கால்சென்டர் டாஸ்க் முடிந்த பிறகு ‘தகுதியின் அடிப்படையில்’ உங்களை நீங்களே வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று போட்டியாளர்களிடம் சொல்லி விட்டார். பிக்பாஸ். இதற்குப் பதில் ‘அடிச்சிக்கிட்டு சாவுங்க’ என்று நேரடியாக சொல்லியிருக்கலாம் என்று நேற்று எழுதியிருந்தேன். அப்படியே ஆயிற்று.
59-ம் நாள் இரவு சுமார் எட்டு மணிக்கு ஆரம்பித்த இந்த தேர்வுமுறை, ‘விடிய விடிய பலத்த அடியால்மழை கொட்டித் தீர்த்தது’ என்கிற தலைப்புச் செய்தி போல நள்ளிரவு பன்னிரெண்டு மணி வரை நீடித்தது. என்னதான் மனிதன் கூடி வாழும் விலங்கு என்றாலும் அவனுக்குள் உறைந்திருக்கும் சுயநலம், பேராசை, வன்மம், வன்முறை போன்ற விஷயங்கள் அதற்கான சந்தர்ப்பங்களில் அடித்துக் கொண்டு வெளியே வரும். இங்கும் அதுவே நடந்தது.
தன்னுடைய தகுதி என்ன என்கிற சுயபரிசீலனை, அடுத்தவரின் தகுதியை ஒப்புக் கொள்ளும் நேர்மை, விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை போன்றவை இருந்தால் இத்தனை நீளமான விவாதத்திற்கு அவசியமேயில்லை. ஆனால் சிலருக்கு மட்டுமே இவை இருந்தன.
இன்னொரு முக்கியமான விஷயம். ஒரு கச்சிதமான தலைமை இல்லாத கூட்டம் எப்படி தறிகெட்டு தான்தோற்றித்தனமாக திரியும் என்பதற்கான உதாரணமும் இது. தலைமை இல்லாத மனிதக்கூட்டம் என்பது மிக ஆபத்தான ஆயுதம். எப்படி வேண்டுமானாலும் திசைமாறும்.
ஆரி என்னதான் இந்தத் தேர்வுமுறையை ஒருங்கிணைத்து திறமையாக நடத்த முயன்றாலும் நிலைமை கை மீறிப் போயிற்று.
ஓகே.. 60-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
‘ஒளவைப் பாட்டியே... ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்திப் பாடு’ என கேட்டவுடன் ‘ஒன்றானவன்... உருவில் இரண்டானவன்’ என்று சிவனைப் பற்றி 'திருவிளையாடல்' திரைப்படத்தில் பாடினார் கே.பி.சுந்தராம்பாள். அந்தப் பாடல் ஒரே கடவுளைப் பற்றியது என்பதால் பிரச்னையில்லாமல் போயிற்று. மாறாக பல கடவுள்களை டாப்டென் வரிசையில் மதிப்பிடும் வேலையில் இறங்கினால் அது மகா கலவரத்திற்கு வழிவகுத்து விடும். கடவுளுக்கே அந்த நிலைமை என்னும் போது மனிதனின் நிலையைச் சொல்லவா வேண்டும்?
பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் 13 நபர்களையும் வரிசைப்படுத்தும் கலந்துரையாடலைத் தொடர்ந்தார்கள். எந்தெந்த காரணிகளை வைத்து சிறந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கலாம் என்கிற விவாதத்தில் குழப்பம் நிலவிற்று "நீங்க பாட்டுக்கு போனை வெச்சிட்டு ஜாலியா போயிடுவீங்க. அப்ப அதிக முயற்சி எடுத்தவங்களுக்கு என்னதான் இருக்கு?” என்ற பாயின்ட்டை பாலாஜி முன்வைத்தார்.
“நீ பாட்டுக்கு ஆரியை என்னென்னமோ பேசிட்டு போயிட்டே. அவர் நைட்டெல்லாம் தூங்கவே இல்ல தெரியுமா?” என்று ஆரியின் பரிதாப நிலைமைக்கு பரிந்து கொண்டு வந்தார் ரமேஷ். புரொட்யூசர் பையன் விவகாரத்தை இழுத்து விட்டதால் ரமேஷிற்கு கோபம் போல. பதில் சொல்ல சந்தர்ப்பம் அளிக்காததுதான் பாலாஜியின் பிரச்னை. போலவே அவரது சில கேள்விகளும் சற்று எல்லை மீறி இருந்தன. மற்றபடி பாலாஜி இந்த டாஸ்க்கை சிறப்பாக ஆடியவர்களில் ஒருவர். அர்ச்சனாவை அவர் பொறுமையாக ஹேண்டில் செய்தவிதத்தை கமலும் பாராட்டியிருக்கிறார்.
கூட்டு விவாதம் ஒத்து வராத காரணத்தினால் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொள்ளும் உரையாடலை ஆரம்பித்தார்கள். ஷிவானி உள்ளிட்ட சிலர் ‘இந்த டாஸ்க்கை தாங்கள் சரியாக கையாளவில்லை’ என்பதை நேர்மையாக ஒப்புக் கொண்டார்கள். சிலர் விடாமல் மல்லுக்கட்டினார்கள். "அழைப்பின் நோக்கத்தை கேள்விக்கு உட்படுத்த வேண்டாம்’' என்பது போன்ற அபத்தமான ஆலோசனையை இடையில் செருக முயன்றார் சனம். பொறுமையை இழந்த பிக்பாஸ் பஸ்ஸர் அடித்து கலந்துரையாடலை நிறுத்த, ‘என்னாதிது’ என்று மக்கள் அலறினார்கள்.
‘நீங்க விவாதம் நடத்தி கிழிச்சது போதும். வரிசைப்படுத்தற வழியைப் பாருங்க’ என்று பிக்பாஸ் உத்தரவிட்டதும், ரேஷன் கடையில் சர்க்கரை வாங்கச் சென்ற க்யூ மாதிரி ஆளாளுக்கு முதலிடத்தைப் பிடித்துக் கொள்ள அலைபாய்ந்தனர். ஆரி, சனம், அர்ச்சனா ஆகியோர் முதலிடத்திற்கு போட்டிப் போட்ட ஒரே களேபரமான உரையாடலும் சண்டையும் நடந்தது. தனது இடத்தை விட்டுத்தர மாட்டேன் என்று அடம்பிடித்தார் சனம்.
சனம் ஒரு முறை மட்டுமே இந்த டாஸ்க்கில் கலந்து கொண்டதால் ’'13-ம் இடத்திற்குப் போங்க'’ என்று அதட்டினார் பாலாஜி. '‘தைரியம் இருந்தா எனக்கு கால் பண்ணியிருக்க வேண்டியதுதானே?” என்று சனம் பதிலுக்கு அலப்பறை செய்ய பாலாஜியின் மண்டையில் ‘சுர்’ ஏறிக் கொண்டது.
டாஸ்க்கின் படி சனம் பதிலுக்கு சாமிடம் பேசியிருக்க வேண்டும். ஆனால் சாம் கடந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால் அது சாத்தியமில்லை. இது சனத்தின் தவறு கிடையாது. எனவே இதை ஒரு குற்றமாக சனத்தின் மீது சொல்ல முடியாது. சாமிடம் மிகத் திறமையாகவே வாதாடினார் சனம். அதைப் போலவே சாமும் பஸ்ஸர் அடிக்கும் வரை சமாளித்தார். மற்றவர்களின் இரண்டு அழைப்புகளுக்கும் இணைத்து தரப்படும் அதே மதிப்பெண்ணை சனத்தின் ஒரு அழைப்பிற்கு தர வேண்டும் என்பதுதான் சரியான அளவுகோலாக இருக்க முடியும்.
இதற்கிடையில் 13 என்கிற ராசியான எண்ணை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் நிஷா. ‘Topple card’ஐ விட்டுத்தந்த காரணத்தினால் நிஷா எப்படியெல்லாம் அவஸ்தைப் பட்டார் என்பதை முன்பே பார்த்தோம். ஆனால் இப்போதும் அவர் போட்டி மனப்பான்மையை இழந்து விரைவில் மனம் தளர்ந்து விடுவது நிஷாவிற்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.
இவர்கள் போடுகிற சண்டையில் சிலர் மனம் வெறுத்திருப்பார்கள். அது கூட நிஷாவின் முடிவிற்கு காரணமாக இருக்கலாம். "இந்த கடைசி இடம் எனக்குத்தான்'’ என்று நிஷாவிடம் ஜாலியாக போட்டிக்கு வந்தார் ஷிவானி. (நியாயமான கோரிக்கை!).
“நீ பண்ணது ஒண்ணு... ஆனா, ஒண்ணாவது இடத்துல நிக்கறியா?” என்று சிலேடையால் சனத்தை வாரினார் பாலாஜி. "கடைசி ஏழு பேரை முதலில் நிர்ணயித்து விடுவோம். பிறகு முதல் ஆறு பேருக்கு வாக்கெடுப்போம்'’ என்கிற சரியான ஆலோசனையை ஆரி முன்வைத்தார். ஆனால் அதற்கு சோம் ஆட்சேபித்ததால் மீண்டும் குழப்பம். (சோமுவும் கேபியும் பரஸ்பரம் வழிந்த லட்சணத்திற்கு அவர்களை மெயின் கேட்டிற்கு அருகில்தான் நிற்க வைக்க வேண்டும்.)
'‘யார் யாரெல்லாம் சனம் முதல் எண்ணிற்கு தகுதியானவர் என்று நினைக்கறீங்க?” என்று ஆரி கேட்ட போது வீடே மயான அமைதியாக மாறியது. ‘'உங்களைப் பத்தி தெரியுண்டா...டேய்’' என்று காண்டான சனம் கோபித்துக் கொண்டு நேராக 13-ம் எண்ணை நோக்கி நடந்தார். (ரொம்ப ராசியான நம்பர் போலிருக்கு).
‘'சரி, சனத்திற்கு நான் வாக்களிக்கிறேன்'’ என்று ரியோ முன்வர ‘'நானும் போடறேன்.. நான் பயந்து போய்தான் அவங்களுக்கு கால் பண்ணலை'’ என்ற பாலாஜி, பிறகு “லுலுவாயிக்குதான் சொன்னேன்ம்ப்பா... ஒரு கால் பண்ணவங்களுக்கு போய் யாராவது முதல் இடம் தருவாங்களா... சும்மா கலாய்ச்சேன்'’ என்று நக்கல் செய்ய சனத்திற்கு கொலைவெறி ஏறியது. ஒரு மாதிரி செட் ஆகிக் கொண்டிருந்த தேர்வுமுறையை தனது கலாய்ப்பின் மூலம் கலைத்துப் போட்டார் பாலாஜி.
‘'பிக்பாஸ்... நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா... எல்லார்கிட்டயும் தனித்தனியா ஸ்டார் ரேட்டிங் வாங்கி முடிவு பண்ணலாம்’' என்று கேமரா முன்பு வந்து ரகசியம் பேசிய ரியோ, ‘'ஆனா படுபாவிங்க.. ஒத்துக்க மாட்டாங்களே'’ என்று அவரே அந்த யோசனையை நிராகரித்தார். வீட்டின் கேப்டன் ரமேஷ் என்பதே நமக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது. ஆசாமி கூட்டத்தில் கோயிந்தா போட்டாரே ஒழிய, ஒரு கேப்டனாக இதை வழிநடத்தவில்லை.
“முதல் எண்ணிற்கு ஆரிக்கு ஓட்டு போடறேன்... ஆளை விடுங்கப்பா, பசிக்குது'’ என்றார் சோம். இவர் Mixed Martial ஆசாமியா... மிக்ஸர் சாப்பிடும் போட்டியில் வென்ற ஆசாமியா என்று தெரியவில்லை. ஒரு வழியாக ஆரிக்கு நிறைய பேர் வாக்களிக்க அவர் முதல் இடத்தில் நின்றார். (அப்பாடா!). நேற்றைய கட்டுரையின் கடைசியில் நான் எழுதியதும் இதுதான். நிறைய அடிவாங்கியது ஆரிதான். எனவே கப்பு அவருக்குத்தான்.
‘'சனத்திற்கு இரண்டாம் வாய்ப்பு கிடைக்கலை. அது சனத்தோட பிரச்னை இல்லை’' என்கிற நியாயமான காரணத்தை ஆரி சொன்னார். ஆனால் அதற்காக சனத்தை அவர் இரண்டாம் இடத்திற்கு தேர்வு செய்தது சற்று ஓவர். "பஸ்ஸர் அடிக்கற வரைக்கும் சாம் தாக்குப்பிடிச்சாங்க. இவங்களால போனை வைக்க முடியலை'’ என்று இடையில் புகுந்தார் பாலாஜி.
ஆனால் இரண்டாம் இடத்திற்காக அனிதாவும் மல்லுக்கட்டினார். ‘'தள்ளிக்கம்மா... நான் நிக்கணும்'’ என்று சனம் வந்ததும் வேண்டாவெறுப்பாக விலகி வந்தார் அனிதா. ‘'கய்யா… முய்யான்னு கத்தியே ரெண்டாம் இடம் வாங்குது. நானா இருந்தா அவமானத்துல செத்துருவேன்'’ என்று சனத்தைக் குறித்து புறம் பேசிக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
மூன்றாம் இடத்திற்கு பாலாஜிக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால் " முதல்ல பேர் சொல்றவங்களுக்குத்தான் அதிக வோட்டு வரும்... இது போங்காட்டம்'’ என்ற படி கோபித்து விலகிச் சென்றார் பாலாஜி. இந்தச் சமயத்தில் தனது வாக்கை ரம்யாவிற்கு அளித்தார் சனம். '‘யம்மா. நீங்கதானே எப்பவும் சொல்வீங்க.. தகுதியுள்ளவர்கள் ஜெயிக்கணும்... தகுதியில்லாதவர்கள் வெளியே போகணும்னு. இப்ப சமயத்துக்கு ஏத்தா மாதிரி மாத்திப்பீங்களா?” என்று சனத்திடம் எகிறிச் சென்றார் பாலாஜி. இதற்காக ஐடியாலஜி, பிலாசஃபி போன்ற பெரிய வார்த்தைகளையெல்லாம் அவர் பயன்படுத்தியிருக்கத் தேவையில்லை.
'‘சனம்... ஒரு கால்தான் எடுத்துது... நியாயமா அது 7-வது இடத்துலதான் நிக்கணும். ஒத்துக்கவே மாட்டேங்குது. விட்டுக்கொடுக்கறது –ன்ற விஷயம் இவங்க வாழ்க்கையிலேயே கிடையாதா” என்றபடி எரிச்சலுடன் நிஷாவிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. நியாயமான விஷயம்தான். ஆனால் இதேப்போல ‘Topple card’ல் முன்பு நிஷா விட்டுத்தந்த போது அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அர்ச்சனா, ரியோ, சோம் ஆகிய மூன்று பேருமே ‘ஏன் விட்டுத் தந்தே?” என்று நிஷா மீது பாய்ந்தார்கள். ரத்தம் vs தக்காளி சட்னி கான்செப்டை பின்பற்றுகிறார் அர்ச்சனா.
நாம் தவறு செய்யும்போது அதிலிருக்கும் நியாயமெல்லாம் நம் மனதில் உறைக்கவே உறைக்காது. ஆனால், எதிராளி தவறு செய்யும் போது உலகில் உள்ள அத்தனை நீதிகளும் அப்போதுதான் நம் நினைவிற்கு வரும் என்பதே இதிலுள்ள நீதி.
இதற்கிடையில் சனம் ‘'கைய நீட்டிப் பேசாதீங்க” என்று பாலாஜியிடம் எகிறினார். பாலாஜியின் முன்வினைப்பயன் அவருக்கே திரும்பி வந்த தருணம் இது. இதனால் வெறுப்புற்ற பாலாஜி, தன் ஷூவை எடுத்து தானே முகத்தில் அடித்துக் கொண்டார். ‘உன் கிட்ட பேசறதும் ஒண்ணுதான்... இதுவும் ஒண்ணுதான்’ என்று அதற்கு விளக்கம் தர, சனத்திற்கு கொலைவெறி ஏறிற்று. '‘அப்ப... ஷூவும் நானும் ஒண்ணா?” என்கிற மாதிரி ஆத்திரம் தலைக்கு ஏற '‘இனிமே நான் உங்க கிட்ட பேசினா என்னன்னு கேளுங்க'’ என்று சவால் விட்ட பிறகும் அரை மணி நேரம் தொடர்ந்து பாலாஜியிடம்தான் விவாதம் செய்து கொண்டிருந்தார். (டாம் @ ஜெர்ரி டிவிடி).
இதற்கிடையில் இன்னொரு காமெடியும் நடந்தது. பாலாஜி விலகிச் சென்ற நேரத்தில் மூன்றாம் இடத்திற்கான வாக்கெடுப்பை கேபி நடத்தி அதை அனிதாவிற்கு பெற்றுத் தந்தார். ஆனால் பாலாஜி திரும்ப வந்ததும் இதைப் பற்றி விசாரிக்க மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது. ஆனால் இந்த முறை அனிதாவிற்கு முன்னர் விழுந்த வாக்குகள் வரவில்லை. இதனால் காண்டாகி வெளிநடப்பு செய்தார் அனிதா. வாக்கெடுப்பு நடத்திய கேபி இதனால் வெறுப்புற்றார்.
‘லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் கைகாட்டி ஸ்ட்ரையிட்டா போவதில் இந்திய வாக்காளர்கள் எத்தனை திறமைசாலிகள்’ என்பதற்கு உதாரணமாக இந்தச் சம்பவம் நடந்தது.
மறுவாக்கெடுப்பு நடத்தும் போது மூன்றாம் இடத்திற்கு பாலாஜிக்கு அதிக வாக்குகள் வர அனிதாவின் காண்டு இன்னமும் அதிகமாகியது. '‘நான் பிக்பாஸ்லயே இல்லை.. ஆளை விடுங்கப்பா...” என்று பழநி முருகன் மாதிரி கோபித்துக் கொண்டு தனியிடத்தில் நின்றார் அனிதா. நான்காவது இடத்திற்கு அர்ச்சனா தேர்வானார்.
‘எல்லாக் கோட்டையும் அழிங்க.. முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்’ என்கிற பரோட்டா காமெடி மாதிரி ரணகளமாக நடந்த இந்த வரிசைப்படுத்துதலின் முடிவு ஒருவழியாக இவ்வாறு அமைந்தது.
ஆரி (1), சனம் (2), பாலாஜி (3), அர்ச்சனா (4), ரியோ (5), ஆஜீத் (6), ரம்யா (7), ரமேஷ் (8), சோம் (9) …………………….. (10), கேபி (11), ஷிவானி (12), நிஷா (13). பத்தாம் இடத்தில் நிற்க அனிதா மறுத்ததால் அந்த இடம் காலி.
நிற்க... இதுவரை நான் எழுதியதெல்லாம் உங்களுக்கு கோர்வையாகப் புரிகிறதா... குழப்பமாக இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. எனில் இந்தக் காட்சிக் கோர்வைகளை மீண்டும் மீண்டும் பார்த்து தொகுத்து எழுதும் நான் எந்த பரிதாப நிலைமையில் இருப்பேன் என்பதை மாத்திரம் சற்று அனுதாபத்தோடு கற்பனை செய்து பார்த்துக் கொள்ளவும். அத்தனை ரணகளமான உரையாடல். எனவே நியாயமாக முதல் இடத்தை எனக்குத்தான் தர வேண்டும். (உங்க சண்டைல நான் கொடுத்த ரூ.500-ஐ மறந்துராதீங்க!).
59வது நாளின் 12 மணி. பாலாஜிக்கு பிறந்த நாள். ஏதோ புது மணமக்களை வீட்டிற்குள் அழைத்து செல்வது போல் ஜோடியாக நின்ற பாலாஜி, ஷிவானிக்கு விபூதி வைத்து வாழ்த்து சொன்னார் அர்ச்சனா. பாலாஜியை கட்டியணைக்க முயன்ற போதும் ஷிவானி நகராமல் இருப்பதைப் பார்த்து "எருமை... கொஞ்ச நேரமாவுது தள்ளி நில்லு’' என்று ஷிவானியை ஜாலியாகத் திட்டி விட்டு பாலாஜியை கட்டியணைத்து வாழ்த்து சொன்னார்.
அப்போது அர்ச்சனா வைத்த விபூதியை பாலாஜி நைசாக அழித்தது எதன் குறியீடு என்று தெரியவில்லை. “என்னடா... செல்லம் கோபம்... அறுபது நாள் ஆயிடுச்சு... வீக் ஆகாதே... நாங்கள்லாம் என்ன குரூப்... அங்க இருக்கு பாரு. அதான் குரூப்பு...'’ என்று சனத்தை குறித்து சொன்னார் அர்ச்சனா. இதன் மூலம் ‘லவ் பெட்’ டீமில் பாலாஜியை இழுத்துப் போட அர்ச்சனா மெம்பர்ஷிப் கார்டு தர முயல்கிறார் என்று தெரிகிறது. ஆனால் பாலாஜி மாட்டிக் கொள்ள மாட்டார் என்று தோன்றுகிறது.
பாலாஜிக்கு கேக்கும் பிறந்தாள் வாழ்த்துச் செய்தியும் வர உடைந்து அழுதார். ‘'அவரோட தங்கச்சி எழுதியிருக்காங்க'’ என்றார் கேபி. பிறகு கேக்கை வெட்டிய பாலாஜி '‘நான் ரொம்ப நல்ல பையன்... ஆனா செல்லப் பிள்ளை இல்ல... என் கேம் ராங்காதான் இருக்கும். யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சுடுங்க... ஆனா மறுபடியும் ஹர்ட் பண்ணத்தான் செய்வேன். என்ன செய்யறது... இந்த கேம் அப்படி” என்கிற ஜாலியான முன்னுரையோடு கேக் வெட்டச் சென்றார். பாலாஜியின் உறவினரும் நண்பரும் வீடியோ வாழ்த்து சொன்னார்கள். பாட்டும் கூத்துமாக இருந்த இந்தக் கொண்டாட்டத்தில் சனத்தின் முகம் சற்று வாடியே இருந்தது. (பர்த்டே கிஃப்ட்டா புது ஷூ வாங்கி பிரசன்ட் பண்ணிடுங்க சனம்... சரியாப் போயிடும்!).
பிக்பாஸ் சீஸன் நான்கை பாலாஜியை கழித்து விட்டுப் பார்த்தால் பெருமளவு சுவாரஸ்யம் போய் விடும். சமயங்களில் அலப்பறை செய்தாலும் இந்த சீஸனின் முக்கியமான போட்டியாளர் பாலாஜி என்பதில் சந்தேகமில்லை. பிறந்த நாள் வாழ்த்துகள் பிரதர்! (பப்லு ஆர்மி ‘போட்றா வெடிய’ என்று கொண்டாடியிருப்பார்கள். இந்த ஆர்மியில் பெண்கள்தான் அதிகம் என்பதை தனியாக சொல்லத் தேவையேயில்லை).
நாள் 60 விடிந்தது. நேற்று இரவு இவர்கள் செய்த ராவடியைப் பார்த்து நொந்து போன பிக்பாஸ் ‘என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா...’ என்கிற பாடலைப் போட்டு தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டார்.
நேற்று பாலாஜியும் சனமும் இணைந்து செய்த அலப்பறைகளைப் பற்றி மக்கள் கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார்கள். "நீ லூஸூ… நான் லூஸூன்னு இவங்க பேசினதுதான் பிரமோல வந்திருக்கும்’' என்று பேசிக் கொள்ளுமளவிற்கு நிகழ்ச்சி பற்றிய கான்ஷியஸில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
" 'உங்களையெல்லாம் சம்பளம் கொடுத்து கூட்டிட்டு வந்த நான்தான் லூஸூ’ என்று பிக்பாஸ் சொல்லியிருப்பார்’' என்று அந்தச் சமயத்தில் அனிதா சொன்னது திருவாசகம். (பிக்பாஸின் மைண்ட் வாய்ஸை பதிவு செய்வது என்னோட காப்பிரைட் ஸ்டைல் அனிதா மேடம். அதை காப்பியடிக்காதீங்க!).
''நேத்துதான் புது ஷூ எடுத்துப் போட்டேன். அதுலயே அடிச்சிக்க வேண்டியிருந்ததே'’ என்று இந்த ரகளையில் பாலாஜி அதிக சுவாரசியத்தைக் கூட்டினார். "பிறந்த நாள் அன்று புது ஷூவால் தன்னையே அடித்துக் கொண்டு ஒரு புதிய சரித்திரத்தை எழுதியிருக்கிறீர்கள்" என்று soft hurt செய்தார் ரம்யா.
இந்த வார லக்ஷுரி பட்ஜெட்டிற்காக இவர்கள் இத்தனை ரணகளமாக அடித்துக் கொண்டதற்கான பலன் இன்று தெரிந்தது. ஆம்... கால் சென்டர் டாஸ்க்கில் முனைப்புடன் செயல்படாமல் ஒருவரையொருவர் வருடிக் கொண்டதைப் பற்றி முன்னமே எழுதியிருந்தேன். பிக்பாஸூம் அதே கொலைவெறியில் இருந்தார் போலிருக்கிறது. மொத்தமுள்ள 2600 மதிப்பெண்களில் 2000 பாயின்ட்டுக்களை ஒரேடியாக இதற்காக பிடுங்கி விட்டார். மொத்தம் பத்து நபர்கள் தானாக அழைப்பைத் துண்டித்து போங்காட்டம் ஆடியதால் ஆளுக்கு 200 புள்ளிகள் போயிற்று.
‘சுத்தம்... இந்த மார்க்கை வெச்சு தினத்திற்கு ரவா உப்புமாதான் கிண்டணும்’ என்று மக்களின் சிக்கன் கனவில் உப்புமாவைத் தூக்கி போட்டார் அர்ச்சனா. அப்படியேதான் ஆயிற்று. இருக்கிற 600 புள்ளிகளில் ரவையும் சத்துமாவும் மட்டும் வாங்கி ஆறுதல் அடைய வேண்டியிருந்தது. "இந்த வாரம் டோட்டல் வேணா நான் போடட்டுமா?” என்று எரிகிற நெருப்பில் எண்ணைய்யை ஊற்றினார் ரம்யா.
13-ம் இடத்தில் வம்படியாக தேடிச் சென்று நின்ற நிஷா ‘புலம்ப விட்டூட்டிங்களே’ என்று கேமராவைப் பார்த்து சிணுங்க '‘அவனவன் புது ஷுல அடிவாங்கிட்டு இருக்கான். இவங்களுக்கு லக்ஷுரி பட்ஜெட்தான் முக்கியமாப் போச்சு..." என்றபடி வந்தார் பாலாஜி. ஒவ்வொரு வாரமும் இந்தப் பட்ஜெட்டில் தீயை வைப்பதே இவருக்கு பிழைப்பாகப் போகிறது. “ஏன் புலம்பணும். கடைசில போய் நின்னதுக்கு நேத்திக்கே நான் உன்னை அப்ஜெக்ட் பண்ணேன். இன்னிக்கு பிக்பாஸா அதுக்கு ஒரு ரீஸன் கொடுத்துட்டார். அப்புறம் என்ன?” என்று ரியோ பரிவுடன் ஆறுதல் சொன்னவுடன் சற்று அடங்கினார் நிஷா. அவருக்கு பதிமூன்று கிடைத்ததில் கூட பிரச்னையில்லை. சிக்கன் போயிற்றே என்பதுதான் முதன்மையான பிரச்னை.
ரம்யா செய்தி நிலையத்தின் தொகுப்பாளராக மாற, களச் செய்தியாளராக அனிதா மாற ‘'முருகேசன்... அங்க மழை நிலவரம் எப்படியிருக்கு? விரிவான தகவல்களை அளிக்க முடியுமா. முருகேசன்?'’ என்று கேட்டதும் சில விநாடிகளுக்கு தலையாட்டிக் கொண்டே இருந்த முருகேசன். ‘'இங்க பார்த்தீங்கன்னா... தெருவுல எல்லாம் தண்ணியா இருக்கு... அதாவது நிறைய மழை பெஞ்சிருக்கு... அதனாலதான் தண்ணியா இருக்கு... இடி இடிச்சாலதான் மழை பெஞ்சது... மக்கள் ரொம்ப அவதிப்படறாங்க… டுபாக்கூர் செய்திகளுக்காக கேமராமேன் பாண்டியனுடன் முருகேசன்'’ என்று முழங்கால் நீரில் ‘செய்திகள்’ சொல்வதைப் போல இவர்களின் ராவடி நடந்தது.
களத் தொகுப்பாளர் அனிதாவுடன் செல்ஃபி எடுப்பதில் பாலாஜியும் அர்ச்சனாவும் ஆர்வம் காட்டினார்கள். கேமராவிற்குப் பின்னால் சிலர் ஆர்வமாக தலை நீட்டுவார்கள் அல்லவா? அதைக் கிண்டல் செய்கிறார்களாம்.
‘'பிக்பாஸ் மக்களின் வாழ்வாதாரத்தையே பிக்பாஸ் தண்டனை கொடுத்து பிடுங்கி விட்டதால் சிக்கன் சாப்பிட்டு சொகுசாக இருக்க வேண்டிய மக்கள், இப்போது ரவா உப்புமா சாப்பிட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்'’ என்கிற ‘கண்ணீர்’ செய்தியை அனிதா வாசிக்க சபை வெடித்து சிரித்தது.
அடுத்ததாக பிஸ்கெட் கம்பெனி நடத்திய ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. உப்புமா சாப்பிட்டு சோர்ந்திருந்த மக்களுக்கு க்ரீம் பிஸ்கெட்டாவது கொடுத்து ஆறுதல் செய்யலாம் என்று பிக்பாஸ் முடிவு செய்தார் போலிருக்கிறது.
அதிர்ஷ்ட வீலில் புகைப்படத்தில் வரும் நபரைப் பற்றிய கருத்துக்களையும் விருதையும் ஒவ்வொருவரும் தர வேண்டும். இதற்கு கேபி தொகுப்பாளராக இருப்பார். ‘அன்பின் உருவம்’ என்கிற விருதை அர்ச்சனாவிற்கு ஆஜீத் தந்தது உண்மையான காரணமா அல்லது மறைமுகமான கிண்டலா என்று தெரியவில்லை.
பாலாஜி சக்கரத்தை சுற்றும் போது தன் புகைப்படம் வருமா என்று ஷிவானி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்ததைப் போலவே பட்டது. ‘புன்னகை அரசி’ என்கிற விருது ஷிவானியை விடவும் ரம்யாவிற்கே பொருத்தமானது. ‘நண்பேன்டா’ என்கிற விருது ரியோவிற்குப் பொருத்தம். ‘Most cheerful’ என்கிற விருதும் ரம்யாவிற்கு பொருத்தமே. (எது கொடுத்தாலும் அம்மணிக்குப் பொருந்துது!) பாலாஜி always positive-வாம் (அடப்பாவிகளா!) இதன் ஒட்டுமொத்தமாக பிராண்டின் விளம்பரத் தூதுவர் விருது நிஷாவிற்கு கிடைத்தது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். தனித்தனியாக சில பிஸ்கட் பாக்கெட்டுக்களை கம்பெனி கொடுத்திருந்தது. அப்போதே மக்கள் அதை மொக்கி விட்டதால் ‘சரி.. ஒரு வாரத்திற்கு வெச்சு சாப்பிடுங்க’ என்று ஒரு பிஸ்கட் கடையையே பரிசளித்தார்கள்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-4-episode-60-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக