Ad

வியாழன், 3 டிசம்பர், 2020

அபியின் முதல் நாள் பணியிலேயே ஆரம்பித்த சிக்கல்... சித்தார்த் சொன்னது நடந்துவிடுமோ? #VallamaiTharayo

விருப்பம் இல்லை என்றால் நான் வேலைக்குப் போகவில்லை என்கிறாள் அபி. “இல்ல... இல்ல... நீ போ. அப்பதான் வேலைன்னா எவ்வளவு கஷ்டம்னு உனக்குப் புரியும். ஆல் தி பெஸ்ட்!” என்று அதிசயமாகச் சொல்லிவிட்டான் சித்தார்த். அபிக்கும் மட்டுமல்ல, நமக்கே ஆச்சரியமாகிவிட்டது.

அந்த மிகப் பெரிய நிறுவனத்துக்குள் தயக்கத்துடன் நுழைகிறாள் அபி. டீம் அசோசியேட் மேனேஜர் வீணா பிரசாத்தைச் சந்திக்கிறாள். அவர், ”இந்த வேலைக்கு ஃப்ரெஷெர்ஸ் எடுக்க வேணாம்னு சொன்னேன். உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸே இல்ல. இங்கிலீஷ்ல நல்லா பேசுவீங்களான்னும் தெரியல. உங்களை வச்சு நான் என்ன செய்யப் போறேன்னு புரியல. இந்த ராதாகிருஷ்ணன் எப்பவும் இப்படித்தான் செலக்ட் பண்றார். என் தலைதான் உருளுது” என்று இன்னொரு சித்தார்த்தாக, கொஞ்சமும் இங்கிதம் இன்றிப் பேசுகிறார்.

Vallamai Tharayo

இப்படிப் பேசினால் முதல் முறை வேலைக்குச் செல்பவர்களுக்கு எப்படி இருக்கும்? எங்கிருந்து தைரியம் வரும்? அபியை டீம் லீடரிடம் அழைத்துச் செல்லச் சொல்கிறார் வீணா.

டீம் லீடராக கெளதம் அமர்ந்திருக்கிறான். தெரிந்தவன் ஒருவனாவது இருக்கிறானே என்ற நிம்மதியும் மகிழ்ச்சியும் அபியின் முகத்தில் தென்படுகிறது.

“அபிராமி, பூந்தோட்டம் என்றதும் நீங்களா இருக்குமோனு நினைச்சேன். ஆனா, நீங்களே வருவீங்கன்னு நினைக்கல. என்னங்க கோல்டு மெடலிஸ்ட். அப்பவே வேலைக்கு வந்திருந்தால் இந்நேரம் சிஇஓ ஆகியிருப்பீங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வீணா அழைக்கிறார்.

இருவரும் அங்கே செல்கிறார்கள். “நம்ம புராஜெக்ட்டுக்கு ஏன் ஃப்ரஷெர் எடுக்கறீங்க? ஏற்கெனவே நம்ம டீம் தள்ளாடுது. வேலை தெரியாதவங்களை வச்சிக்கிட்டு ஏதாவது சொதப்பினால், நம்மதான் மாட்டிப்போம்...” என்றெல்லாம் கெளதம் பல்டி அடிப்பதைப் பார்த்து, அபி அதிர்ச்சியடைகிறாள்.

Vallamai Tharayo

“ஹர்ஷிதா ரெஃபர் பண்ணிருக்கா ராதாகிருஷ்ணன்கிட்ட. பொண்ணுன உடனே அவரும் வேலைக்கு எடுத்துக்கிட்டார். என்ன பண்றது? வேலைக்குச் சேர்த்தாச்சு. நீதான் உன் டீம்ல வச்சுக்கணும்” என்கிறார் வீணா.

ஆண்கள் சொல்லும் அதே பல்லவியைத்தான் பெண்களும் சொல்கிறார்கள். பெண் என்றதும் வேலை கொடுத்துவிட்டார் என்பது சம்பந்தப்பட்ட இருவரையும் அசிங்கப்படுத்தும் விஷயம் என்று யாரும் நினைப்பதில்லை.

கெளதம் வெளியே வரும்போது, “ஏன் இங்கேயே நின்னுட்டீங்க? வாங்க அபி” என்று இயல்பாக அழைத்துச் செல்கிறான் கெளதம். ‘உன்னை எல்லாம் அடிச்சு துரத்திடுவாங்க’ என்று சித்தார்த் சொன்னது உண்மையாகிவிடுமோ என்று பயப்படுகிறாள் அபி.

இனி என்ன நடக்கும்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/women/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-29

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக