Ad

சனி, 5 டிசம்பர், 2020

``ஓ.பி.எஸ்-ஐ அமைதியா இருக்கச் சொல்லுங்க” - முதல்வரிடம் கடுகடுத்த அமைச்சர்கள்!

போர் வரும்போது அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருந்த ரஜினி, ஒருவழியாக 2021 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து களமிறங்கிவிட்டார். டிசம்பர் 31-ம் தேதி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடப்போவதாகவும், ஜனவரி மாதம் கட்சியைத் தொடங்குவதாகவும் அவர் முறைப்படி அறிவித்திருக்கிறார். இந்தநிலையில், தேனி மாவட்டம் தப்புகுண்டு பகுதியில் அமையவிருக்கும் அரசு கால்நடை மருத்துவமனைக் கல்லூரிக்கான இடத்தை ஆய்வு செய்வதற்காக சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ரஜினியின் அரசியல் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பி.எஸ்., ``ரஜினிகாந்தின் அரசியல் வருகையை நாங்கள் வரவேற்கிறோம். அவர் வரவு நல்வரவாக அமையட்டும். எதிர்கால அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமையும்’’ என்று பேசியது, அ.தி.மு.க வட்டாரங்களில் அனலைக் கிளப்பியது.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

டிசம்பர் 4-ம் தேதி, சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``ரஜினியுடன் கூட்டணி என்று ஓ.பி.எஸ் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து” என்று அதிரவைத்தார். இதே கருத்தைக் கூறியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், ``ஓ.பி.எஸ் தனது தனிப்பட்ட கருத்தைக் கூறியிருக்கிறார். ரஜினி கட்சி ஆரம்பித்தாலும், அ.தி.மு.க-வின் வாக்குவங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எம்.ஜி.ஆர் மிகப்பெரிய தலைவர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டுக் கூறுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது” என்று வெடித்திருக்கிறார்.

Also Read: மிஸ்டர் கழுகு: பன்னீர் செக்... எடப்பாடி பக் பக்!

ரஜினியுடன் கூட்டணி அமையலாம் என்று கூறியிருப்பது வேறு யாருமல்ல... அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர். அவர் கருத்துக்கு வேக வேகமாக முதல்வரும் அமைச்சரும் மறுப்பு தெரிவிக்கிறார்கள். டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்த பன்னீருடன் முகம் கொடுத்துப் பேச அமைச்சர்கள் சிலரும் தயங்கி ஒதுங்கினர். ஜெயக்குமார், பன்னீர் நின்றிருந்த பக்கம் திரும்பியே பார்க்கவில்லை. இதே கருத்தை ஜெயலலிதா கூறியிருந்து, `அது ஜெயலலிதாவின் தனிப்பட்ட கருத்து’ என்று எடப்பாடி, ஜெயக்குமாரால் கூற முடியுமா? ஓ.பி.எஸ் மீது எதற்காகக் கொந்தளிக்கிறது அ.தி.மு.க வட்டாரம்... கழகத்தின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

ஓ.பி.எஸ்

``அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை முன்மொழிந்து இரண்டு மாதம்கூட ஆகவில்லை. ரஜினியுடன் கூட்டணி என்றால், முதல்வர் வேட்பாளர் யார்... இதை பன்னீர் இப்போது பேச வேண்டிய அவசியமென்ன என்பதுதான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. மாவட்டவாரியாக, ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் வேட்பாளர்களைப் பட்டியலிடும் பணிகள் அ.தி.மு.க-வில் ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பட்டியலில் தன் கை ஓங்க வேண்டும் என்பதற்காக ரஜினி ஆயுதத்தைக் கையிலெடுத்து, எடப்பாடிக்கு செக் வைத்திருக்கிறார் பன்னீர். இது அமைச்சர்கள் சிலரிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

Also Read: பி.ஜே.பி கூட்டணி முடிவைத் தன்னிச்சையாக அறிவித்தாரா ஓ.பி.எஸ்? - அ.தி.மு.க-வில் அடுத்த சர்ச்சை

ஜெயலலிதாவின் நினைவுதினத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, தலைமைச் செயலகத்தில் புரெவி புயல் தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார். இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு அமைச்சர்கள் சிலர் எடப்பாடியிடம் பேசியிருக்கின்றனர். `ஓ.பி.எஸ்-ஐ கொஞ்சம் அமைதியா இருக்கச் சொல்லுங்கண்ணே... தேவையில்லாத விஷயங்களைப் பேசிச் சலசலப்பை ஏற்படுத்துறாரு. ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்னு சொல்லிட்டு, அவரே ஒற்றுமையைக் குலைக்குறாரு’ என்று பொருமியிருக்கிறார்கள் அமைச்சர்கள். இதற்கு எடப்பாடி, `இதையெல்லாம் அவர்தான் புரிஞ்சுக்கணும். வேணும்னே பேசுறவர்கிட்ட நாம என்ன புரியவைக்க முடியும்?’ என்று விரக்தியாகக் கூறிவிட்டாராம். ஓ.பி.எஸ் கொளுத்திப் போட்டிருக்கும் வெடி, அவருக்கு எதிராகவே கட்சிக்குள் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. வேட்பாளர் தேர்வின்போது விவகாரம் பூதாகரமாகலாம்” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி

ரஜினியின் வருகையால், அ.தி.மு.க-விலிருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் ரஜினி பக்கம் தாவிவிடக் கூடாது என்பதில் எடப்பாடி தீர்க்கமாக இருக்கிறாராம். மாவட்டவாரியாக கட்சியின் மீது அதிருப்தியிலிருப்பவர்களின் பட்டியலை உளவுத்துறை தனியாக எடுத்துவருகிறது என்கிறார்கள். அதிருப்தியில் இருப்பவர்களின் உள்ளூர் செல்வாக்கு, பணபலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, அவர்களை சமாதானப்படுத்தும் பணிகள் அடுத்தடுத்து ஆரம்பமாகப் போகின்றனவாம். தன் மீது பா.ஜ.க அஸ்திரங்களை ஏவினால், அவற்றை எதிர்கொள்வதற்கும் எடப்பாடி தயாராகிவிட்டார் என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/senior-ministers-asks-cm-edappadi-palanisamy-to-calm-down-ops

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக