Ad

சனி, 5 டிசம்பர், 2020

சிவகங்கை மழை நிலவரம்: முடங்கிய மண்பாண்ட தொழில்... கண்மாய்களின் நிலை?! - பாதிப்புகள் என்ன?

சிவகங்கை மாவட்டத்தில் கன மழை இருந்தாலும் பெரிய அளவு பாதிப்புகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் வீடுகள் மற்றும் பயிர் சேதமடைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகர் பகுதி மற்றும் குறிப்பிட்ட சில கிராமங்களில் நீர் வழித்தடங்கள் இல்லாமலும், கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. மற்றபடி நீர்பிடிப்பு பகுதிகள் ஓரளவு நிறைந்து செழித்து காணப்படுகிறது. சில கண்மாய்களில் தண்ணீர் நிரம்பவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நேற்று நிலவரப்படி சிவகங்கை 6.6 மி.மீ, மானாமதுரை 38.5 மி.மீ, இளையான்குடி 32 மி.மீ, திருப்புவனம் 15.8 மி.மீ, தேவகோட்டை, 9.2 மி.மீ, காரைக்குடி 4.8 மி.மீ, திருப்பத்தூர் 3.1மி.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது.

மானாமதுரை மண்பாண்டம்

திருப்பத்தூர் அடுத்த என்.புதூர் கிராம மக்கள்..., ``எங்கள் கிராமத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் திறந்தவெளி கால்வாய்களுக்கு செல்கிறது. மழை சமயத்தில் தண்ணீர் நிரம்பும் போது சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து வெள்ளமாக காட்சியளிக்கிறது. எனவே இதனை சீர் செய்து குளாய் பதிக்க வேண்டும். இல்லை என்றால் பல்வேறு நோய் தொற்றுகளால் எங்கள் கிராமத்தினர் பாதிப்படைவார்கள்” என வேதனை தெரிவித்தனர்.

மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்க தலைவர் லெஷ்மணன், ``மழை காரணமாக மண்பாண்ட தொழில் முழுமையாக முடங்கியுள்ளது. கடந்தாண்டு மழை நிவாரண தொகை 5 ஆயிரம் கிடைத்தது. இந்தாண்டு கொரோனா பாதிப்பு மற்றும் மழையால் கூடுதலாக பாதித்துள்ளோம். எனவே தமிழக அரசு இந்த மாத இறுதிக்குள் மழைக்கால நிவாரண தொகை மற்றும் ஊக்கத்தொகை கூடுதலாக வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் சிவகங்கை நீர்நிலை ஆர்வலர் புத்தகக்கடை முருகன், ``தற்சமயம் விதைப்பு போட்ட விவசாயிகளுக்கு மட்டும் அதிகமாக பாதிப்பு உள்ளது. பல்வேறு கண்மாய்கள் நிறைந்தாலும் பெரிய அளவுக்கு விவசாய பயன்பாடு இல்லை. நிலத்தடி நீர் மற்றும் கிணறுகளில் தண்ணீர் தேக்கிவைக்கவே உதவும். என்னை பொறுத்தவரையில் கடந்தாண்டை விட இந்தாண்டு குறைவான மழை தான் என்பேன்" என தெரிவித்தார்.

மழை நீரால் இளையான்குடி பகுதியில் விடு சேதம்

இது குறித்து சிவகங்கை மாவட்ட பேரிடர் மேலாண்மை சிறப்பு அதிகாரி மேசியா தாஸ் நம்மிடம், ``சிவகங்கை மாவட்டத்தில் மழையால் பாதிப்புகள் பெரிதும் இல்லை. மாவட்டம் முழுதும் நாளுக்கு சராசரியாக 3. செ.மீ மழை அளவு தான் பதிவாகிறது. மழையால் தற்போது வரை 52 வீடுகள் சேதமடைந்துள்ளன. அவை வீட்டின் ஒரு பகுதி லேசாக தான் பாதித்துள்ளன.

இருந்த போதிலும் அவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. விவசாய பயிர்களை பொறுத்தவரையில் 15 ஹெக்டர் பாதிப்பு உள்ளது. அவையும் மழை நின்ற பின் சரியாகிவிடும். மாவட்டத்தில் அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து துரித பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மழை நீர் புகுந்தது குறித்து வீடுகளில் ஆட்சியர் ஆய்வு

மாவட்டத்தில் 5,296 கண்மாய்கள் உள்ளது. அதில் பொதுப்பணித் துறை கீழே வரும் 5 கண்மாய்கள் முழுமையாக நிறைந்துவிட்டன. சுமார் 110 கண்மாய்கள் 75% முதல் 99 சதவிகிதம் தண்ணீர் நிறைந்துள்ளது. 1,727 கண்மாய்களில் 25%- 50 வரை தண்ணீர் உள்ளது. 2,147 கண்மாய்களில் 25% குறைவான தண்ணீர் உள்ளது. 377 கண்மாய்களில் முழுமையாக தண்ணீர் இல்லை பிற கண்மாய்களில் ஓரளவு தண்ணீர் உள்ளது” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-rain-fall-status-after-burevi-cyclone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக