தி.மு.க தலைவர் ஸ்டாலினின் உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். `மயக்கமடைந்த அன்று 40 கிலோமீட்டர் தூரம் உற்சாகத்தோடு சைக்கிளிங் சென்றதுதான் பிரதான காரணம்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரெட்டேரி ஜங்சன் என்ற இடத்தில், கடந்த 11-ம் தேதி காலை தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும்போதே திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் சோர்வடைந்தவரை, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த அழுத்தம் அதிகமானதால் மயக்கம் ஏற்பட்டதாகவும், அதற்கான சிகிச்சைகளை வழங்கியதால், இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
Also Read: `கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவைபோல இருக்கிறது!’ - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்
அதேநேரம், மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதி என்ற தகவலால் உடன்பிறப்புகள் பதற்றமடைந்தனர். இதுதொடர்பாக விளக்கமளித்த தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள், `வதந்திகளை நம்ப வேண்டாம்' எனத் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து முடித்த பிறகு பேட்டியளித்த ஸ்டாலின், `நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது எனக்கு உடல் சோர்வாகத் தெரிந்தது; லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த மருத்துவமனையில் ரத்த அழுத்தம் இ.சி.ஜி பரிசோதனை செய்து கொண்டேன். தற்போது சரியாகி விட்டது. மருத்துவர்கள் 10 நிமிடம் ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். அதன்படி ஓய்வு எடுத்துவிட்டு கிளம்பிச் செல்கிறேன்' என்றார்.
இந்தநிலையில், தனியார் மருத்துவமனையில் ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்துள்ளன. இதுகுறித்து நம்மிடம் விவரித்த தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், `` உடற்பயிற்சி செய்வதில் தி.மு.க தலைவரின் ஆர்வம் எத்தகையது என்பது அனைவரும் அறிந்ததுதான். உடல்நலனில் அவர் மிகுந்த அக்கறை காட்டுவார். அண்மைக்காலமாக நீண்டதூரம் சைக்கிளிங் செல்வதை ரசித்துச் செய்து வருகிறார். அவர் மயக்கமடைந்த அன்று காலையில் 40 கிலோமீட்டர் தூரம் வரையில் சைக்கிளிங் செய்தார். இது வழக்கத்தைவிட அதிகம். தவிர, முதல்நாள் இரவு 2 மணிக்குத்தான் தூங்கவே சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்தவர், கொளத்தூருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக அவசரமாகக் கிளம்பியிருக்கிறார்.
Also Read: ``எதை எப்போ பிரிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்..!” - சீறிய ஸ்டாலின்; அடங்கிய நிர்வாகி!
அப்போது காலை நேர உணவாக வைக்கப்பட்ட நெய்ப் பொங்கலையும் இரண்டே இரண்டு ஸ்பூன் மட்டுமே சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். முதல்நாள் இரவு தாமதமான உறக்கம், சைக்கிளிங், சரியாகச் சாப்பிடாதது என அனைத்தும் ஒன்று சேர்ந்து அவரை மயக்கமடைய வைத்துவிட்டது. இதுதொடர்பாக, நேற்று காலை மருத்துவர்கள் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அவர்கள், ஐ.ஜி.ஜி (IgG Test) பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஸ்டாலினுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள். பயப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துவிட்டு, `மிகவும் சிரமமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நல்ல கொழுப்புள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாகச் சாப்பிட்டாலே போதும்' எனக் கூறியுள்ளனர். இதனை ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டார்" என்றனர் விரிவாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/doctors-advised-dmk-chief-mk-stalin-regarding-his-health
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக