Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

சோம்: ஒரு பூனை புலியான கதை; `ஸ்மார்ட் மூவ்' ரியோ; அனிதா இப்படிச் செய்யலாமா? பிக்பாஸ் – நாள் 81

‘அதாரு... உதாரு...’ பாடலோடு பொழுது விடிந்தது. முகத்தை விநோதமாக சுருக்கிக் கொண்டு தினமும் ரப்பர் பேண்ட் ஸ்டெப் போடும் ஆரி ஏனோ இன்று டல்லாக இருந்தார். நடனம் ஆடவில்லை.

‘அது என்னோட கருத்துங்க... என்னோட கருத்தைப் பதிவு பண்றேன். அது உங்க கருத்து...’ என்று ‘கருத்து’ கந்தசாமியாகவே வாழும் ஆரியின் பாணியை மற்றவர்கள் உள்ளே கிண்டலடித்துக் கொண்டிருக்க, வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் ஆரி.

கருத்து சுதந்திரத்தை இப்படி கிண்டலடிக்கத் தேவையில்லை. ‘நீ சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதை வெளிப்படுத்தும் உன் உரிமைக்காக என் உயிரையும் நான் தருவேன்’ என்றார் வால்டேர். கருத்து சுதந்திரத்தின் மதிப்பை இதை விடவும் அழுத்தமாகச் சொல்லி விட முடியாது.
பிக்பாஸ் – நாள் 81

பந்து பிடிக்கும் டாஸ்க்கில் புதிய சுவாரஸ்யத்தை இணைத்தார் பிக்பாஸ். இப்போது தங்க நிறப் பந்துகள் வருமாம். அதைப் பிடிப்பவர்களுக்கு சில சிறப்பு சக்திகள் கிடைக்குமாம். முதல் மூன்று இடத்தில் வந்த ரியோ, ரம்யா சோம் ஆகியவர்களுக்கு மட்டும் அவர்களுக்கு நிலைக்கு ஏற்ப அதிக பந்துகள் வரும்.

முதலில் ஓடி வந்த ரியோ, பந்தைத் தவற விட்டு காலைக்கடன்களின் பெயர்களில் ஒன்றை எரிச்சலுடன் சொன்னார். மிக எளிதாக பந்து பிடிக்கும் இந்த விஷயத்தை ஏன் தவற விடுகிறார்கள் எனில் அதன் பின்னால் இருக்கும் பதற்றம்தான் காரணம். ‘அவசரத்திற்கு அண்டாவில் கூட கை விட முடியாது’ என்பார்கள். பதற்றம் மனதில் நிறைந்திருக்கும் போது மிகச் சிறிய விஷயத்தைக் கூட நம்மால் எளிதில் கையாள முடியாது. எங்காவது அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இதை நன்கு உணர முடியும்.

போட்டியாளர்கள் அவசரமாக ஓடி வந்தாலும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தவுடன் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு பதற்றத்தை உதறி நிதானமாக பிடித்தால் இது எளிய விஷயம்தான். (சொல்றது ஈஸிதான்!)

ரியோவிற்கு அடுத்து வந்தவர் ரம்யா. இவர் ஏறத்தாழ பந்தைத் தவறவிட்டு பிறகு பிடித்துவிட்டார். (ஜஸ்ட் மிஸ்!) பிறகு அங்கிருந்த அட்டைகளில் ‘இன்னொருவரின் மதிப்பெண்களை பூஜ்யமாக்க முடியும்’ என்பதைத் தேர்ந்தெடுத்து ரியோவின் மதிப்பெண்களை முழுவதும் இழக்கச் செய்தார். (வெஷம். வெஷம்!) ரியோவிற்கு எக்ஸ்ட்ரா மூன்று பந்துகள் இருக்கின்றன என்பதுதான் இதற்கு அவர் சொன்ன காரணம். என்றாலும், தனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவனுக்கு இரு கண்ணும் போக வேண்டும் என்கிற குயுக்தியே இதில் வெளிப்பட்டது. ‘ஸ்மார்ட் மூவ்’ என்று ரம்யாவைப் பாராட்டினார் ஆரி.

அடுத்து வந்த சோமுவும் பந்தை சரியாகப் பிடித்து ரம்யாவின் 83 மதிப்பெண்களை உறையச் செய்தார். இதன் மூலம் ரம்யாவின் மதிப்பெண்ணை யாரும் உயர்த்தவோ குறைக்கவோ முடியாது. ‘மொதலாளி... இதுல என்னவொரு தொழில் ரகசியம்னா..’ என்று ‘ஆண்பாவம்’ உசிலைமணி மாதிரி அனிதாவிற்கு ஒரு சந்தேகம் வந்தது. "மத்தவங்கதானே உயர்த்த முடியாது... அவங்க உயர்த்திக்கலாமே?” என்று சோமிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் – நாள் 81

பாலாஜியும் பந்தை சரியாகப் பிடித்து விட்டு தனது மதிப்பெண்களில் நூறு புள்ளிகளை உயர்த்திக் கொண்டார். பாலாஜியின் இந்த முடிவை, ‘வேலைக்கு ஆகாத மூவ்’ என்று தனக்குள் முனகிக் கொண்டார் அனிதா. பாலாஜி ஏன் ராஜதந்திர யுக்தி ஏதும் பயன்படுத்தாமல் இப்படி ‘கோயிஞ்சாமி’யாகிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

அடுத்து வந்து ஆஜித்தும் அனிதாவும் பந்துகளைத் தவற விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டனர். கேபி சரியாகப் பிடித்துவிட்டு பாலாஜியின் மதிப்பெண்ணை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். ‘இருடி செல்லம்... நீ ஜீரோதான்’ என்று கேபி மீது கொலைவெறியானார் பாலாஜி.

"‘இருவர் மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளலாம்’ என்றிருப்பதை உபயோகப்படுத்தியிருக்கலாமே" என்று கேபியிடம் கேட்டார் ரியோ. ஆனால் பின்னால் வருபவர் எவராவது லம்ப்பாக தூக்கி விடுவாரே என்பது கேபியின் கணக்கு.

அடுத்து வந்த ரியோ, கேபியின் மதிப்பெண்களை ‘டபுள்’ ஆக்கினார். அடுத்த பந்தும் ரியோவிற்கே வந்தது. இம்முறை அவர் கேபி மற்றும் சோமின் மதிப்பெண்களை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். உண்மையிலேயே இது ஸ்மார்ட் மூவ். ஏனெனில் மீதமிருந்த அட்டைகளின் சக்தி அப்படி போல. ஆனால் அவருக்கு ஆரியின் வழியாக ஒரு சிறிய ஆப்பு காத்திருந்தது.

ரம்யா என்ன செய்வார் என்று பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கையில் அவர் தனது பந்தைத் தவற விட்டு தலையில் கை வைத்துக் கொண்டார். (கடவுள் இருக்கான் குமாரு!). அடுத்து வந்த ஆரியால் ஒருவரின் மதிப்பெண்களை எடுத்து அப்படியே இன்னொருவருக்கு மாற்ற முடியும். எனவே அவர் ரியோவின் மதிப்பெண்களைத் தூக்கி அப்படியே அனிதாவிற்கு அள்ளித் தந்தார். “நீதான் புள்ள இப்ப பெரிய பணக்காரி..." என்று அனிதாவை கிண்டல் செய்தார் ரம்யா.

ஆட்டம் இப்போது சூடு பிடித்தது. மீதமிருக்கும் அட்டைகளில் உள்ள சக்திதான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். மக்கள் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் இப்படி மண்டையைப் பிய்த்து யோசித்துக் கொண்டிருக்க ஷிவானியோ எந்தக் கவலையும் இல்லாமல் அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்தார். (என்னமோ... நடக்குது! நமக்கு என்ன?! தலை முடி கொஞ்சம் கலைஞ்சிருக்கே. சரி பண்ணிப்போம்).

பிக்பாஸ் – நாள் 81

ரம்யாவிற்குக் கிடைத்த இரண்டாவது அதிர்ஷ்ட பந்தை அவர் தவறவிட்டார். (ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே?! பயிற்சி போதாதோ?) ‘சரி... ஓகே... எனக்கு லாபமும் இல்ல... நஷ்டமும் இல்ல’ என்று நொண்டி சமாதானம் சொல்லிக் கொண்டார் ரம்யா. அடுத்து வந்த சோம், பந்தை சரியாகப் பிடித்து அதிகபட்சத்தில் இருந்த அனிதாவின் மதிப்பெண்களில் இருந்து 25%ஐ தான் உருவிக் கொண்டார். (இன்கம்டாக்ஸ் ரெய்டு போல!).

ரியோவிற்கு கடைசிப் பந்து கிடைத்தது. அவர் வெற்றி பெற்று அனிதாவின் மதிப்பெண்களில் இருந்து 75%ஐ உருவிக் கொண்டார். ஆக... சில நிமிடங்களுக்கு முன்னால் ‘பணக்காரி’யாக இருந்த அனிதா, ஷேர்மார்க்கெட் வீழ்ச்சியில் சிக்குண்டவரைப் போல ஒரே கணத்தில் போண்டியானார்.

கடைசியாக வந்தவர் ஷிவானி. அதென்னமோ இவர் பிடிப்பதற்கு முன்பே ‘இவர் பந்தை தவற விட்டு விடுவார்’ என்று எனக்கு நிச்சயமாகத் தோன்றியது. அப்படியே ஆயிற்று. மிக எளிதாக வந்த பந்தை தவறவிட்டு முக்கியமான பேட்ஸ்மேனின் கேட்சை தவற விட்ட ஃபீல்டர் போல எக்ஸ்ட்ரா ஃபீலீங்க்ஸ் காட்டினார் ஷிவானி. தலையைக் குனிந்து அமர்ந்திருந்த ஷிவானி, ஒருவேளை தோல்வியால் அழுகிறாரோ என்று பார்த்தால்... இல்லை. எழுந்து தலைமுடியைச் சரி செய்து கொண்டார். அவ்வளவுதான்.

ஒருவேளை ஷிவானி பந்தைப் பிடித்திருந்தால் ரியோவின் மதிப்பெண்களை சற்று சிதைத்திருக்க முடியும். ஆனால் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. ஏனெனில் ரியோவின் மதிப்பெண் அப்படி உச்சத்தில் இருந்தது.

இத்துடன் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் முடிந்தது என்று பிக்பாஸ் அறிவித்தவுடன் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். மதிப்பெண் பட்டியலில் 334 புள்ளிகள் பெற்று முன்னணியில் இருந்த ரியோ அடுத்த வார தலைவர் போட்டிக்கு நேரடியாக தகுதியானார். ரியோவிற்கு திறமையும் அதிர்ஷ்டமும் கலந்து அடித்தது.

டாஸ்க்கின் இந்த கடைசிப்பகுதி மூலம் நமக்குமே ஒரு செய்தி இருக்கிறது. நேர்மையாக சம்பாதிப்பது மட்டுமே நம்மிடம் தங்கும்.
பிக்பாஸ் – நாள் 81

வாரம் முழுவதும் ஈடுபாடும் சுவாரஸ்யமும் குறைவாக இருந்த இரு நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பகுதி. பொதுவாக இது கடைசியில்தான் வரும். ஆனால் இந்த அயிட்டத்தை தூக்கி முதலில் வைத்து கலகத்தை ஆரம்பித்தார் பிக்பாஸ்.

இதில் கேபி மற்றும் ஆஜித்தின் பெயர்கள் பலமுறை அடிபட்டன. பாலாஜியின் பெயரை முன்மொழிந்த அனிதா, "கேப்டன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசரா இருந்தாரு... பாரபட்சம் காட்டினாரு. ஷிவானி தூங்கும் விஷயத்தை கணக்கில் எடுக்காம மறைச்சிட்டாரு. நான் Panic-ன்னு சொன்னதை panic attack-ன்னு மாத்திட்டாரு. டான்ஸ் ஆடினாரு. லேட்டா வந்தாரு... ஓடினாரு... நடந்தாரு" என்று ஒரு நீண்ட புகார் பட்டியலை வைத்தார்.

இதற்கு விளக்கம் அளிக்க பாலாஜி முன்வரும் போது, "நாமினேட் செய்யும் போது குறுக்கே பேசக்கூடாதுன்னு சொன்னவரே பாலாஜிதான். இப்ப அவரே மீறுகிறார்" என்று பாலாஜியின் வெறுப்பை இன்னமும் தூண்டினார் அனிதா.

தன் முறை வந்தபோது ‘கடலைப் பருப்பை’ வைத்து அனிதாவைப் பதிலுக்கு வறுத்தார் பாலாஜி. இந்தச் சமயத்தில் அனிதா அளித்த பதில்களும் முகபாவங்களும் எரிச்சலூட்டும் வகையில் அமைந்திருந்தன. ‘குறுக்கே பேசக்கூடாது’ என்று பாலாஜிக்கு சர்காஸம் செய்துவிட்டு அனிதாவும் அதைச் செய்வது அழகல்ல. சாமர்த்தியமாக வாதிடுவதாக நினைத்துக் கொண்டு “தூக்கிப் போடாததால்தான் அது வேஸ்ட் ஆச்சு" என்று அனிதாவே தன் பக்கம் சேம் சைட் கோல் போட்டுக் கொண்ட காட்சி ஒரு நல்ல நகைச்சுவை. (டங் ஸ்லிப் ஆயிடுச்சு!).

கேபியை முன்மொழிந்த ஆரி, "வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் கேபி தன்னை பின்னுக்குத் தள்ளிக் கொண்டது ஏமாற்றம். அவரிடம் போராடும் தன்மை அப்போது குறைந்து விட்டதோ?” என்று குறிப்பிட்டது நல்ல அப்சர்வேஷன்.

அனிதாவை நாமினேட் செய்த ரியோ அதற்கான காரணங்களை சொல்லி விட்டு விலகும் போது, "வழக்கம் போல நகைச்சுவை செய்யறார்" என்று நமட்டுச் சிரிப்புடன் தனக்குள் முனகினார் அனிதா. "என்னம்மா விஷயம். சொன்னா நானும் சிரிப்பேன்ல.” என்று ரியோ அனிதாவை கேட்க, "நான் எனக்குள்ள பேசிப்பேன்... உங்களுக்கென்ன. மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு சத்தமா பேசிட்டேன்" என்று ரம்யாவுடன் இணைந்து அனிதா அலட்சியச் சிரிப்பு சிரித்தது எரிச்சலூட்டும் காட்சியாக அமைந்தது.

பிக்பாஸ் – நாள் 81

இறுதியில் ‘சுவாரஸ்மில்லாத நபர்’ தேர்வில் கேபியின் பெயர் அதிகமுறை வந்ததால் அவர் தானாகவே தேர்வானார். அனிதா, ஷிவானி, பாலா, ஆஜித் ஆகியோருக்கு சமமாக 3 மதிப்பெண்கள் வந்ததால் அவர்கள் சபையின் முன்னால் நிற்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உள்ளாக வாக்கெடுப்பு நடந்தது. இதில் அனிதாவும் ஷிவானியும் எஸ்கேப் ஆகி அமரச் சென்ற சமயத்தில் "கேபி எப்படி வாக்களிக்கலாம்?" என்கிற லாஜிக்கை சாமர்த்தியமாக எழுப்பினார் பாலாஜி.

“வோட் பண்ற வரைக்கும் நீ ஏன் சொல்லல?” என்று கேபி வாதிட, "‘முதல்லயே எழுந்து வா’ன்னு சொன்னோம். நீதான் வரலை" என்றார் பாலாஜி. உண்மையில் அனிதா இதை முன்பே சொல்லி விட்டார். “எழுந்து வந்துடு கேபி. இல்லைன்னா கன்ப்யூஸ் ஆகிடும்" என்று.

"ஏற்கெனவே நாமினேட் ஆகியிருக்கும் கேபிக்கு எப்படி வாக்குரிமை இருக்கும். அப்படி இருந்தால் அது தனக்கும் இருக்க வேண்டும் அல்லவா?” என்பது பாலாஜியின் வாக்குவாதம். தனக்கு எதிரான சூழல் அமைவதை உணர்ந்து பாலாஜி அதற்கேற்ப விதியை வளைத்து விட்டார் என்பது கேபியின் கோபம். "இப்பத்தான் எனக்கு தோணுச்சு" என்று கேபியிடம் மன்னிப்பு கேட்டார் பாலாஜி. "ஒரு கேப்டனா இந்த விஷயத்தை நீ ஹாண்டில் பண்ணது சரியேயில்ல தம்பி" என்று தன் ‘கருத்தை’ பதிவு செய்தார் ஆரி.

இறுதியில் ஆஜித்தும் கேபியும் ‘ஓய்வறைக்கு’ச் செல்லும் சூழல் ஏற்பட்டது. பாலாஜி எஸ்கேப் ஆனார்.

அடுத்ததாக ‘சுவாரஸ்யமும் ஈடுபாடும்’ கொண்ட நபரைத் தேர்ந்தெடுக்கும் பகுதி. இதில் சோமின் பெயர் மெஜாரிட்டியாக வந்தது குறித்து அவருக்கே ஆச்சர்யம். அர்ச்சனாவின் நிழலில் செளகரியமாக அமர்ந்திருந்த வரை சோம் டொங்கலாகவே இருந்தார். ஆனால் அர்ச்சனா சென்றதிற்குப் பிறகுதான் சோம் விழிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’. அதைப் போல மிகையான அன்பும் நஞ்சுதான். அர்ச்சனா லாஜிக்படி ஒருவேளை அன்பு ஜெயிக்கலாம். ஆனால் ஆட்கள் தோற்றுப் போவார்கள்.

பிக்பாஸ் – நாள் 81
இந்தப் பகுதியில் பாலாஜியின் பெயரை முன்மொழிந்து ரியோ சொன்ன போது பாலாஜி கண்கலங்கி விட்டார். (இவனாவது சொன்னானே!) பக்கத்திலிருந்த ஷிவானி ஆறுதலாக பார்த்துக் கொண்டிருந்தார். சோமுவும் பாலாஜியின் பெயரைக் குறிப்பிட்டார்.

கடைசியாக நாமினேட் செய்ய வந்த ஆரி, சோம் மற்றும் ரம்யாவின் பெயரைக் குறிப்பிட்டு விட்டு பின்னிணைப்பாக ரியோவிற்கு ஒரு விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். ஆரியால் முதல் சீஸன் சம்பவங்களைக் கூட தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது. எனவே கடந்த வாரத்தில் நடந்த விஷயங்களைக் குறிப்பிட்டு ரியோவிற்கு ஒரு விளக்கம் அளிக்க, ஆரிக்கும் ரியோவிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.

தனது பேச்சின் இடையில் ‘குரூப்பிஸம்’ என்கிற வார்த்தையை ஆரி பயன்படுத்தியவுடன் ‘நெருப்பு பட்ட புழு’ மாதிரி பதறினார் ரியோ. அந்த வார்த்தை மட்டும் அவருக்கு ஆகவே ஆகாது. (ஆனால் பின்பற்றுவார்!). "விதிப்புத்தகத்தில் ‘கூட்டமாக இணைந்து ஆடக்கூடாது’ என்று போட்டிருக்கிறது. அதற்கு ஆங்கிலத்தில் அப்படித்தான் பொருள்" என்று சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் போல ஆரி மடக்கியவுடன் ரியோவால் எதுவும் பேச முடியவில்லை.

பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதால் சோம் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றார். (ஒரு பூனை புலிக்குட்டியானது!). அடுத்த நிலைக்கு ரம்யாவிற்கும் ஆரிக்கும் டை ஆனது. இதில் ஆரி வெற்றி பெற்றார். ஆக... அடுத்த வார தலைவர் போட்டிக்கு ரியோ, சோம், ஆரி ஆகியோர் தகுதி பெற்றிருக்கிறார்கள். (ஹப்பாடா... இந்த முடிவை எட்டறதுக்குள்ள... எத்தனை பேச்சு?!).

அடுத்ததாக ஆரி நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படமான ‘பகவான்’ திரைப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆஜித்தும் கேபியும் தென்பட்டார்கள். எனில் அவர்கள் ‘ஓய்வறைக்கு’ செல்லவில்லையா? அல்லது சம்பந்தப்பட்ட காட்சிகள் எடிட் செய்யப்பட்டு விட்டதா என்பது தெரியவில்லை. (ஒருவேளை unseen-ல் விடை இருக்கலாம்).

போஸ்டரில் கொலைவெறி லுக்குடன் இருந்தார் ஆரி. "இது சர்ப்ரைஸ்... அந்த மூடோட வாங்க" என்று கேபி சொன்னவுடன் ‘தோழா’ திரைப்படத்தில் ‘நாகார்ஜூனா’ செயற்கையாக ஆச்சர்யப்படுவது போல முகத்தை வைத்துக் கொள்ள முயன்றார் ஆரி.

பிக்பாஸ் – நாள் 81

இந்த டீஸர் தொடர்பாக முன்பு ரியோவிற்கு குறிப்பிட்ட அதே விஷயம்தான். போட்டியில் இருக்கும் ஒருவரின் வெளிப்பெருமை வீட்டிற்குள் நுழையும் போது அது மற்றவர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தலாம்.

‘பகவான்’ திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. "இது ஒரு இல்லுமினாட்டியின் கதை... அதுக்கு மேல கதை சொல்ல முடியாது" என்று சஸ்பென்ஸ் வைத்தார் ஆரி. இல்லுமினாட்டி குழு பற்றி உலகெங்கிலும் சுவாரஸ்யமான தகவல்கள் உலவுகின்றன. அதைப் போலவே உலகெங்கிலும் பல ரகசியக்குழுக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனில் இந்த மேட்டர் தமிழ் சினிமா இதுவரை தொடாதது. படம் வரட்டும். பார்ப்போம். (எப்படியும் படத்தில் ஆரிக்கு நீள நீளமான வசனம் இருக்கும் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது).

அடுத்ததாக ஒரு காஃபி விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சி. இதில் இரண்டு அணிகள் இருக்கும். ஆரியும் ரம்யாவும் ஒரு அணி. அனிதாவும் கேபியும் இன்னொரு அணி. சாண்ட்டாவாக சோம் இருப்பார். இரு அணியும் காஃபியை வைத்து உருவாக்கும் உணவுப்பொருட்களை சாண்ட்டா ருசித்து முடிவுகளைச் சொல்வார்.

இரு அணியும் சமையலுக்கு வேண்டிய பொருட்களை மற்றவர்கள் சொல்லும் ஜாலியான டாஸ்க்குகளை செய்து விட்டுத்தான் வாங்க முடியும். இதற்காக ‘கத்தி வேணும்’ என்பதை அனிதாவும் கேபியும் உரத்த குரலில் கத்திக் கேட்டார்கள். (கத்தாதீங்க அனிதா... எனக்கு தலைசுத்துது!). ஆரியும் ரம்யாவும் நாய்க்குட்டிகள் போல் தவழ்ந்து கத்தினார்கள். (இன்னமும் என்னெனன்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?!). ‘கேபி முகத்துல மூக்கை விட்டுட்டு மீதமிருக்கிற மூஞ்சியை கண்டுபிடிங்க’ என்று கேபியை கலாய்த்தார் ஆஜித்.

பிக்பாஸ் – நாள் 81

‘அமுக்கு டுமுக்கு, அஜால் குஜால்’ என்று அன்பு அர்ச்சனா சொல்லித் தந்த உபதேசத்தை மறக்காமல் கத்திக் கொண்டிருந்த சான்டாவாகிய சோம், உணவுகளை நன்றாக மொக்கிய பிறகு வெற்றி பெற்ற அணியாக அனிதா, கேபி அணியைத் தேர்வு செய்தார். பிறகு கேக் வெட்டி கொண்டாடி போட்டியை நிறைவு செய்தார்கள்.

‘இயற்றலும் காத்தலும் அழித்தலும் சிவனே’ என்பதுதான் ஆரி திரைப்படத்தில் வெளியான டீஸர் வாசகம். உண்மையில் இந்த வாசகம் ஆரிக்கும் கச்சிதமாகப் பொருந்தும். பிக்பாஸ் வீட்டில் விதிகளை உருவாக்குபவரும் அவரே. காப்பவரும் அவரே. பின்பு அழிப்பவரும் அவரே. ‘உணவு வீணாக்குதல், செடி வளர்த்தல்’ உள்ளிட்டு பல விஷயங்களை இதற்காக உதாரணம் காட்டலாம். (ஹிஹி).


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/new-tasks-bigg-boss-tamil-season-4-day-81-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக