிறகும் இந்த பேரம் இழுத்ததால் சற்று டென்ஷன் ஆனார் பாலாஜி. கேபி மட்டும் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அர்ச்சனா, அனிதா, ரம்யா, ஷிவானி, ஆகிய நால்வர் மட்டும் ஒப்புக் கொண்டார்கள். இந்த இடத்தில் பாலாஜி திறமையாக ஒரு காரியம் செய்தார். “ஆரிகூட நீங்க டீல் பேசக்கூடாது'’ என்றொரு பாயின்ட்டை அக்ரிமென்ட்டில் அவர் இணைக்க முயன்ற போது, பெண்கள் டீம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. (புத்திசாலிகள்).

பிக்பாஸ் - நாள் 72

களத்தில் இப்போது கோழிகளாக இருந்தது பாலாஜியும் ஆரியும். இதர அனைவரும் நரிகள். ஓகேவா?

பாலாஜியுடன் அக்ரிமென்ட் போட்டுவிட்டதால் அங்கு செல்லாமல் ஆரியை டார்கெட் செய்து களத்தில் இறங்கினார் அர்ச்சனா. "விதிப்படி ஒவ்வொருத்தரா வாங்க. கூட்டமா வந்தீங்கன்னா வயலென்ட் ஆயிடும்" என்று எச்சரித்தார் ஆரி. இது பற்றிய குழப்பமான உரையாடல் நடக்கும் போது ‘பே’வென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆஜீத்தின் வாலைப் பிடித்து ‘அவுட்’ ஆக்கினார் பாலாஜி. இது சாமர்த்தியமான மூவ். பாலாஜிக்கு அமைந்திருந்த இடமும் அவருக்குச் சற்று வாகாக இருந்தது.

"இன்னமும் கேம் ஆரம்பிக்கலை. பேசிட்டுத்தானே இருக்கோம்" என்று இதை ரியோ ஆட்சேபிக்க டென்ஷன் ஆகி வாலைத் தூக்கி எறிந்தார் பாலாஜி. பஸ்ஸர் அடித்தாலே ஆட்டம் ஆரம்பம் என்றுதான் பொருள். அவர் திருப்பித் தந்திருக்கத் தேவையில்லை. ரியோவின் தலைமையில் விதிகளை மறுபடியும் தெளிவாகப் பேசி மீண்டும் தெளிவாகக் குழம்பினார்கள். ‘வாலைக் கொடுடா’ என்று ஆஜித்திடம் மல்லுக்கட்டினார் பாலாஜி.

ஒரு கட்டத்தில் ‘பே’ வென்று நின்றிருந்த கேபியின் வாலையும் பிடுங்கினார் பாலாஜி. "டேய்... நான் டீல் பேசத்தான் வந்தேன்டா" என்று கேபி சமாளிக்க முயன்றதெல்லாம் பாலாஜியிடம் எடுபடவில்லை. "அப்ப முன்னாடி டீல் பேசும் போது எவ்ளோ கெஞ்சினேன்" என்பது அவர் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும். சிறிது நேரத்தில் தனது ஏரியாவில் இருந்து நெடும் தூரம் தாண்டிச் சென்று ரியோவின் வாலைப் பிடுங்கி வந்தார் பாலாஜி. அவரின் இந்த சாகசம் உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.

பாலாஜி செய்த இந்தக் களேபரத்தில் கூண்டை விட்டு தாண்டிய ஆரியின் முட்டை மீது பாய்ந்து வண்ணத்தை வெற்றிகரமாக தடவி விட்டார் அனிதா. அதை ஆரி வந்து தடுக்க முயன்றபோது அனிதாவிற்கு சற்று அடி பட்டது. என்றாலும் சமாளித்துக் கொண்டு எழுந்த அனிதாவை இதர போட்டியாளர்கள் பாராட்டினார்கள்.

ஆக முதல் சுற்றின் முடிவில் ஆரி தோற்று நரியாக மாறினார். ஆரியின் பணம் முழுக்க அனிதாவிடம் வந்தது. ஆனால் அதை ஏனோ அவர் இதர பெண்களிடம் பங்குபோட எடுத்துச் சென்றார். (அப்படியொரு டீலோ... என்னமோ?!) பையனை சாலையில் தள்ளி வண்டியில் அடிபட வைத்து பணம் பிடுங்கும் கும்பலின் தலைவன் வடிவேலு போல, "ஆங் ஆங்... லைனா வாங்க. பேமென்ட்டை வாங்கிட்டு போங்க. சொன்னதைச் செய்வான் இந்த பாலாஜி" என்று பணத்தை விநியோகம் செய்தார் பாலாஜி.

பிக்பாஸ் - நாள் 72

"ரூல் படி ஒவ்வொருத்தரா வாங்க. கும்பலா வந்தா வயலன்ஸ் ஆகிடும்" என்று தோற்றுவிட்ட ஆத்திரத்தில் கத்தினார் ஆரி. "நீங்க கூண்டை விட்டு வெளியே வந்தப்புறம்தான் அனிதா கை வெச்சாங்க” என்று லாஜிக் பேசினார் ரம்யா. இதிலுள்ள நீதி என்னவெனில் பெண்களின் பலம் தெரிந்து அவர்களிடமும் டீல் பேசிய பாலாஜி தப்பித்தார். பெண்களைக் குறைவாக எடை போட்ட ஆரி தோற்றுப் போனார். இப்படி வெச்சுக்கலாமா?

"ஒருத்தர்தான் வரலாம். ஆனா யாரு வர்றாங்கன்னு சொல்லிட்டு வரணும்னு அவசியமில்ல" என்றதற்கு "அப்போ பார்த்துக்கலாம். இனிமேதான் பார்க்கப் போறீங்க. இந்த ஆரியோட ஆட்டத்தை" என்று சூடானார் ஆரி. ஆரி செய்த தவறு என்னவெனில் பாலாஜி போல சாகசம் செய்ய ஆசைப்பட்டு அவர் கூண்டைவிட்டு தாண்டி வந்ததுதான்.

இந்தச் சண்டையில் அதிகம் மாட்டிக் கொண்டது ரியோதான். பாவம், டாஸ்க் அறிவிப்பை அவர் படித்த காரணத்தினால் "ரூல் என்ன?" என்று ஆளாளுக்கு அவரைப் போட்டு வறுத்துக் கொண்டிருந்தார்கள். "வயலென்ஸ் வேணாமே" என்று ரியோ போராடிக் கொண்டிருந்தார். "நாம நினைச்சா இதை அஹிம்சை விளையாட்டா மாத்த முடியும்" என்றார் அன்பு அர்ச்சனா (கோழியிடம் கெஞ்சி வாங்கலாம் போல).

ஆரி அவுட் ஆனதால் அடுத்த சுற்றிற்காக ரம்யாவிற்கு முட்டை வந்தது. அவர் சோமிடமும் அர்ச்சனாவிடமும் டீல் போட்டார். இதற்காக அவர்கள் ரம்யா ஏரியாவின் பின்பக்கத்தில் 260 டிகிரிக்குக் காவல் காப்பார்களாம். (இந்திய – சீன பார்டர் பேரம் கூட இப்படி துல்லியமா அமையாது). ஆனால் சோமை அழைத்த பாலாஜி, "பாதி பணம் தர்றேன்... இங்க வந்துடு" என்று அழைக்க, ரம்யா என்கிற கோழியை விட்டு விலக முடியாமல் சோம் தவித்தார். “அவரும் அதே டீல் சொல்றாரு" என்று சோம் சொல்ல "அப்ப அங்க போறியா, இங்க இருக்கியா... சொல்லித் தொலை" என்று புன்னகையுடன் எரிச்சலானார் ரம்யா.

பிக்பாஸ் - நாள் 72

சோமிடம் டீல் செட் ஆகவில்லை போல. எனவே ஆஜித்தை அழைத்து ‘பாதி பணம்’ டீலை பேசி முடித்தார் பாலாஜி. ஆஜித் கோழியாக மாறும் சமயத்தில் அதே போல் செய்து கொள்வார்களாம். இந்த டீல்கள் எல்லாம் கேமரா முன்பு சாட்சியத்துடன் நடைபெற்றது. (வரலாறு முக்கியம் அமைச்சரே!). ரம்யாவிடம் டீலை பேசி முடித்தார் சோம். பிறகு அர்ச்சனாவையும் இணைத்துக் கொண்டார்கள். (எனக்கு மண்டை குழம்புது! உங்களுக்கு?!).

இரண்டாம் சுற்று ஆரம்பித்தது. ஒவ்வொரு லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்கிலும் ஏதாவது குளறுபடியை செய்வதே பாலாஜியின் வழக்கமாக இருக்கிறது. அவர் பாதுகாப்பாக முட்டையின் மீது அமர்ந்திருக்க சில நொடிகளில் அது ‘டப்’பென்று உடைந்து போனது.

"பிக்பாஸ்... இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே?!'’ என்று ஜாலியாக அலறிய பாலாஜியைப் பார்த்து ‘அட கூமுட்டை!’ என்று பிக்பாஸ் நினைத்திருப்பார். அது உண்மையிலேயே தங்கமுட்டையா என்ன, தெர்மகோல் செட்டப்தானே? உடையும் என்று கூடவா தெரியாது?

இந்தக் களேபரத்தில் ரம்யாவின் முட்டையை தொட்டு விட்டு ‘ஹெஹெ...’ என்று சிரித்து ஆட்டம் போட்டார் சோம். அவர் ரம்யாவுடன் டீலில் இருந்தார் போல. எனில் ஏன் இப்படிச் செய்தார்? பயபுள்ள டபுள் கேம் ஆடியதுபோல என்று முதலில் நினைக்கத் தோன்றியது. ஆனால் ரம்யா, அர்ச்சனாவுடன் இணைந்து சேஃப்டிக்காக ஒரு தனி டீல் போட்டு விட்டு ‘பாதி பாதி’ பிரித்துக் கொள்வதாக சோமுடன் முன்பே இன்னொரு டீல் பேசியது இப்போதுதான் நினைவிற்கு வந்தது. ஆக… ரம்யா வேண்டுமென்றேதான் சோமிற்கு விட்டுக் கொடுத்திருக்கிறார் போல.

ஆனால் ‘கூண்டை விட்டு வந்தால்தான் தொட முடியும்’ என்பதாக இவர்கள்தான் ரூல் பேசினார்கள். ஆனால் ரம்யா வட்டத்தை விட்டு வெளியே வராமலே சோம் தொட்டார். இப்படி இவர்கள் விதிகளை கன்னாபின்னாவென்று கலைத்து ஆடுவதால் சனி, ஞாயிறு விசாரணை சபையில் மாட்டிக் கொண்டு கோழி போல முழிப்பார்கள் என்று தோன்றுகிறது.

பிக்பாஸ் - நாள் 72

‘'இந்த உடைஞ்ச முட்டையை வெச்சு என்ன பண்றது?'’ என்று பாலாஜி சங்கடத்துடன் கேட்க “யோவ்.... அதை வெச்சு ஆம்லேட்டா போட முடியும்” என்று உள்ளுக்குள் பிக்பாஸ் டென்ஷன் ஆகியிருக்கலாம். இதுதான் சாக்கு என்று உடைந்த முட்டையின் மீது வண்ணத்தை தடவி சாமர்த்தியம் காட்டினார் ஆஜித். நல்ல மூவ்தான். ஆனால் பிக்பாஸ் இதை ஒப்புக் கொள்ளவில்லை. (என்றாலும் பாலாஜியுடன் ரகசிய டீலில் இருந்தார் ஆஜித்).

'‘பாலாஜி... முட்டையை நீங்க உடைச்சுட்டதால, அடுத்த சுற்றில் கலந்து கொள்ள முடியாது...” என்று கறார் காட்டிய பிக்பாஸ் ‘நல்லா விளையாடிட்டு இருந்தியே தம்பி. இப்படி நாசமாப் போனியே’ என்று பின்குறிப்பாக உச்சுக் கொட்டவும் தவறவில்லை.

"பாலாஜி... நீங்க அடுத்த ரவுண்டுக்கு போக முடியாதுல்ல. நீங்க கொடுத்த காசுல்லாம் எங்களுக்குத்தானே?” என்று சாமர்த்தியமாக கேட்டு வைத்துக் கொண்டார் ரம்யா. சோம் ரம்யாவிடம் தனி டீல் போட்டிருந்ததால் அது குறித்த காண்டுடன் இன்னொரு பக்கம் உலவிக் கொண்டிருந்தார் அர்ச்சனா.

அடுத்த சுற்றில் ஆஜித்திற்கும் சோமிற்கும் முட்டை வந்து விழுந்தது. சோமுவும் ரம்யாவும் தங்களின் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்திக் கொண்டார்கள். போலவே பாலாஜியும் ஆஜித்தும் தங்களின் டீலை நினைவுப்படுத்திக் கொண்டார்கள். ஆஜித்தின் முட்டையைத் தொடுவது தொடர்பாக ஆரியுடன் தனியாக ஒரு டீலையும் போட்டார் ரம்யா. (நடிகர் விவேக் தொலைக்காட்சி சீரியல்களை கிண்டல் செய்யும் ‘டெஸ்ட் ட்யூப்’ காமெடிக்காட்சி நினைவிற்கு வருகிறதா?!).

“நீ எந்தை எடுத்துக்கோ. நான் உந்தை எடுத்துக்கறேன்’' என்று ஆஜித்திடம் டீல் பேச வந்தார் கேபி. டூ லேட். ஆஜித் பாலாஜியுடன் ஏற்கெனவே டீலில் இருப்பதால் அதை சொல்ல முடியாமல் ‘யோசிச்சு சொல்றேன்’ என்று மென்று முழுங்கினார்.

நரிகள் கூடி மீண்டும் விதிகளையும் பேரங்களையும் பேசி நம்மை மிகவும் குழப்பினார்கள். ரியோ இவற்றில் அதிகம் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் சாதகமாக ஆடுவதால் பிறகு விசாரணையில் மாட்டிக் கொள்வார்கள் என்பதை ரியோ உணர்ந்திருந்தார் போல. (கால்சென்டர் டாஸ்க் அனுபவம்!). “முட்டையைப் போராடி காப்பாத்துறதுதான் கோழியோட வேலை. தானா கொடுக்கக்கூடாது" என்று ரியோ சொன்னதை ஏற்றுக் கொண்டார் சோம்.

பிக்பாஸ் - நாள் 72

டாஸ்க் ஆரம்பித்தது. ஆஜித்தின் முட்டையை கேபியும் சோமின் முட்டையை ஆரியும் சில விநாடிகளிலேயே தொட்டு விட்டார்கள். “இதுக்காடா தம்பி... அவ்ளோ நேரம் டீல் பேசினோம்?” என்று ஆஜித்தை கிண்டல் செய்தார் பாலாஜி. ‘'அடுத்த முறை முட்டை மேலேயே நான் படுத்துப்பேன்... இதுக்காகவா இவ்ளோ அக்ரிமென்ட். எதுக்கு டைம் வேஸ்ட்?” என்று ஆஜீத் கோபம் அடைந்தார். அவர் இவ்வாறு கோபம் அடைவது இந்த சீஸனில் இரண்டாவது முறை.

‘இனிமே தனித்தனியா விளையாடணும்’ என்று ஒவ்வொருவருமே காண்டானார்கள். ‘வந்தவரைக்கும் லாபம்... வரலைன்னா. நாமம்’ என்று புதிய ஸ்லோகனை உருவாக்கினார் ஆரி. (சிட் ஃபண்ட் விளம்பரத்திற்கு நன்றாகப் பொருந்தும்.

‘யார் முதலில் முட்டையைத் தொடச் செல்கிறார்கள்’ என்பதை முதலிலேயே பேசிக் கொள்ள வேண்டும் என்கிற விஷயம் நரிக்கூட்டத்தில் குழப்பத்தை ஏற்பட ரணகளமாக நரிகள் விவாதித்துக் கொண்டு ஒரு முடிவிற்கு வந்தன.

இந்த உலகத்திலேயே தெர்மகோல் முட்டையை அடைகாத்து குஞ்சு பொறித்து சாதனை செய்த ஒரே கோழி நம்ம பாலாஜிதான்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/hen-and-chick-task-bigg-boss-tamil-season-4-day-72-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக