Ad

சனி, 5 டிசம்பர், 2020

கோவாக்ஸின் எடுத்த சுகாதார துறை அமைச்சர்... ஆனால் கொரோனா பாசிட்டிவ்?!

ஹரியானா மாநிலத்தின் உள்துறை மற்றும் சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ். 67 வயதாகும் இவர் சற்றுமுன் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக ட்வீட் செய்துள்ளார். தற்போது அம்பாலாவில் உள்ள அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் அனில் விஜ்.

இவர் சில நாட்களுக்கு முன்புதான் தடுப்பூசி சோதனையில் பங்குகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 20-ம் தேதி இவர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'Covaxin' தடுப்பூசி டோஸை எடுத்துக்கொண்டார். ''ஹரியானாவில் இந்த தடுப்பூசி சோதனையில் பங்குகொள்ளும் முதல் தன்னார்வலர் நான்தான்'' என அப்போது ட்வீட் செய்திருந்தார் அவர்.

ஹரியானா சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ்

முதல் இரண்டு கட்ட சோதனைகளில் 1000 பேருக்கு மேல் இந்த Covaxin தடுப்பூசி சோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் நல்ல முடிவுகள் கிடைத்ததால்தான் மூன்றாம் கட்ட சோதனைக்கு (Phase 3) ஒப்புதல் பெற்றது பாரத் பயோடெக் நிறுவனம். இந்த கட்ட சோதனையில் சுமார் 25,000 பேர் பங்குகொண்டுள்ளனர். அனில் விஜ் தேவையான இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டாரா, அவருக்குத் தடுப்பூசிக்குப் பதிலாக Placebo ஊசி போடப்பட்டிருக்குமா என்பது போன்ற விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.

ஏற்கெனவே முதல் கட்ட சோதனையில் பங்குகொண்ட தன்னார்வலர் ஒருவருக்குத் தீவிர பக்கவிளைவுகள் இருப்பது தெரிய வந்தும் அதை வெளியில் சொல்லாமல்விட்டது பாரத் பயோடெக் என்ற குற்றச்சாட்டும் சமீபத்தில் முன்வைக்கப்பட்டது. பிற நோய்கள் எதுவும் இல்லாத அந்த தன்னார்வலருக்கு நிமோனியா அறிகுறிகள் வந்திருக்கிறது.

"இந்த விளைவுகள் பற்றி 24 மணிநேரங்களுக்குள் CDSCO-DCGI-வுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்குக் காரணம் என்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் தடுப்பூசிக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது" என்று விளக்கமளித்தது பாரத் பயோடெக் நிறுவனம்.

Oxford-AstraZeneca மற்றும் Johnson & Johnson நிறுவனங்கள் இதே போன்ற நிகழ்வுகளை வெளிப்படையாக வெளியில் தெரிவித்தன. ஆனால், பாரத் பயோடெக் நிறுவனமோ CDSCO-DCGI அமைப்போ இதுகுறித்த தகவல்களை வெளியிடவில்லை. ஆங்கில ஊடகங்கள் சில தகவல்களைப் பெற்று வெளியிட்ட பிறகே விளக்கமளித்திருக்கிறது பாரத் பயோடெக். 'Covaxin தடுப்பூசியின் பயனளிக்கும் விகிதம்(Efficacy) குறைந்தது 60% இருக்கும்' என நம்பிக்கையளித்திருந்தது பாரத் பயோடெக் நிறுவனம்.

Covaxin

உலகமெங்கும் பல தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கின்றன. ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இரண்டு நாடுகளில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இவற்றைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளக் கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்!

Also Read: ஃபைஸர் தடுப்பூசி... அனுமதி கொடுத்த பிரிட்டன்... முடிவுக்கு வருகிறதா கொரோனா?

ஏற்கெனவே ஆகஸ்ட் மாதம் ஹரியானாவின் முதலமைச்சர் மோனோஹர் லால் கட்டெரும், சட்ட பேரவை தலைவர் கியான் சந்த் குப்தாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகினர். இப்போது வரை ஹரியானாவில் 2.4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 2,539 பேர் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.



source https://www.vikatan.com/science/medicine/haryana-health-minister-tests-positive-for-covid-19-days-after-taking-covaxin-shot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக