Ad

புதன், 9 டிசம்பர், 2020

அரசின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை... இன்றோடு முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் நேற்று விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மத்திய அரசு.

செல்லமுத்து

நிபந்தனையுடன்கூடிய பேச்சுவார்த்தைக்குத் தயார் என உள்துறை அமித்ஷா அழைப்பு விடுத்தார். ஆனால், நிபந்தனையற்று வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்குங்கள். அதுவரை பேச்சுவார்த்தைக்கு வர நாங்கள் தயாரில்லை என விவசாயிகள் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டக் களத்தின் தற்போதைய நிலைமை குறித்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்துவிடம் பேசினோம்.

''விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்றைய பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று மாலை அரசு தரப்பிலிருந்து 10 நபர்கள் கொண்ட குழுவினர் போராட்டக் களத்துக்கு வந்தனர். விவசாயச் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேளாண் சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்களைச் சொல்லுங்கள் திருத்திக்கொள்ளலாம். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தலாம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்ற முடியும் என்ற ரீதியில் பேசினார்கள்.

விவசாயிகள் போராட்டம்

ஆனால், விவசாயிகள் அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் தெளிவாக இருக்கிறார்கள். இந்நிலையில், இன்று காலை மீண்டும் அரசுப் பிரதிநிதிகள் குழு போராட்டக் களத்துக்கு வர இருக்கிறார்கள். அவர்கள் வந்து சொல்லப்போகும் தகவல் விவசாயிகள் விரும்பும் வகையில் இருந்தால் போராட்டம் வாபஸ் வாங்கப்படும். இல்லையென்றால் இன்னும் போராட்டம் கடுமையாகும்.

இன்று அரசுக் குழுவினர், விவசாயிகள் எதிர்பார்க்கும் முடிவைச் சொல்ல ஓரளவு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இன்று மதியத்துக்குள் போராட்டம் தொடருமா முடிவுக்கு வருமா எனத் தெரிந்துவிடும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/govt-to-hold-talks-with-farmers-and-offers-amendments-in-farm-laws

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக