நீலகிரி மாவட்டம் பந்தலுார் கொளப்பள்ளி டான்டீ பகுதியைச் சேர்ந்த கூடலுார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான (தி.மு.க) ஆனந்தராஜ், அவர் மகன் பிரசாந்த் ஆகிய இருவரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, உடைந்த கொம்பன் என்ற காட்டு யானை தாக்கிக் கொன்றது.
இதேபோல் கடந்த 8 மற்றும் 10-ம் தேதிகளில் மணி, நாகமுத்து ஆகிய இருவருமே யானை தாக்கியதில் உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடந்த யானை தாக்குதல் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உடல்களை வாங்க மறுத்து, கடைகளை அடைத்து, 10 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாவட்ட வருவாய் அலுவலர், அதிரடிப்படை கூடுதல் எஸ்.பி, மாவட்ட வன அலுவலர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த அதிகாரிகள் 'உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு, உடனடியாகத் தலா, 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 25 லட்சம் வழங்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். குறிப்பிட்ட அந்தக் காட்டு யானையைப் பிடிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. உடனடியாகப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த பின்னரே 10 மணி நேரமாக நடைபெற்றுவந்த மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், ''மக்களைத் தாக்கும் யானையை அடையாளம் கண்டுள்ளோம். இந்தக் காட்டு யானையை சேரம்பாடி உடைந்த கொம்பன் மற்றும் சங்கர் என்ற பெயரில் மக்கள் இதை அழைக்கின்றனர்.
தற்போது இந்த யானை காப்பிக் காடு பகுதியில் உள்ளது. இதைப் பிடிக்க முடிவு செய்துள்ளோம். 'ஆப்ரேஷன் புரோக்கன் டஸ்கர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்ரேஷனுக்கு மூன்று கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதுமலையிலிருந்து விஜய், வசீம் மற்றும் டாப்சிலிப்பிலிருந்து கலீம் ஆகிய மூன்று கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானையைப் பிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/environment/operation-broken-tusker-launched-by-nilgiris-forest-dept-to-capture-an-elephant
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக