‘பிக்பாஸ் வீட்டில் குழு மனப்பான்மையால் நிகழும் பாரபட்சங்களை கமல் அழுத்தமாக கண்டிக்கவில்லை’ என்பது பொதுவாக புகாராகவும் ஆதங்கமாகவும் இதுவரை இருந்தது. அந்த ஆதங்கத்தை கமல் நேற்று ஓரளவிற்கு போக்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகாமல், அதே சமயத்தில் சற்று அழுத்தமாகவும் கறாராகவும் இன்று அவர் விசாரணையை மேற்கொண்டது பாராட்டத்தக்கது.
அனிதாவிற்கு நீதி கிடைத்தது என்பது வரையில் சரி. ஆனால் அதற்கு நிஷா பலிகடாவாக ஆக்கப்பட்டதில் முறையில்லை. ‘வாரம் முழுவதும் ஈடுபாட்டோடு செயல்பட்டவர்’ என்கிற பிரிவில் நிஷா தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதற்காக நியாயமான காரணங்களும் சொல்லப்பட்டன. சரியா?
ஆனால் கமல் தலையீட்டிற்குப் பிறகு சிலர் அப்படியே தலைகீழாக மாறி ‘நிஷா’விற்கு எதிராக வாக்களித்து விட்டார்கள். ஒருவரே எப்படி சிறந்த பங்கேற்பாளராகவும் மோசமான பங்கேற்பாளராகவும் இருக்க முடியும்?
ரமேஷ் சென்ற வாரத்தின் கேப்டனாக இருந்தாலும், அவர் சொகுசு பேர்வழி என்பதால் அத்தனை வேலையையும் நிஷாவின் தலையில் சுமத்தி விட்டார். எனவே ஒரு கேப்டனுக்கான அத்தனை பொறுப்பையும் நிஷா செய்து விட்டார். கூடவே ‘ரோபோ’ டாஸ்க்கையும் ஓரளவிற்கு நன்றாகவே கையாண்டார். அவர் செய்த ஒரே சறுக்கல், அணியிடம் கலந்தாலோசிக்காமல் அர்ச்சனாவிடம் தனிப்பட்ட காரணங்களைக் கூறி கோபப்படுத்த முயன்றதுதான். ‘டாஸ்க்கில்’ வெற்றி பெறுவதற்காக அவர் செய்த முயற்சி ஆர்வக் கோளாறாக அமைந்து விட்டது என்பது உண்மைதான். ஆனால் அந்த முயற்சி எப்படி ‘Boring’-ல் வரும்?
டாஸ்க்கிலும் சிறப்பாக பங்கேற்காமல், வீட்டு வேலைகளிலும் அதிக ஆர்வமில்லாமல் இருக்கும் இதர போட்டியாளர்களைத்தானே ‘மறுவாக்கெடுப்பில்’ தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? ரமேஷைப் போலவே இன்னொரு சொகுசு ஆசாமிதானே அப்போது சுட்டிக் காட்டப்பட்டிருக்க வேண்டும்?
கமல் அடிக்கடி சுட்டுக்காட்டுவது போல சிறந்த மற்றும் சுவாரஸ்யமில்லாத பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் போட்டியாளர்களின் குழு மனப்பான்மை, தனிப்பட்ட விருப்பு/வெறுப்பு, பாரபட்சம் போன்ற காரணிகள் பின்னால் நின்று செயல்படுகின்றன. இது ஆரோக்கியமான விளையாட்டிற்கு எதிரானது.
இந்த வார உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். ‘அர்ச்சனா’ Bossy என்கிற வார்த்தையால் அதிகம் புண்பட்டார் என்பது ‘அன்பு குழுவிற்கு’ ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதை ஓர் ஆலோசனையாக தெரிவித்து பெயர்களைப் பொதுவில் அறிவித்தது மட்டுமே அனிதா செய்தது. டாஸ்க்கின் போது அதை வலிமையாக பயன்படுத்தியவர் பாலாஜிதான். உண்மையில் அந்த உத்தியை அவர்கள் பயன்படுத்தியதிலும் தவறில்லை. எப்படியாவது கோபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட உத்தி அது. அர்ச்சனாவின் குணாதிசயமும் கூட அதுவே.
ஆனால், ‘எங்க தலைவி மேல கைய வெச்சது எவன்டா?’ என்கிற கைப்புள்ளைகளாக ‘அன்பு குழு’ ஆவேசத்துடன் செயல்பட்டதால் வந்த வினை இது. ரியோ வில்லங்கமான அந்தக் காரணத்தை அனிதாவிற்கு எதிராகச் சொல்லாமல் இருந்திருந்தால் பிரச்னை பெரிதாகியிருக்காது. ‘இது கூட்டு முயற்சிதானே?’ என்கிற புரிதலோடு நிஷாவும் அமைதியாக இருந்திருந்தால் இந்தப் பழி அவர் மீது விழுந்திருக்காது.
சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை திருப்திப்படுத்துவதற்காக ஒரு நிரபராதியை தண்டிப்பது போல் நிஷாவிற்குத் தண்டனை தருவதின் மூலம் கமல் உட்பட அனைவரும் திருப்தியாகி விட்டார்கள்.
சபையில் அனிதா தந்த விளக்கத்திற்குப் பிறகு ‘அப்பவே சொல்லியிருந்தா’ என்று ரியோ அழும்பு செய்தது கபட நாடகம்.
ஓகே. 69-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
‘இன்று இரண்டு எவிக்ஷன்’ என்று அவர் உறுதிப்படுத்திய விஷயம் காதில் தேனாகப் பாய்ந்தது. மட்டுமில்லாமல் எழுபது நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும் முக்கியம்.
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. பிக்பாஸ் கடந்த மூன்று நாட்களாக பாடல்களை ஒலிபரப்பாமல் குத்து இசையை மட்டும் போடுகிறார். எனவே இன்று மக்கள் வித்தியாசமாக கிச்சன் மேடையை சுற்றி வந்து ஆடினார்கள்.
"என் பெயரோட ஸ்பெல்லிங் சொல்லுங்க பார்க்கலாம்" என்று கேபி நிஷாவை நோக்கி ஆரம்பித்த உரையாடலைத் தொடர்ந்து சிறு விவகாரம் ஏற்பட்டது. அப்போது நிஷா செய்த ‘வில்லங்கமான’ கிண்டலினால் புண்பட்ட சோம், பதிலுக்குச் சற்று கடுமையாகப் பேசிவிட அதனால் மனம் உடைந்து போனார் நிஷா. " ‘இந்த வாரம் எலிமினேட் ஆயிடுவோமோ’ன்னு ஏற்கெனவே அவ பீதியில் இருக்கா... ஏன் அவளைப் போய் நோண்டறீங்க. நகைச்சுவை நேரத்திற்கு நேரம் மாறுபடுமா?" என்று ரியோவிடம் கத்திக் கொண்டிருந்தார் அர்ச்சனா. இது சோமிடம் நேரடியாக கேட்க வேண்டிய விஷயம்.
"கேபி சொன்னதை இயல்பாக எடுத்துக் கொண்ட சோம், நிஷா சொன்னபோது மட்டும் ஏன் கடுமையாக வேண்டும்?” என்பது அர்ச்சனாவின் கோபம். இதனால் சோமின் மீது காண்டில் இருந்தார். எப்பவும் ‘லவ் பெட்டில்’ உருண்டு கொண்டிருக்கும் சோம் இப்போது தன்னுடைய படுக்கையில் இருந்தது விதிவிலக்கான காட்சி. எப்படியோ இந்த ‘அன்பு கேங்’ சிதறுண்டால் அதில் மகிழ்ச்சிதான்.
ஆனால், சோமால் அப்படித் தனித்திருக்க முடியாது. எனவே நிஷாவிடம் சென்று பேசி சமாதானம் ஆகிவிட்டார். அர்ச்சனா விபூதி பூசி விட்டால் இந்தச் சடங்கு முழுமையாகி விடும். இதெல்லாம் ஒரு சண்டைன்னா அந்த வார்த்தைக்கே மதிப்பில்லை. ஃபுட்டேஜ் இல்லாத குறையினால் இதையெல்லாம் பிக்பாஸ் காட்ட வேண்டிய நிலைமை. ‘ரெட்’ சிப் பொருத்தினால் ஒழிய சோம் என்கிற ரோபோவிடம் எந்த மாற்றமும் தெரியப்போவதில்லை.
"வெற்றியை நோக்கி முன்னேறும் முனைப்பில் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்ன விதிமீறலையும் செய்யலாம்" என்ற எண்ணத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நியாயம் இருக்கிறதா? வாருங்கள் விசாரிப்போம் என்று அகம் டிவி வழியாக உள்ளே வந்தார் கமல்.
"ஸ்மார்ட்டா இருக்கீங்க சார்" என்கிற சம்பிரதாய வார்த்தைகளுடன் கமலை வரவேற்றார் அனிதா. "பதிலுக்கு எங்களை சொல்லவேயில்லையே?" என்று சிணுங்கினார் ரம்யா. "ஓ.. அப்ப ஒவ்வொரு வாரமும் போட்டு வாங்கறீங்களா?" என்று கிண்டலடித்தார் கமல். (இரும்மா... இப்பத்தான் அவர் கொஞ்சம் கோபம் வந்து அந்த ‘மூடோட’ விசாரிக்க வந்திருக்காரு. அதையும் சிரிச்சி கெடுத்துடுவீங்க போலயே!)
கமல் வரும் போதெல்லாம் இவர்கள் எழுந்து நிற்பதும் "உட்காருங்க... உட்காருங்க" என்று கமல் பதிலுக்கு சொல்வதும் அடிக்கடி நிகழும் ‘கிளிஷே’வான காட்சி. ஒன்று, இவற்றை எடிட் செய்து விடலாம். அல்லது "ஒவ்வொரு முறையும் எழுந்து நிற்கத் தேவையில்லை" என்று கமலே சொல்லி விடலாம். 'காலில் விழும் கலாசாரத்தை’ வன்மையாக எதிர்க்கும் கமல் இந்தப் போலித்தனத்தையும் மாற்றி விடலாம்.
போட்டியாளர்கள் ‘சாமர்த்தியமாக’ இயங்குவதாக நினைத்துக் கொண்டு தங்களுக்குள்ளாக ஒரு ஆட்டத்தை ஆடினால், விதிகளை மாற்றியமைத்து அவர்களுக்கு செக்மேட் வைப்பது பிக்பாஸின் ஸ்டைல். அவர்தானே இந்த நாடகத்தின் சூத்திரதாரி?! எனவே அந்த வகையில் எதிர்பாராத பொறியில் மாட்டிக் கொண்ட எலிகளான சோம், கேபி, ரமேஷ் ஆகியவர்களை கிண்டலுடன் விசாரித்தார் கமல்.
வயதில் இளையவர் என்பதால் கேபியின் மீது துவக்க நாட்களில் ஒரு கரிசனம் இருந்தது. ஆனால் அவர் அர்ச்சனா டீமை நோக்கி நகர்ந்த பிறகு அவர் செய்யும் பாரபட்சமான காரியங்கள், மூக்கால் சிரித்துக் கொண்டு சொல்லும் விஷயங்கள் பலவும் எரிச்சலையே ஏற்படுத்துகின்றன.
“ஆமாம் சார்... உள்ளே போனவங்க டக் டக்குன்னு வெளிய வந்ததால எங்களுக்கு சந்தேகம் வந்துச்சு" என்று இந்த எதிர்பாராத விஷயத்தை அவர்கள் கூறினார்கள். "எனக்கும் புரிஞ்சிடுச்சு" என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார் ரமேஷ். ரமேஷிற்குப் புரிந்து விட்டதென்றால் அது அந்த வீட்டின் நாற்காலிக்கும் புரிந்து விட்டது என்றே பொருள்.
"இது புரிஞ்சது சரி... ஆனா யார்... யாரை நாமினேட் பண்ணியிருப்பாங்கன்னு யூகிக்க முடிஞ்சதா?" என்கிற கமலின் கேள்விக்கு ரமேஷூம் சோமுவும் எளிதாக பதில் சொன்னார்கள். அர்ச்சனாவின் முகவாட்டத்தைக் கண்டு அப்போதே கண்டுபிடித்து விட்டார் சோம். கேபிக்கு மட்டும் புரியவில்லையாம். மீதியிருப்பவர் பாலாஜி மட்டும்தானே? எனில் இது எளிய விடை.
"யாருக்கு நாமினேஷன் பண்ணினோம்னு வெளில சொல்லக்கூடாது... ரூல் புக்ல இருக்கு" என்று பாலாஜி சொன்னவுடன், "அம்புட்டு நல்லவனாடா நீயி?" என்பது போல் பார்த்த கமல் "வாழ்த்துகள்" என்று சர்காஸ்டிக்காக பாலாஜியை பாராட்டினார். கமலின் முன்னால் சமர்த்துப் பிள்ளை போல் பாலாஜி ஒவ்வொரு வாரமும் அமர்ந்திருப்பது சிறப்பான நடிப்பு.
தேர்வில் வெற்றி பெறாத மக்கு மாணவர்களிடம் ‘ஏண்டா ஃபெயிலாயிட்டே’ என்று விசாரித்தால் ‘எக்ஸாம் அன்னிக்கு கைல அடிபட்டுடுச்சு’ என்பது உள்ளிட்ட பல அற்பமான காரணங்களைச் சொல்லி மழுப்புவார்கள். "ஏன் boring performer’ல வந்தீங்க? உங்களுக்கு சில நல்ல வாய்ப்புல்லாம் வந்ததே... உதாரணத்திற்கு கேப்டன்ஷிப்” என்று கமல் ரமேஷிடம் விசாரித்த போது அவர் சொன்ன பதில்களும் இப்படித்தான் இருந்தது. "கண் வலி சார். பெட் ரெஸ்ட்ல இருந்தேன்" என்றார். (அடப்பாவி மனுஷா..! இந்த எழுபது நாள்ல பெரும்பாலும் நீங்க பெட் ரெஸ்ட்லதானே இருந்தீங்க?!).
“கேப்டன்னா... நாம இறங்கி வேலை செய்யணுமா என்ன... துணைத்தலைவர் கிட்ட ஆர்டர் போட்டா போச்சு... சூப்பர்வைஸ் பண்றது மட்டும்தானே நம்ம வேலை" என்பது போல் ரமேஷ் விட்டேற்றியாக பதில் சொல்லும் போது, "இவர் உண்மையிலேயே வெள்ளந்தியா... இல்லை, அப்படி நடிக்கிறாரா?" என்று சந்தேகம் வந்தது. (கேப்டன்றது எவ்ளோ பெரிய பொறுப்பு! விஜயகாந்த் கிட்ட விசாரிச்சுப் பாருங்க ரமேஷ்!).
“முக்காவாசி வேலை நிஷாக்காதான் பார்த்தாங்க.. அப்ப எதுக்கு கேப்டன்?’' என்று சபையில் அனிதா போட்டுக் கொடுத்த போது ‘வெஷம்.. வெஷம்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாரோ என்னமோ. '‘அத நாங்க கேட்கணும்'’ என்று அனிதாவின் மீது பதிலுக்கு எரிந்து விழுந்தார் ரமேஷ்.
"கண் வலியின் போது கட்டையைச் சற்று சாய்க்கறதில பிரச்னையில்ல. ஆனா வந்த நாள் முதலே இவரு இப்படித்தாங்கய்யா இருக்காரு. அவரோட வேலைகளை கூட இன்னொருத்தர்தான் செய்ய வேண்டியிருக்கு" என்று ஆரி ப்ரோவும் ரமேஷை போட்டுக் கொடுக்க ரமேஷால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆனால் ‘செலக்ட்டிவ் அன்பீசியா’ பிரச்னை இருக்கும் அர்ச்சனா மட்டும் ரமேஷை விட்டுத் தராமல் பேசினார். ''அவர் துணில்லாம் நான்தான் துவைப்பேன். ஆனா அதை கஷ்டப்பட்டு கழற்றி எடுத்துட்டு வர்றதை அவர்தான் செய்வாரு... பாவம்… ஜித்து ப்ரோ'ப்ரோ'’ என்று மட்டும்தான் அவர் சொல்லவில்லை. அத்தனை கண்மூடித்தனமான சப்போர்ட். (இத்தனை பச்சையான குழுமனப்பான்மைதான் பிக்பாஸ் வீட்டில் இருக்கக்கூடாது என்கிறோம்.) "டாஸ்க் கூட பரவாயில்லை... வீட்டு வேலைல ரொம்ப சுணங்கித்தான் கெடந்தாரு" என்று சாட்சியம் சொன்னார் பாலாஜி.
"வைஸ் கேப்டன் பொறுப்பைக் கூட என் தலைலதான் ரமேஷ் சுமத்தப் பார்த்தாரு. அப்புறம் விசாரிச்சுப் பார்த்தா தூங்கறவங்களை எழுப்பணுமாம்... மைக் மாட்டச் சொல்லணுமாம்... நம்மால இது முடியாது... இதெல்லாம் கேப்டன் செய்ய வேண்டிய வேலை. நைசா எஸ்கேப் ஆயிட்டேன். பாவம்... நிஷாக்காதான் எல்லாம் செஞ்சாங்க" என்று பாலாஜி சொல்லியது இன்னொரு வகையான பொறுப்பின்மை. இப்போதாவது பாலாஜியின் இந்தப் பொறுப்பின்மையை கமல் விசாரித்திருக்கலாம். விட்டு விட்டார்.
"கீ கொடுக்காம பொம்மை மூவ் ஆகாது சார்..." என்று இதற்குப் பதிலாக அபத்த லாஜிக் பேசினார் ரமேஷ். அதாவது இவர் சாவி தருவாராம். அதற்கேற்ப நிஷா பொம்மை வேலை செய்யுமாம். இதையெல்லாம் ஒரு விளக்கம்னு சொன்னா... ஒரிஜினல் பொம்மை கூட ஏத்துக்காது. தனது விளக்கத்தின் போது ‘அடிக்கடி தூங்கிக் கொண்டிருந்த அனிதாவை’ பதிலுக்கு போட்டுக் கொடுத்தார் ரமேஷ். "வேற யாருமே தூங்கலையா..?" என்று எரிச்சலுடன் கேட்டார் அனிதா.
"சரிங்க... இனிமேலாவது உங்க வாய்ப்புகளை இங்கு சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்றதற்கு ‘சரி’ என்றார் ரமேஷ். (இன்றைய நிகழ்ச்சியின் முடிவில் ரமேஷ் வெளியேற்றப்படப் போகிறார் என்று கமலுக்குத் தெரியும். என்றாலும் இந்த அறிவுரை தந்தது சுவாரஸ்யமான நையாண்டிதான்).
ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த கமல், "வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு. இன்றும் நாளையும் நீங்கள் அதை செய்யலாம். இது ஒரு ஜனநாயக கடமை" என்பதை ‘பசிப்பது... புசிப்பது...’ என்று ரைமிங் தமிழில் அறிவுறுத்தினார்.
"நிஷா பயன்படுத்திய உத்தி நியாயமானதாகப் பட்டதா?” என்று அர்ச்சனாவிடம் கமல் கேட்ட போது முகத்தை சோகமாக்கிக் கொண்டு "என்னால தாங்க முடியலை" என்று உருக்கமாகச் சொன்னார் அர்ச்சனா.
"நட்பு ரீதியாக அர்ச்சனா சொன்ன அந்தரங்க தகவல்களை விளையாட்டுக்காக பயன்படுத்திக் கொண்டது முறையா?” என்ற கமல் இதற்கு உதாரணமாக ஜெயகாந்தன் எழுதிய ‘அந்தரங்கம் புனிதமானது’ என்கிற சிறுகதையை நிஷாவிற்கு மேற்கோள் காட்டியது அற்புதமான விஷயம்.
எனக்கு மிகப் பிடித்தமான சிறுகதை அது. வாசிக்காதவர்கள் தேடி வாசித்துப் பாருங்கள். அத்தனை கல்வியறிவு இல்லாத ஆனால் நடைமுறை ஞானம் அதிகம் கொண்ட ஜெயகாந்தன், அந்தக் காலத்திலேயே எத்தனை முற்போக்காகவும் மனமுதிர்ச்சியுடனும் சிந்தித்திருக்கிறார் என்பதற்கான உதாரணம் அந்தச் சிறுகதை.
"உங்களை ஊக்கப்படுத்துவதற்காக ‘மலேசியா நிஷா’வை உதாரணம் காட்டினேன். ஆனா அந்த ஊக்கத்தின் மேல ஆசிட் ஊத்திட்டீங்களே நிஷா" என்று கமல் ஆதங்கப்பட்ட போது "தப்புதாங்கய்யா... தெரியாம பண்ணிட்டேன்" என்று முழு சரணாகதி அடைந்தார் நிஷா. "ஆனா நீங்க வேணும்ன்னே பண்ண மாதிரி வெளியே தெரியுதே" என்று மக்களின் பரவலான எண்ணவோட்டத்தை குறிப்பிட்டார் கமல்.
‘'எனக்கு அப்படியெல்லாம் யோசிக்கக்கூட தெரியாது'’ என்று வழக்கமாக கூறும் நிஷா பெரும்பாலான சமயங்களில் வெள்ளந்தியானவர். எனவே இதை திட்டமிட்டு செய்திருப்பார் என்பதற்கான சரியான தர்க்கம் இல்லை.
“மேடைல அப்படி அறிவுபூர்வமாக பேசிய உங்களால் இதை சிந்தித்திருக்க முடியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது" என்றார் கமல்.
‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பதே இதற்கான விடை. மேடைகளில் புரட்சிகரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் முழங்கும் பலரை நெருங்கிப் பார்த்தால் அவர்கள் பிற்போக்காளர்களாகவும் அடிமுட்டாள்களாகவும் இருப்பார்கள். மனப்பாடமாக கற்றதை மேடையில் அப்படியே சிறந்த நடிப்போடு ஒப்பிப்பதில் மட்டுமே அவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் அவ்வளவே. இதை பொதுமைப்படுத்தவில்லை. பெரும்பான்மையான சதவிகிதம் இப்படித்தான்.
நிஷா இதற்கான விளக்கத்தை அளிக்கும் போதுதான் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடியை அறிந்து கொள்ள முடிந்தது. "அர்ச்சனா கிட்ட நான் போகும் போதெல்லாம் பாலாஜி என்னை நெருங்க விடலை. சந்தேகப்படறியான்னு கேட்டேன். அப்புறம் கடைசில பஸ்ஸர் டைம் நெருங்கிட்டதால இதை முயற்சி செய்தேன்" என்றார் நிஷா.
போட்டிகளால் ஆன இந்தச் சூழலில் அவை தரும் மனநெருக்கடியும் பரபரப்பும் மிகுந்திருக்கும் நேரத்தில் நாம் யாரை மிதித்து ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதே நமக்கே பல சமயங்களில் தெரியாது. அப்படியொரு அவலமான சூழல். இதற்கான சரியான உதாரணம்தான் நிஷா சொன்ன விளக்கம்.
‘'விளையாட்டில் குடும்பத்தை இழுக்காதீர்கள் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். போட்டி என்பது தற்காலிகம். ஆனால் நட்பு என்பதுதான் நிரந்தரம். சரி... அந்த வினையை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்" என்றார் கமல்.
“ஓகே. நிஷா செஞ்ச அதே விஷயத்தை ‘இது நடிப்பா?’ன்னு கேட்டு... நீங்களும் பதிலுக்கு பயன்படுத்தினீங்களே" என்று கமல் விசாரிக்க, "ரமேஷ்தான் அதை ஆரம்பிச்சு வெச்சார். நான் ஒருமுறைதான் பயன்படுத்தினேன்" என்று சொல்லி எஸ்கேப் ஆனார் அர்ச்சனா. ஆனால் சம்பந்தப்பட்ட பகுதியில் நிஷாவை அவர் தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாக்கியதை தொடர்புள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
“அது சரிங்க அர்ச்சனா... மத்தவங்களுக்கெல்லாம் முட்டையை உபயோகித்து ‘அசைவ’ உத்தியைப் பயன்படுத்திய நீங்கள் ரியோவிற்கு மட்டும் காலில் விழுந்து ‘சைவ’ உத்தியை பயன்படுத்தியது ஏன்?" என்று கமல் விசாரித்த போது "ரியோவிற்குக் காலைத் தொட்டா பிடிக்காது. சோம்தான் கடைசில இந்த ஐடியாவைத் தந்தார். ரியோவிற்கு சிரிப்பு வரும்ன்னு நெனச்சோம். ஆனா கோபம் வந்துச்சு" என்று விளக்கம் அளித்தார் அர்ச்சனா.
காலில் விழும் கலாசாரத்தை வழக்கம் போல் கண்டித்த கமல் "ரியோ உங்க காலைத் தொடுறதுல உங்களுக்கு ஏதும் பிரச்னையில்லையே?" என்று ஐம்பதுகளின் வார இதழ்களில் வெளிவரும் நகைச்சுவை வாசனையுடன் ஒரு ஜோக்கை அடித்தார். (இதற்கு அந்தக் காலக் கணக்கின் படி இரண்டனா சன்மானம் கொடுக்கலாம்). "கால்ல விழறது மட்டும் இல்லை சார். கம்புல தொங்க விட்டு டார்ச்சர் பண்ணாங்க" என்று தன்னுடைய குரூப்பை விட்டுக் கொடுக்காமல் பேசினார் ரியோ. ஆனால், "என் டீமிற்காகத்தான் விளையாடினேன்" என்று விளக்கம் அளிப்பதில் மட்டும் அவர் குறைவைக்கவில்லை.
"சரி. மெயின் மேட்டருக்கு வருவோம். இந்த வாரம் 2 எவிக்ஷன் இருக்கு. 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ன்றதுதான் இதுதான்" என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டு மேடையில் இருந்து மறைந்தார் கமல். "அய்யா. இருங்கய்யா. சரியா சொல்லிட்டுப் போங்கய்யா..." என்று ரியோ பதறினார். அனிதா எழுப்பிய விநோதமான ஒலிக்கு, "என்னங்க... அவரைப் போய் யோவ்–ன்றீங்க” என்று சோம் கோத்து விட முயல, "அப்படியாக ஒலியெழுப்பினேன்" என்பதை சைகையில் தெரிவித்தார் அனிதா.
"மாப்பு... எனக்கு இன்னிக்கு ஆப்பு" என்று ரோபோ டாஸ்க்கில் ரமேஷ் சொன்னது இன்று உண்மையாயிற்று. (இதை சொல்ல வைத்த ஆரி ஒரு தீர்க்கதரிசிதான்). ‘முகம் பேயறைந்தது போல் மாறியது’ என்று அறுபதுகளில் ஒரு கிளிஷேவான வரி எழுதுவார்கள். அதை போட்டியாளர்களின் முகங்களில் இன்று பார்க்க முடிந்தது.
"ரெண்டு எவிக்ஷன்னா... நாமினேஷன்ல இல்லாதவங்களையும் கூட ரெட்கார்ட் கொடுத்து தூக்க வாய்ப்பிருக்குல்ல" என்று ரியோ ஓவராக யோசித்து பதற, "அப்படியெல்லாம் இருக்காது... லிஸ்ட்ல இருக்கறவங்கதான்" என்று அர்ச்சனாவும் சோமும் ஆறுதல் சொன்னார்கள். இறுதி நிலையை நோக்கி போட்டி பயணித்துக் கொண்டிருப்பதால் ஆட்களைக் குறைக்கிறார்கள் என்கிற சரியான காரணத்தை யூகித்தார் அனிதா. ('கெளம்பு... காத்து வரட்டும்’ன்னு பிக்பாஸ் சொல்றாரு).
"என்னது சிவாஜி செத்துட்டாரா?" என்று ஜாலியாக அலறினார் பாலாஜி. “புதுசா யாராவது வரலாம்" என்று ஆரி சொன்னதை மறுத்தார் அனிதா. பழைய பிக்பாஸ் நிகழ்ச்சி, அதன் விதிமுறைகள், பேட்டர்ன் ஆகியவற்றை அனிதா தெளிவாக அறிந்திருக்கிறார் போலிருக்கிறது.
"எனக்கு பயமா இருக்கு" என்று கலங்கி இப்போதே ஃபர்பாமன்ஸை ஆரம்பித்தார் அர்ச்சனா. "நான்தான் போவேன்... எனக்குத் தெரியுது" என்று சொன்ன நிஷா, "வெளில போய் டீ சாப்பிட்டுக்கறேன்" என்று அந்த நிலையிலும் ஜோக் அடித்தது சுவாரஸ்யம்.
"என்ன பாலாஜி... வேர்க்குதா?" என்கிற கேள்வியுடன் உள்ளே வந்தார் கமல். 'ஆமாம் சார் உங்களுக்கு வேர்க்காது. நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. எனக்கு அப்படியா... இங்க வில்லனும் நானே... ஹீரோவும் நானே’ என்று பாலாஜி பதில் சொல்லியிருக்கலாம். (வெளியே வாங்க பாலாஜி. 'பப்லு' ஆர்மின்ற பேர்ல ஒரு வெறி பிடிச்ச கூட்டமே இருக்கு. அத்தனை ரசிகைங்க கூட்டம்).
அர்ச்சனாவின் தந்தை மரணத்தை இழுத்த நிஷாவை தீவிரமான விசாரணைக்கு உள்ளாக்கிய கமல், சோமின் ‘வளர்ப்பு நாய்’ குட்டு பற்றி வில்லங்கமாக பேசிய (அப்படியாக சோமால் சொல்லப்பட்டது) ஆரி பற்றி எதையுமே கேட்காதது ஒரு முரண்.
‘2 எவிக்ஷன்’ என்று போட்டியாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டு போன கமல், திரும்பி வந்து அனிதா விவகாரத்தை கையில் எடுத்தார். அதற்காகவே கொலைவெறியுடன் காத்துக் கொண்டிருந்த அனிதா, ‘ஸ்டார்ட்’ என்று கமல் சொன்னவுடன் நயாகரா நீர் வீழ்ச்சியாக பொங்கித் தள்ளினார். அர்ச்சனாவே அவரை தடவி சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. (என்ன பண்றது?!. பக்கத்துல உக்காந்து தொலைச்சுட்டேன்!).
தன் வழக்கமான பாணியில் நீளமாக பேசினால் கமல் எரிச்சல் அடைவாரோ என்கிற சந்தேகமும் அனிதாவின் உள்ளே இருந்தது போல. என்றாலும் மடை திறந்த வெள்ளமாக அவர் பொங்கித் தள்ளியவுடன் ‘மாஸ்டர்... ஒரு ஊத்தப்பம்’ என்கிற பாணியில் அதற்கு ரியோ பதில் சொன்ன பதில்தான் அநியாயம்.
"இதையல்லாம் முன்னமே அவங்க சொல்லியிருந்தா நான் ஏத்துக்கிட்டு இருந்திருப்பேன்" என்று பித்தலாட்டத்தனமான ஒரு பதிலைக் கூறினார் ரியோ. "இதையேதான் நான் அப்பவும் கதறினேன்" என்று அனிதா கூற, "அவங்க நிஷாவை வெச்சுதான் கம்பேர் பண்ணிட்டு இருந்தாங்க" என்று சாதித்தார் ரியோ.
‘Boring performer’ சர்ச்சை, விவாதத்தின் போது மட்டுமல்லாமல் சிறை வாசலுக்கு வந்து ரியோ பேசிய போதும் அனிதா இதையெல்லாம் முன்பே வெடித்து தீர்த்தார். ஆனால் இதையெல்லாம் அப்படியே விழுங்கி விட்டு ‘அப்பவே சொல்லியிருந்தா’ என்று ரியோ செய்த நாடகம் அநியாயமானது.
ஒரு தவற்றை நம் மனது உணர்ந்து விட்ட அடுத்த கணத்திலேயே அதற்கு மன்னிப்பு கேட்டு விடுவதுதான் முதிர்ச்சி. நம் தவறுகளை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களை மனம் உருவாக்கும். ஆனால் நேர்மை என்கிற ஒரே உணர்வின் மூலம் அத்தனை சறுக்கல்களையும் நாம் தாண்டி வந்து விடலாம். "சாரி அனிதா..." என்கிற வார்த்தையில் கடந்து போக வேண்டிய விஷயத்தை விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார் ரியோ.
"இத்தனை பேருக்காக நான் ஒத்தையா நின்னு சமைச்சேன்" என்று அனிதா கதறியதை, "நாங்களா இருந்தா டாஸ்க்கிற்கு முன்னாடியே பிளான் பண்ணி சீக்கிரமா சமைச்சு முடிச்சிருப்போம்" என்று ஊமைக்குத்தாக அர்ச்சனா குத்தியதைக் கண்டு முகம் சுளித்தார் அனிதா.
அனிதாவின் புலம்பலோடு இணைந்து, "இந்த வீட்ல இப்படித்தான் சார் அநியாயம் பண்றாங்க.. என்னையும் இப்படித்தான் ரியோ சொன்னாரு" என்று தன் பஞ்சாயத்தையும் இணைத்தார் ஆரி. “ஆனா நீங்களும் நிஷாவிற்குத்தானே வாக்களிச்சீங்க?” என்று கமல் கிடுக்கிப்பிடி போட்டபோது, "அவங்க சிறப்பா செஞ்ச வேலைக்கு ஆதரவளிச்சேன்" என்று தடுமாறினார் ஆரி.
"அனிதாவும்தானே எல்லாவற்றிலும் சிறப்பா பண்ணியிருக்காங்க... அவங்களை ஏன் கன்ஸிடர் பண்ணலை?" என்கிற கமலின் கேள்விக்கு, "அய்யோ சார்! என்னை பெஸ்ட்ன்னு கூட சொல்ல வேண்டாம். ஏன் வொர்ஸ்ட்ல சேத்தாங்கன்னு தெரியல" என்று அனிதா புலம்ப, "அதானே.. ஏன்?” என்றார் கமல்.
"சரி போங்காட்டம் ஆடியது ஒழிந்து போகட்டும். இப்பவாவது நேர்மையா ஒரு தேர்தலை நடத்துவோம். 'Boring performer’ யாரு... உண்மையைச் சொல்லுங்க" என்று கமல் சற்று கறாராக கேட்டவுடன் கேபி உட்பட சிலர் நிஷா பக்கம் கைகாட்டினார்கள். ஆனால் அன்பு கேங், தங்களின் முந்தைய நாமினேஷனில் உறுதியாக நின்றது. ('மாத்தி மாத்தி கேள்வி கேப்பாங்க... நாம ஒண்ணா நின்னு ஒரே விஷயத்தைதான் சொல்லணும்’ என்கிற 'பாபநாசம்' உத்தியை அன்பு கேங் பயன்படுத்தியது. கமலுக்கேவா?).
"வாரம் முழுவதும் ஈடுபாட்டோடு செயல்படாதவர் எவர்?" என்பதை நிஷாவைத் தவிர்த்து விட்டு நேர்மையாக யோசித்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் சரியான விடை கிடைத்திருக்கும். அப்படி எவருமே அங்கு இல்லையா என்ன?
இது ஏன் நிகழ்ந்தது? சற்று யோசித்துப் பார்ப்போம்.
ஏன் நிஷாவின் பெயரை பெரும்பாலோனோர் இப்போது மாற்றிச் சொன்னார்கள்? கமலின் கோபம் நிஷாவின் மீது பாய்ந்ததால். கமலுக்கு ஏன் நிஷாவின் மீது கோபம்? பார்வையாளர்கள் பெரும்பாலும் நிஷாவின் மீது கோபமாக இருந்ததால். மக்களின் உணர்வை நிகழ்ச்சியில் பிரதிபலிக்க வேண்டிய நெருக்கடிக்கு கமல் ஆளானது போல் தெரிந்தது.
நிஷாவிற்கு ஏன் இந்த நெருக்கடி? அர்ச்சனாவின் மீது இருந்த பாசத்தால் அனிதாவிற்கு எதிராக அவர் ஆவேசமாக உரையாடியதால் பார்வையாளர்களின் எரிச்சலுக்கு ஆளானார்.
ஆக... குழு மனப்பான்மை என்னும் அடிப்படையான காரணம் நிஷாவிற்கு எதிராக அமைந்தது என்பதுதான் இதிலுள்ள மறைமுகமான உண்மை. நிஷாவை விடவும் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர்கள் அங்கு உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டபடி சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை திருப்திப்படுத்துவதற்காக நிஷாவை ‘ஓய்வறைக்கு’ அனுப்பும் முடிவை கமல் எடுத்தார்.
"எனக்கு நீதி கிடைச்ச வரைக்கும் போதும்... பாவம் சார். அவங்களை விட்றலாம்" என்று உண்மையிலேயே சொன்னாரோ.. அல்லது ஒப்புக்கு சொன்னாரோ... அனிதா சொன்னதை கமல் கேட்கவில்லை. வருத்தமும் கோபமும் கலந்த முகபாவத்துடன் எழுந்து ஓய்வறைக்குச் சென்றார் நிஷா. ரியோவே அவரை வைத்து பூட்ட வேண்டியிருந்ததுதான் இதிலுள்ள சுவாரஸ்ய துயரம்.
கமல் சென்ற பிறகு, இத்தனை களேபரத்திற்குப் பிறகும் தன் நிலையில் உறுதியாக நின்று அனிதாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ரியோ, ஒரு கட்டத்தில் அனிதாவை கட்டியணைத்து வேறு வழியில்லாமல் சமாதானம் ஆனார்.
'இந்த வாரம் இரண்டு எவிக்ஷன்’ என்பதை அறிவித்த கமல், இதை வித்தியாசமாக செய்வோம் என்று கூறி ரமேஷை வாக்குமூல அறைக்கும், சோமை ஸ்டோர் ரூமிற்கும் அனுப்பி வைத்தார். யார் மேடையில் தோன்றுவாரோ... அவரே வெளியேற்றப்பட்டவர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்
‘ரமேஷா... சோமுவா...’ என்கிற தேர்வில் அர்ச்சனாவின் மனது சோமுவிற்காக அடித்துக் கொண்டது. சில நொடிகளில் இதற்கு விடை கிடைத்தது. சோம் வீட்டிற்குள் வர அர்ச்சனா குரூப் அகம் மகிழ்ந்தது. இந்த விஷயத்தை சிலர் சிறையில் இருந்த நிஷாவிடம் சொல்ல, ‘எப்படியாவது ஒழிஞ்சு போங்கடா டேய்... நானே சோகத்துல இருக்கேன்’ என்பது மாதிரி அமர்ந்திருந்தார்.
ரமேஷ் வெளியேற்றப்பட்ட விஷயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக்பாஸ் பார்வையாளர்கள் நீண்ட காலமாக கொலைவெறியுடன் காத்துக் கொண்டிருந்த விஷயம் இது. அந்த அளவிற்கு சுவாரஸ்யமில்லாத, சோம்பேறித்தனமான போட்டியாளராக ரமேஷ் அங்கு சொகுசாக வாழ்ந்து வந்தார். இதுவே மிக தாமதமான முடிவுதான்.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒரு சாக்லேட் விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அசந்தர்ப்பமான சூழலில் கூட வெட்டியாக நின்று கொண்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு அதிர்ஷ்டவசமாக நல்ல காரியங்கள் நடக்கும். இதற்கு சிறந்த உதாரணம் ரமேஷ்தான். எதையும் செய்யாமலேயே அவர் இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தது அதிர்ஷ்டம்தான். குழு மனப்பான்மைதான் அவரை இத்தனை நாள் காப்பாற்றி வைத்திருந்தது.
“வாங்க ரமேஷ்... ‘ஹெல்த் ஸ்பா’ல இருந்த மாதிரி ஜாலியா இருந்த ஒரே ஆள் நீங்கதான்" என்று குத்தலான நையாண்டியுடன் ரமேஷை வரவேற்றார் கமல். 'ஆமாம் சார்.. இனிமே மசாஜ்ஜுக்கு வெளியே காசு தரவேண்டியிருக்கும் போல’ என்று ரமேஷ் சொல்லி விடுவாரோ என்று கூட தோன்றியது.
ஆனால், "என்னோட தப்புதான். இந்த வாய்ப்பை நான் சரியாப் பயன்படுத்திக்கலை" என்று நேர்மையாக பதில் சொன்ன ரமேஷிற்குப் பாராட்டு. அதென்னமோ பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வருகிறவர்கள், தெளிவான முகத்துடனும் மனதுடனும் மாறிவிடுகிறார்கள்.
அகம் டிவி வழியாக போட்டியாளர்களைச் சந்தித்த ரமேஷ் ஒவ்வொருவரையும் வாழ்த்தினார். அனிதாவிற்கு வாழ்த்து சொன்ன போது, "சாரி... ஒய்வறைல பேச டைம் கிடைக்கலை..." என்ற போது, 'அடப்பாவி மனுஷா’ என்று தோன்றியது. நல்லாத் தூங்கிட்டு பேச்சைப் பாரு.
‘'சரி. இனியாவது உருப்படற வழியைப் பாருங்க... பிக்பாஸ் வாய்ப்பு அதற்கு உதவலாம்'’ என்பது போல் வாழ்த்தி அனுப்பினார் கமல்.
பொதுவாக எந்தவொரு போட்டியாளரின் வெளியேற்றத்திலும் பார்வயைாளர்களுக்கு சில நெருடல்கள், சந்தேகங்கள், சர்ச்சைகள் எழும். ஆனால் அவர்கள் ஏகமனதாக ஒப்புக் கொண்டு மகிழ்ச்சியடையவது ரமேஷின் வெளியேற்றத்தின் போதுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் இதில் இருந்த ஒரேயொரு சிறு நெருடல் என்னவெனில், நிஷாவையும் வீட்டிற்குள் அனுமதித்து ரமேஷிடம் பேசச் சொல்லியிருக்கலாம். அந்த அளவிற்கு இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்தார்கள்.
'சரி... நிஷாவும் நாளைக்கு வெளியதானே போகப் போறாங்க. வெளில போய் பேசிக்கட்டும்’ என்று கமலும் பிக்பாஸூம் நினைத்தார்களோ... என்னவோ!
ஆம். நாளை நிஷாவும் வெளியேற்றப்படுகிறார். இனியாவது பிக்பாஸ் வீட்டில் குழு மனப்பான்மை அகலுமா?
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/ramesh-evicted-nisha-to-follow-bigg-boss-tamil-season-4-day-69-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக