தென்மாவட்ட கடலோர பகுதிகளை மிரட்டி வந்த புரெவி புயல் வலுவிழந்து கரையைக் கடந்ததால் ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரும் சேதத்தில் இருந்து தப்பின. புயல் கரையைக் கடந்தபோது வீசிய பலத்த காற்று, தொடர் மழையால் தீவுப் பகுதியில் சில படகுகள் சேதமடைந்ததுடன், சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடல் சீற்றத்தல் தடுப்பு சுவர்கள் மற்றும் போலீஸ் புறக்காவல் கட்டடம் ஆகியன சேதமடைந்தன.
இலங்கை அருகே வங்க கடலில் கடந்த மாத இறுதியில் உருவானது புரெவி புயல். இந்த புயல் கடந்த 2-ம் தேதி வலுப்பெற்று இன்று அதிகாலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படும் என அச்சம் நிலவியது. இதையடுத்து புயல் பாதிப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.
கடலோர மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள், தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பாம்பன் சின்னப்பாலம் கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவரின் நாட்டுப்படகு பழுதான நிலையில், 3 பேர் மனோலி தீவில் சிக்கித் தவித்தனர். இது குறித்து மண்டபம் மீன்வளத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், மீன்வளத் துறை அலுவலர்கள் இளம்வழுதி, அப்துல் உள்ளிட்டோர் கடலோரக் காவல் படையினர் உதவியுடன் மனோலி தீவுக்குச் சென்று மீனவர்களை மீட்டு வந்தனர்.
Also Read: புரெவி புயல்: இயல்பை விட அதிக புயல்கள் தமிழகத்தைக் கடக்கின்றனவா.. உண்மை என்ன?
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு முதல் ராமேஸ்வரம் தீவு பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தீவு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த புயல், மதியத்திற்கு மேல் மெல்ல நகரத் தொடங்கி மாலை 5.30 மணியளவில் பாம்பனில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது வலுவிழந்து காணப்பட்டதால் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன் தொடர் மழையும் பெய்தது.
நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் மட்டும் 20.04 செ.மீ மழை பெய்தது. தங்கச்சிமடத்தில் 8.8 செ.மீ மழையும், பாம்பனில் 7.7 செ.மீ மழையும் பெய்தது. இந்த மழை மற்றும் காற்றின் காரணமாக பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் 4 வீடுகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் தெற்குவாடி அந்தோணியார் கோயில் பகுதியில் கடல் நீர் உட்புகுந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய் துறையினர் அப்பகுதிகளுக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
புயல் வலுவிழந்து கரையைக் கடந்த நிலையில் பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் சில படகுகள் சேதமடைந்தன. இதையடுத்து இன்று காலை முதல் மீனவர்கள் சேதமடைந்த படகுகளைச் சீர்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்படும் நிலையில் பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 7-ம் எண் புயல் கூண்டு தற்போது 3-ம் எண் கூண்டாக மாற்றப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/disaster/cyclone-burevi-weakens-rameswaram-gets-20-cm-rain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக