கர்நாடக மாநிலம் கோலாரை அடுத்த நரசப்புராவில், தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் செல்போன் உற்பத்தித் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன், மைக்ரோசாப்ட் மற்றும் லெனோவா நிறுவனங்களின் ஐடி தயாரிப்புகளும் இங்குச் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 5,000-க்கும் அதிகமான ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்குக் கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் பணியில் சேரும்போது கொடுப்பதாகச் சொன்ன ஊதியம், வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிகிறது. அதேபோல், தற்போது ஊதியம் குறைக்கப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
Also Read: `இந்தியாவுக்கு மாறும் ஐபோன் தயாரிப்பு!' - சீனாவை கழற்றிவிடும் ஆப்பிள்
நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. பேச்சுவார்த்தையில், சுமுகமான முடிவு ஏற்படாத நிலையில், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 12-ம் தேதி தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகங்களின் மீது கற்களை வீசியும், அங்கிருந்த வாகனங்களைத் தீ வைத்தும் கொளுத்தினர். அதோடு, தொழிற்சாலையில் உள்ள உற்பத்தி இயந்திரங்களையும் அடித்து நொறுக்கினர். இதில், கார்கள், டிவி-க்கள், லேப்டாப் மற்றும் கணினி, தொலைபேசி, உற்பத்தி இயந்திரங்கள், ஆவணங்கள் என பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. சேதத்தின் மதிப்பு 437 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று விஸ்ட்ரான் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விஸ்ட்ரான் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டி.டி.பிரசாந்த் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் 5,000 பேர் உட்பட 7,000 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் அடையாளம் தெரியாதவர்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/violence-in-kolar-iphone-factory-fir-filed-against-7000-wistron-staffs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக