Ad

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

தோழனா, வில்லனா... நீங்கள் கிரெடிட் கார்டை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா?

`கிரெடிட் கார்டு வேணுமா சார்' என்று யார் போன் செய்தாலும், அலறி அடித்துக்கொண்டு அழைப்பை துண்டிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

காரணம் கந்துவட்டிக் காரர்களைவிடவும், அதிகமான வட்டியை கிரெடிட் கார்டுகள் நம்மிடமிருந்து பிடுங்குகின்றன. கண்ணுக்கு தெரிந்த வட்டி, தெரியாத மறைமுக வட்டி எனப் பல விஷயங்கள் இதில் இருக்கின்றன.

`சரி, அப்படியானால் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாதா?' என்று நீங்கள் கேட்கலாம். பயன்படுத்தவே கூடாது எனச் சொல்லவில்லை. சரியாகப் பயன்படுத்தினால் அதைப் போன்ற உற்ற தோழன் வேறு எதுவும் இருக்க முடியாது. நம் எதிர்காலக் கடன் தேவைகளுக்கு நம் இமேஜை உயர்த்திக் கொடுக்கும் வல்லமையும் அதற்குண்டு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதை எப்படி ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

Card

முதலில், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது, வாங்கியதுதான் வாங்கிவிட்டோம் கார்டை தேய்த்து ஏதாவது செலவுகளைச் செய்வோம் என்று நினைத்து, அதைப் பயன்படுத்த வேண்டாம். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் லிமிட் என்ன என்று பாருங்கள். பொதுவாக, முதல் முறையில் ரூ.30,000 உங்கள் லிமிட்டாக இருக்கும்.

அத்தியாவசியமான, குறைந்த செலவுகளுக்கு மட்டுமே கடன் அட்டையைப் பயன்படுத்துங்கள். கிரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்த வேண்டாம். 50 சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்தினால், உங்களிடம் காசு கையிருப்பு இல்லாததால்தான், நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்று புரிந்துகொள்ளப்படும். அதிகபட்சம் 30 சதவிகிதத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது மிக நன்று. ஏனெனில், உங்களுடைய அதிகபட்ச பயன்பாடு சிபிலில் அப்டேட் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடன் அட்டையில் பில்லிங் தேதி, உங்களுக்குப் பணம் செலுத்த வசதியான சூழலாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான் கிரெடிட் கார்டு பில் கட்டுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. தயவுசெய்து உங்கள் வருமானத்தையும், மாத கமிட்மென்ட்டுகளையும், கிரெடிட் லிமிட்டையும் மனதில் வைத்து, கடன் அட்டையைப் பயன்படுத்தினால் நல்லது.

செலவழித்த தொகையைச் சரியான நேரத்தில் செலுத்திவிடுங்கள். உங்களால் இதை நினைவில் வைத்துக்கொண்டு செலுத்த இயலாது என்றால், வங்கியின் ஆன்லைன் பேங்கிங் மூலம் ஆட்டோ டெபிட் (Auto Debit) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும். வங்கியில் தேவையான அளவு பணம் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Credit Card

உங்கள் கிரெடிட் கார்டு பில்லில், கட்ட வேண்டிய குறைந்தபட்சத் தொகை மற்றும் முழுத் தொகை தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாதமும் முழுமையான பில்லைக் கட்டிவிடுங்கள். குறைந்தபட்ச பில் மட்டும் கட்டினால், மீதமுள்ள தொகைக்கு எக்ஸ்ட்ரா வட்டி கட்ட வேண்டியிருக்கும். அது மட்டுமன்றி, அடுத்த மாத பில்லுடன் கூடுதல் சுமையாக வந்து நிற்கும். தாமதமாக பில் கட்டினால், அதுவும் சிபிலில் பதிவு செய்யப்படும். பின்னர் நீங்கள் வேறு கடன் கேட்டால் எந்த நிறுவனமும் தராது.

ஸ்மார்ட்கேர் டிப்ஸ்!

* ஆன்லைன் பர்ச்சேஸ் என்றால் நம்பிக்கையான இணையதளங்களில் மட்டும் அட்டையைப் பயன்படுத்துங்கள். விலை குறைவு, நல்ல ஆஃபர் என ஆசைப்பட்டு, பரிச்சயமில்லாத இணைய தளங்களில் கார்டைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கார்டு விவரங்கள் களவாடப்பட்டு பெரும் துயரத்தில் தள்ளிவிட்டுவிடும்.

* கிடைக்கிறதே என்பதற்காகக் கணக்கில்லாமல் கிரெடிட் கார்டை வாங்க வேண்டாம். கையாள்வது கஷ்டம். நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், இருக்கும் கார்டிலேயே லிமிட் அதிகப்படுத்திக் கொடுப்பார்கள்.

சஞ்சய் காந்தி

* எக்கச்சக்க ரகங்களில் கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன. உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து வாங்குங்கள். ஷாப்பிங் செய்வர்களுக்கு, அதிகம் பயணம் செய்பவர்களுக்கு, எரிபொருள் நிரப்புபவர்களுக்கு எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. உங்களுக்கேற்ற கார்டை வாங்கினால், சலுகைகளின் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

* கடன் அட்டையைப் பயன்படுத்துவதற்கு முன், உங்களுக்கு வழங்கிய வங்கியின் இணைய தளத்துக்குச் சென்று, உங்கள் அட்டைக்கான சலுகைகளைத் தெரிந்துகொண்டு பயன்படுத்தினால் பணத்தை மிச்சப்படுத்தலாம். உங்கள் முன்னிலையில் மட்டுமே அட்டையைப் பயன்படுத்துங்கள். ஹோட்டல், கடை பணியாளரிடம் கொடுத்து அனுப்பி பயன்படுத்த வேண்டாம். உங்கள் அட்டையைப் பிரதியெடுக்க வாய்ப்புள்ளது.



source https://www.vikatan.com/business/banking/how-can-we-use-credit-cards-smartly-useful-tips

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக