Ad

திங்கள், 7 டிசம்பர், 2020

புதுச்சேரி: விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த் போராட்டம்! - பேருந்து, ஆட்டோக்கள் இயங்கவில்லை

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், சமூகநல அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு.

வெறிச்சோடிய பேருந்து நிலையம்

விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதேபோல செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்றைய போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ போன்றவை ஓடவில்லை. அதேபோல தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரியமார்க்கெட் போன்றவையும் மூடப்பட்டிருக்கிறது. இந்த போராட்டம் குறித்து பேசிய முதல்வர் நாராயணசாமி, "இன்றைய பந்த் போராட்டத்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருக்கிறது.

Also Read: பேருந்துகள் இயங்கவில்லை; கடைகள் அடைப்பு -குமரி பா.ஜ.க `பந்த்' காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காங்கிரஸ் தொண்டர் என்ற முறையில் அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை. விவசாயிகள் வஞ்சிக்கப்படும் போது அனைவரும் ஒத்துழைப்பு தருகிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான மூன்று கறுப்பு சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்” என்றார். முழு அடைப்புப் போராட்டம் காரணமாக புதிய பேருந்து நிலையம், நேரு வீதி மற்றும் காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அதேபோல தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/puducherry-bandh-protest-in-support-of-farmers-bus-autos-not-running

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக