சென்னை நசரத்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விடுதியில் கணவர் ஹேமந்த்துடன் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ரா தங்கியிருந்தார். டிசம்பர் 9-ம் தேதி நடிகை சித்ரா, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் முகத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் சித்ராவின் ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகக் கூறினர். டிசம்பர் 10-ம் தேதி நடந்த பிரேத பரிசோதனையின்போது சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தற்கொலை என்ற கோணத்தில் பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சனன், நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் ஆகியோர் ஹேமந்த்திடம் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர்.
நடிகை சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் பதிவுத் திருமணம் நடந்து சில மாதங்களே ஆவதால், ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ, சித்ராவின் அம்மா விஜயா, அப்பா காமராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது சித்ராவை ஹேமந்த்தான் கொலை செய்தார் என்று விஜயா கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார். அதனால், ஹேமந்த்திடமும் அவரின் பெற்றோரிடமும் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்த முடிவு செய்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் நசரத்பேட்டை போலீஸார் இரவோடு இரவாக ஹேமந்த்தைக் கைது செய்து பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்திருக்கின்றனர். ஹேமந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Also Read: சென்னை: முகத்தில் காயம்..?!- சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் போலீஸார் விசாரணை
நசரத்பேட்டை போலீஸாரிடம் விசாரித்தோம். ``சித்ரா தற்கொலை செய்த நாளிலிருந்து ஹேமந்த்திடம் விசாரணை நடந்து வந்தது. சித்ராவும் ஹேமந்த்துக்கும் ஷூட்டிங் முடிந்து, ஒரே காரில் விடுதி அறைக்கு வந்திருக்கின்றனர். அதன்பிறகு ஹேமந்த் வெளியில் சென்ற நிலையில் சித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதனால், ஹேமந்த்திடம் நீங்கள் அறையை விட்டு வெளியில் சென்றது ஏன் என்ற கேள்வி கேட்டோம். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். ஷுட்டிங் முடிந்து வந்த சித்ரா குளிக்கச் செல்வதாகக் கூறியதால் அறையிலிருந்து வெளியேறியதாகக் கூறினார்.
அதன்பிறகு காரில் ஆவணங்களை எடுக்கச் சென்றதாக ஹேமந்த் தெரிவித்தார். அதனால், ஹேமந்த் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில் சித்ராவின் அம்மா விஜயாவும் ஹேமந்த் மீது குற்றம்சாட்டினார். அதன்பிறகு எங்களின் விசாரணையின் கோணம் மாறியது. துணை கமிஷனர் தீபாசத்யன், உதவி கமிஷனர் சுதர்சனன், இன்ஸ்பெக்டர் விஜயராகவன் ஆகியோர் மாறி மாறி ஹேமந்த்திடம் கிடுக்குப்பிடி கேள்விகளைக் கேட்டனர். ஒருகட்டத்தில் அவர் அறையில் என்ன நடந்தது என்று சொல்லத் தொடங்கினார்.
டிசம்பர் 8-ம் தேதி இரவு வரை இவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்த ஷுட்டிங்கில் கலந்து கொண்ட சித்ரா, ஆடி காரில் விடுதி அறைக்கு ஹேமந்த்துடன் வந்திருக்கிறார். அப்போது ஷூட்டிங்கில் நெருக்கமான காட்சிகள் தொடர்பாக இருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அது, விடுதி அறைக்குச் சென்றபிறகும் தொடர்ந்திருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த ஹேமந்த், சீரியலில் இனி நீ நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டாம். உன்னைப்பற்றி எனக்கு வரும் தகவல்கள் எனக்கு மனவேதனையை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார். அதற்கு சித்ரா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இருவருக்குமிடையே நடந்த வாய்தகராறு முற்றியிருக்கிறது. அதன்பிறகுதான் ஹேமந்த் அறையை விட்டு வெளியில் சென்றிருக்கிறார்.
ஏற்கெனவே சித்ராவின் அம்மாவுக்கும் ஹேமந்த்துக்கும் இடையே மனகசப்பு இருந்து வருகிறது. அதனால், ஹேமந்த் குறித்து சித்ராவிடம் சில முக்கியத் தகவல்களை விஜயா கூறி வந்தார். அதனால், விஜயாவுக்கும் சித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் ஹேமந்த் இப்படி பேசியது சித்ராவுக்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் சித்ரா, இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதனால்தான் ஹேமந்த்தை கைது செய்திருக்கிறோம். மேலும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றனர்.
போலீஸ் விசாரணையில் இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. சின்னத்திரை வட்டாரத்தில் சித்ரா அனைவரிடமும் சகஜமாகப் பழகக்கூடியவர். சித்ராவைச் சந்தித்த நாள் முதல் ஹேமந்த், தன் காதலை வெளிப்படுத்தியது வரை இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அதனால்தான் இருவரும் அவசர அவசரமாகப் பதிவு திருமணம் செய்திருக்கின்றனர்.
Also Read: நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம், ரசிகர்கள்!
தங்களின் திருமணத்தை சிறப்பாக நடத்த இருவரும் முடிவு செய்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் கொரோனாவால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்திருக்கிறது. அதோடு சித்ராவுக்கு பொருளாதாரரீதியாகவும் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. வீடு, கார் என வாங்கிய சித்ராவுக்கு கொரோனா காலத்தில் எதிர்பார்த்த வருமானம் இல்லை என்று கூறப்படுகிறது. குடும்பச் சூழல், பொருளதார நெருக்கடி, ஹேமந்த்தின் நடவடிக்கை ஆகிய காரணங்களால் சில நாள்களாகவே சித்ரா கடும் மனவேதனையில் இருந்திருக்கிறார். டிசம்பர் 9-ம் தேதி நடந்த தகராறு, அவரை இந்த முடிவு எடுக்க தள்ளியிருக்கிறது என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
சித்ரா, தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்த சூழலில் அவர் ஏன் அதுதொடர்பாக கடிதம் அல்லது வீடியோவைப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி இன்னமும் ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மனதில் எழுந்துள்ளது.
source https://www.vikatan.com/news/crime/serial-actors-chitra-suicide-case-husband-hemanth-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக